510. கண்ட வர்க்குறு காதலின் மனங்கரைந் துருகத்  
  தொண்ட ரன்பெனுந் தூநெறி வெளிப்படுப் பாராய்
தண்டின் மீதிரு கோவண நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்தமர் நீதியார் திருமடங் குறுக,
9

     (இ-ள்.) வெளிப்படை. கண்டவர்கள் மிகுகின்ற ஆசையினாலே
மனம் கரைந்து உருகும்படியாகத், தொண்டருடைய அன்பு என்னும்
தூய நெறியினை வெளிப்படுத்துவாராகித், (தம் கையிலே தாங்கிய)
தண்டிலே இரண்டு கோவணமும், திருநீற்றுப் பையும், தருப்பையுங்
கொண்டு நடந்து வந்து, அமர்நீதியாரது திருமடத்தினை யடையவே,


     
(வி-ரை.) கண்டவர்க்கு உறு காதலின் -
பார்த்தவர்களுக்கெல்லாம் உற்ற காதலினாலே. கண்டவர் -
மேற்சொல்லிய திருக்கோலம் முழுதும் கண்ட
வர்கள்.“கண்ணாரக்
காண்பார்க்கோர் காட்சி யான்காண்“ - திருத்தாண்டகம்
“கண்ணாரக் கண்டும்“ - அற்புதத் திருவந்தாதி.

     வெளிப் படுப்பாராய் - யாவருமறிய வெளிப்படும்படி
செய்வாராய்.

     தண்டின் மீது - பிரமசரியக் கோலத்துக்குரியதாய்த் தாம்
கையிற்றாங்கி வந்த தண்டின் மேலே. தண்டு - பலாசத் தண்டு.

     இரு கோவணம் - மாற்றித் தரித்துக்கொள்ள இரண்டு
கோவணங்கள் தண்டிற்றாங்கி வருவதும். ஒரு வழக்கு. நாயனாற்பாற்
கொடுத்து மறைக்க ஒன்றும், தராசில் இட்டு நிறுக்க மற்றொன்றும்
ஆக இச்சரித நிகழ்ச்சிக்கு இரு கோவணம் வேண்டப் பெறுவதும்
குறிப்பு. (514) பார்க்க.

     நீற்றுப் பை - மான்றோல் முதலியன போலத் திருநீற்றுப்
பை தாங்குதலும், பிரமசாரியின் சிவக்கோலத்துக்குரிய
அடையாளமாம். “பூதிப் பையர்“, “பொக்கணமும் புலித்தோலும்“,
“மனச் செவ்வன்பர் பவமாற்றுந் திருநீற்றுப் பொக்கணமும்“ முதலிய
திருவாக்குக்கள் காண்க. திருநீறுஎப்போதும் பிரமசரிய முதலிய
நால்வகை ஆச்சிரமத்தார்களும் அணியத் தக்கதாம். விபூதி தரித்து
ஓதுதலே மந்திர உச்சாரணத்தின் பலன் தரும் என்பர். பிரமசாரி
எப்போதும் வேதம் ஓதுபவனாதலின் அவன் நெற்றியில் எப்போதும்
திருநீறு விளங்க அணிதல் வேண்டும். இது பற்றியே முன்னர்த்
திருநீற்று முண்டத்தொளித் தழைப்பும்“ என்று தேற்றம் பெறக்
குறித்துக் காட்டினார்.1

     தருப்பை - பிரமசாரிகள் தருப்பைப் பாயில் துயிலுதல்
வேண்டும் என்பது விதி. அதன் பொருட்டும், பவித்திர முடிதல்
முதலிய காரியங்களின் பொருட்டும், தருப்பை தாங்குதல் வழக்கு.

     கொண்டு - தண்டின் மீது முடிந்து கொண்டு. வந்து -
அடிமலர் நிலம் பொலிய நடந்து வந்து; திருமுடிச்சிகை முதல்
அடிமலர் வரை கேசாதிபாதமாக மேற்பாட்டுக்களிற் கண்டவை
அவரது திருமேனிக் கோலங்கள். இங்குக் கூறிய தண்டும் அதன்
மேற்கட்டிய இருகோவணங்களும் திருநீற்றுப்பையும் தருப்பையும்
அவ்வாறன்றி இச்சரித நிகழ்ச்சிக் கருவிகளாக அவர் தாங்கியவை.
ஆதலின் இவற்றை வேறு பிரித்துக் கூறினார். வெளிப்படுப்பாராய்
- கொண்டு
- என்றதும் குறிக்க. 9

     1சாம்பலிற் புரண்டாற் பாவந் தீரும் எனப் புறமதமாம்
கிறித்துவ நூலாகிய விவிலிய நூலிலுங் கூறும்.