511. வடிவு காண்டலு மனத்தினு முகமிக மலர்ந்தது,  
  கடிது வந்தெதிர் வணங்கி, “யிம் மடத்தினிற்
                                 காணும்
படியி லாதநீ ரணையமுன் பயிறவ மென்னா
வடிய னேன்செய்த?“ தென்றன ரமர்நீதி யன்பர்.
10

     (இ-ள்.) வெளிப்படை. அவரது திருவடிவத்தைக் கண்டவுடனே,
உள்ளே மலர்ந்த மனத்தைவிட முகமானது மிகவும் மலர்ச்சியடைந்து,
விரைந்து எதிரே வந்து வணங்கி, “இந்த மடத்தினிலே முன்பு
காணும்படி யில்லாத நீர் இன்று அடியேன் வெளிப்படக் காணுமாறு
வந்தணைவதற்காக முன்னே அடியேன் பயில்தவம் செய்தது
என்னோ?“ என்று அமர்நீதி யன்பர் சொன்னார்.


     (வி-ரை.) வடிவு - (பிரமசரிய நிலை இவரையன்றி
யில்லையாதலின்) மேற்சொல்லிய நிரம்பிய இலக்கணங்களுடைய
பிரமசாரியின் வடிவம்.

     காண்டலும்
- தரிசித்தவுடனே. புறக்கண்ணாற்
காணக்கூடாதவராயினும் இங்குக்காணக்கூடியபடி வந்ததனாலே
காண்டலும். உருவமில்லாதான் உருவங்கொண்டு வந்தமையால்
அவ்வுருவங் காண்டலும் என்ற கருத்துமாம். “கண்டவர்க்குறு
காதலின் மனங்கரைந் துருக“ (510)க் கொண்டு வந்த,
“உருவினாலன்றியே யுருவு செய்த“, திருவடிவம் காண்டலும் என
அருமை பெறக் காட்டியவாறு. இதுவே மனத்திற் பெருமகிழ்ச்சிக்கும்,
அதனான், மிக முகமலர்ச்சிக்கும் காரணமாயினதும் குறித்தபடி.

     மனத்தினும் மிக முகம் மலர்ந்து காண்டலும் என்றபடி
காண்பது முகத்திலிருக்கும் கண்களாலேயாயினும், அவை தாமாகக்
காண்பதில்லை. கண்கள் உட்கரணங்களுக்கு அறிவிக்க, அவை
ஆன்மபோதத்திற்கும், அது ஆன்மாவுக்கும் முறையே அறிவிக்க,
இறைவன் உடனிருந்து காட்ட, இம்முறையிலே ஆன்மா அறியவே
பின்னர் மனம் மகிழ்ந்து மலரும்; அதன்பின் அது காரணமாக முகம்
மலரும், முன் மலர்தலின் மனத்தை முன்னர்க் கூறினார்.


     மனத்தினும்
- மனம் மலர்தலைக் காட்டிலும். உம்மை உயர்வு
சிறப்பு. மிக - மலரும் செயலில் மிகும்படியாக. முகம் தன்னை
மலரச்செய்த மனத்தினைவிடத் தான் மிக்கிருக்கவேண்டுமென்று
மலர்ந்தது என்க. “அகத்தின் அழகு முகத்திற் றெரியும்“ என்பது
பழமொழி.

     கடிது எதிர் வந்து வணங்கி என்று மாற்றுக. இவை
மனமகிழ்ந்து உபசாரத்தின் குறிகள். மனத்தினும் - வணங்கி
என்றனர்
- என்றவற்றால் முறையே மனம்,மெய், மொழியாகிய
முக்கரணங்களாலும் இறைவனாகிய பிரமசாரியை நாயனார்
வழிபட்டமை கூறப்பெற்றது காண்க.

     இம்மடத்தினில்.....செய்தது - இம்மடத்தினிற்
காணும்படியிலாத நீர் என்றது இதுவரை உம்மைப்போன்றார்
ஒருவரும் இம்மடத்தினில் வரக்கண்டதில்லை என்றதாம். தேவரீர்
எழுந்தருளும் பெருமைக்கு இம்மடம் தகுதியுள்ளதன்று என்றதுமாம்.
இதுவரை அடியார்களுட்கலந்து நின்று வருதலேயன்றி இவ்வாறு
வெளியாகக் காணும்படி வரவில்லை என்ற உண்மையின் குறிப்புமாம்.
443 - 444 உரை பார்க்க. அணைய - அடியார்களுள்ளே கலந்து
வந்தது போய்,வெளிப்பட்டு அணைய. அணைய - அணைவதற்குக்
காரணமாக. பயில் தவம் - பயிலத்தக்க - இதற்கென்று பயிலுமாறு
நூல்களில் விதித்த - தவம். செய்த பயில் தவம் என்னோ? என
மாற்றிக் கூட்டுக. 408 காண்க. முன்செய்த நற்றவங்
காரணமாகவல்லாது பெரியவர் வரும் பேறு கிடைக்காதென்ற நியதி
குறித்தது.

     மிகமுக - என்பதும் பாடம். 10