513. என்று தம்பிரா னருள்செய “வித்திரு மடத்தே  
  நன்று நான்மறை நற்றவ ரமுதுசெய் தருளத்
துன்று வேதியர் தூய்மையி னமைப்பது முளதா
லின்று நீருமிங் கமுதுசெய் தருளு“ மென்
                               றிறைஞ்ச,
12

     (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு தமது பெருமானாகிய
இறைவர் அருளிச்செய்ய, “இந்தத் திருமடத்திலே நன்றாகப் பெரிய
நான்மறைத் தவசீலர்கள் அமுது செய்தருளத் தக்கபடி, நிறைந்த
வேதியர்கள் தூயதாக அமைப்பதும் உண்டு; ஆதலால் இன்று நீரும்
இங்கு அமுது செய்தருளல் வேண்டும்“ என்று சொல்லி நாயனார்
அவரை வணங்க,

     (வி-ரை.) திருமடம் - தாமே சமைத்த மடமாயினும்
அடியார்கள் தங்கி அமுது செய்தும், கோவண முதலியன பெற்றும்
ஒழுகிய புண்ணியம் விளைதற்கிடமாதலின் திரு என்ற அடைமொழி
தந்து சிறப்பித்தார். (505) பார்க்க.

     நன்று - நன்றாக. நன்று அமுது செய்தருள எனக் கூட்டுக.
நன்று அமைப்பதும் எனக் கூட்டி யுரைப்பதுமாம். நன்று நல்ல எனப்
பொருள்கொண்டு மறைக்கு இயற்கை யடைமொழியாக்கி யுரைத்தலுமொன்று.

     நான்மறைப் பெருந்தவர் - மறையவர் குலத்து வந்த
பெருந்தவஞ் செய்யும் முனிவர்கள். இவரது பிரமசரிய வடிவம் இவர்
மறைவழி நோற்கும் பெருந்தவ முடையார் எனத் தெரிவித்ததாதலின்
உம்மைப் போலப் பெருந்தவ முனிவரும் அமுது செய்ய என்றார்.
வரும் பாட்டிலும் “அம் மறையவர்“ என்றதும் காண்க.

     அமுது செய்தருள - அமுது செய்ய. அமுது செய்தலே
அருளிப்பாடு ஆதலின் செய்தருள என்றார். அமுது செய்து அதன்
பயனாக அருளினைச் செய்ய என்று இச்சரிதப் பின் நிகழ்ச்சி நோக்கி
உரைப்பினுமாம்.

     துன்று வேதியர் - அதற்கென்று பொருந்திய வேதியர்கள்.
இவர்களும் அக்குலத்து வந்தார்களாயினும் அமுதமைக்கும் தொழில்
பூண்டார் என்பது. இற்றை நாள் வேதியர் பலர் இத்தொழில்
செய்தலுங் காண்க. (திருஞான - புரா - 567, ஏயர்கோன் - புரா -
175 பார்க்க.)

     தூய்மையி னமைப்பதும் - மறைப் பெருந்தவர்களுக்கு
அவர்களது தவத்திற்கும் சீலத்துக்கும் ஏற்றவாறு தூயதாக ஆக்குவது
என்றபடி. உம்மை பிற அடியவர்க்கு அமைப்பதின் வேறாக என்று
இறந்தது தழுவிய எச்சவும்மை. எனவே மறைப் பெருந்தவர்க்கும்
பிறர்க்கும் வெவ்வேறாக அமுது திருமடத்தில் அமைக்கும் நியதி
யுண்டென்பது பெறப்படுகின்றது. இற்றை நாள்வரை இந்நாட்டில்
அவ்வழக்குண்மையும் காணப்படும்.

     நீரும் - “இம்மடத்தினிற் காணும்படி யில்லாத“ (511) நீரும்
என உயர்வு சிறப்புத் தோன்ற நின்ற எச்ச உம்மை. அமுது
வேண்டாத - அமுதுண்ணாத - நீரும் அமுது செய்யும் என்ற
குறிப்புமாம்.

     அமுது செய்தருளும் - தேவர்கள் அமுதைத் தமக்கென்று
வைத்து உமக்கு நஞ்சு ஊட்டினார்கள்; அடியேன் அவ்வாறன்றி
அமுதத்தை உமக்கு ஊட்ட அமைகின்றேன் என்ற குறிப்புமாம்.
(கண்ணப்பர் - புராணம் - 32 பார்க்க).

     என்று இறைஞ்ச - என்று சொல்லிப் பின்னர்க் குறையிரந்து
வணங்க.

     பெருந்தவர்
- என்பதும் பாடம். 12