506. மருவு மன்பொடு வணங்கினர் மணிகண்டர்
                               நல்லூர்த்
 
  திருவி ழாவணி சேவித்துத் திருமடத் தடியார்
பெருகு மின்பமோ டமுதுசெய் திடவருள் பேணி
யுருகு சிந்தையின் மகிழ்ந்துறை நாளிடை
                              யொருநாள்,
5

     (இ-ள்.) வெளிப்படை. பொருந்திய அன்பினோடும்
வணங்கினராய்த், திருநீலகண்டராகிய இறைவன் எழுந்தருளியிருக்கும்
திருநல்லூரின் திருவிழாச் சிறப்பைச் சேவித்துக்கொண்டும்,
திருமடத்திலே அடியார்கள் மேன்மேலும் பெருகும் இன்பத்தோடு
அமுது செய்திட அருள்பேணிக் கொண்டும், உருகிய
மனமுடையவராய் மகிழ்வுடன் வாழ்ந்து உறைகின்ற நாள்களில் ஒருநாள்,

     (வி-ரை.) இந்த ஆறு திருப்பாட்டுக்களும் ஒரு முடிபு
கொண்டன. குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்“
(குடந்தைக் கீழ்க்கோட்டம் - 10) என்றபடி அறுகுண முடைய
பகவன் ஆட்கொள்ள உருவெடுத்து வருதலின் ஆறுபாட்டுக்களாற்
கூறினார் போலும்.

     மருவும் அன்பொடு - அங்ஙனம் திருநல்லூரை வந்து
மருவியதற்குற்ற நிறைந்த அன்பினொடு. வணங்கினர் -
வணங்கினராகி - முற்றெச்சம். வணங்கினர், சேவித்து எனக் கூட்டி
முடிக்க.


     மணிகண்டர் - மணி நீலமணி. அதன் நிறத்திற்காயிற்று.
மணி நிறம் போன்ற நிறமுடைய கழுத்தினை யுடையவர். “நீலமா
மணிகண்டத் தொண்டோளானே“ - தேவாரம். மணி யென்ற
பொதுப்பெயர் இடநோக்கி இங்கு நீலமணி குறித்தது. மணி - அழகு
என்றலுமாம்.

     நல்லூர் மணிகண்டர் திருவிழா என மாற்றுக. அணி -
சிறப்புக்கள். மிக்க சீர்வளம் (505) என்ற இடத்துக் காண்க.
விழாவின் சிறப்புக்களை எண்ணி எண்ணி இன்புற்றுச் சேவித்தல்
திருவிழா அணி சேவித்து எனப் பெற்றது. விழாவையும் அதன்
அணியையும் என்றும்மைத் தொகை யாக்கி யுரைப்பினுமையும்.

     அருள்பேணி - “அவனருளாலே அவன்றாள் வணங்கி“
என்றபடி சிவபெருமானை வணங்குதற்கு அவனருள்
வேண்டப்பெறுதல்போலவே, அவனது அடியார் இன்பமோடமுது
செய்திடுதற்கும் அவனருள் வேண்டப் பெறும். ஆதலின் ‘அருளைப்
பேணி' என்றார். பேணி - பாராட்டி - வந்தித்து.

     உருகு சிந்தையின் - அடியார்க் கமுது செய்விக்கும்படி
திருவருள் கூட்டி வைத்தலின், அவ்வாறு தம்பால் இறைவன் கருணை
கூர்ந்ததை எண்ணி எண்ணி மனமுருகினார் என்க. “அத்தா
வுன்னடியேனை யன்பா லார்த்தாய்“, “எத்தனையும் அரியநீ யெளியை
யானாய், “எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்“,
“இத்தனையு மெம்பரமோ ஐய வையோ! எம்பெருமான் றிருக்கருணை
யிருந்தவாறே“ என்று பலவாறும் எண்ணி யெண்ணி உருகி நிற்றல்.

     மகிழ்ந்து - அருள் பேணி மனமுருகுதலால் உளதாம் உள்ள
நிகழ்ச்சி. உறைநாளில் - இத்திருப்பணிகள் செய்து வாழ்ந்து
வருகின்ற நாள்களிலே. ஒரு - இறைவனடி கூட்டப் பெறுதலால்
ஒப்பற்ற என்பதும் குறிப்பு.

     அடியவர் கேளாமலே அவரவர் குறிப்பறிந்து, உடை, உணவு
உறையுள் என்ற மூன்றும் அளித்து அவர்கள் இன்பமடையப்
பார்த்துத் தாம் இன்புற்று மகிழ்ந்திருந்தனர். இவற்றிற்காகவே
திருமடமுஞ் சமைத்துத் தாமும் திருநல்லுரில் வந்தணைந்தனர்
என்க. 5