516. கொடுத்த கோவணங் கைக்கொண்டு கோதிலா
                                 வன்பர்
 
  “கடுப்பி லிங்கெழுந் தருளுநீர் குளித்“தெனக்
                                 கங்கை
மடுத்த தும்பிய வளர்சடை மறைத்தவம் மறையோ
ரடுத்த தெண்டிரைப் பொன்னிநீ ராடவென்
                               றகன்றார்.

15

     (இ-ள்.) வெளிப்படை. (மறையவர்) கொடுத்த கோவணத்தை
வாங்கிக்கொண்டு குற்றமற்ற அன்பராகிய நாயனார் “நீர் குளித்து
விரைவில் இங்கெழுந்தருளுக“ என்று சொல்ல, மடுவாகக்
கங்கையாறு தங்கிய வளர்சடையினை மறைத்தவராகிய அந்த
மறையவர் அடுத்துள்ளதெள்ளிய அலைகளையுடைய காவிரி நீர்
ஆட என்று அகன்றனர்.

     (வி-ரை.) கைக் கொண்டு - கையில் வாங்கிக் கொண்டு.
இவ்வாறு இவர் கைக்கொண்ட செயலிலே பின்னர், “கோவணங்
கொண்டதற் கெதிர்வே றொன்று கொள்கென“ (526); “கோவணங்
கொள்வது துணிந்தோ?“(527) என்று பல வாறும் இறைவன் இவரைக்
கூறுகிறபடி எவ்விதக் குற்றமுமில்லை என்று குறிப்பார்போன்று
இங்குக் “கைக்கொண்டு கோதிலா அன்பர்“ என்று சேர்த்துக்
கூறினார்.

     கடுப்பில் - விரைவிலே. இது அவரை அமுது ஊட்டுவிப்பதில்
நாயனார்க்கிருந்த ஆர்வ மிகுதி காட்டிற்று.

     மடுக் கங்கை - கங்கை ஆழமாகிய நீர்நிலை என்க.
“நிறைகயத் தாழ்நீர் மடுவிற் றவளை குதிப்பினும், யானைநிழல்
காண்பரிது“ என்றது நீதி நூல். உலகத்தைத் தன்னுள் மூழ்குவிக்கு
மளவிற் பெருகுங் கங்கையானது ஒரு மடுவினளவில் நின்றது
ததும்பிய
என்க. “நிலைதளர ஆயிரமா முகத்தி னோடும்,
பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு“ (பலவகைத்
திருத்தாண்டகம் - 1), “பகீரதற்காய் வரனோர் வேண்டப் பரந்திழியும்
புனற்கங்கை பனிபோ லாகச் செறுத்தானை“ (திருவீழிமிழலை - 10)
என்பன காண்க.

     ததும்பிய - மடுவின் அளவில் அமைந்து சடையினுள்
நிறைந்ததாயினும் நிரம்பி வழிவது போல ஆறாக வழிந்து உலகில்
உபகரிக்கும். ததும்பிய - ததும்புதற்கிடமாகிய. இவர் நீராடி
வருவேன் என்பதும், நாயனார் அவ்வாறே குளித்து வருக என்பதும்
கங்கையை மறைத்த செயலினால் உளவாயினவாதலின் இங்கு
அதனைக் கூறினார்.

     வளர் சடை
- வளருந் தன்மையுடைய சடை. அடியவர்கள்
தமது மனத்தினுள்ளே அதன் உபகாரத்தன்மை நோக்கிப் பாராட்டி
எப்போதும் வாழ்த்த வளர்ந்துகொண்டிருக்கும் சடை என்றலுமாம்.
(தன்னிடத்துத் தங்கித் ததும்பிய கங்கையினால் உலகத்தை - தன்பாற்
றங்கிய குறைப் பிறையை - நிறைவாக்கி) வளர்க்கின்ற என்றலும்
பொருந்தும்.

     மறைத்த அம் மறையோர் - “செய்ய புன்சடை கரந்ததோர்
திருமுடிச் சிகையும்“ (508) என இதனையே முன்னருங் குறித்தது
காண்க. நீராடச் செல்லுங்கால், ‘மழைவரின் உதவும் பொருட்டுக்
கோவணத்தை வைத்துக் காத்துக் கொடு' என்ற தினின்றே இச்சரித
நிகழ்ச்சி தொடங்குதலின் அச்சிறப்பு நோக்கிக் கங்கை கரந்த
சடையினைப் பின்னருங் கூறினார். மறைத்ததனால் மறையோர்
என்றும், சடை மறைத்தார் கோவணத்தையும் மறைத்தார் என்றும்
குறிப்புகள் பெற நின்றது. காண்க. மறைத்த - கள்ளமாகிய - ஒளித்த
- தன்மை யிவரிடத்து நின்றதேயன்றி அன்பரிடத்தில் ஒரு சிறிதும்
இல்லை என்று குறிப்பார் அன்பரைக் கோதிலா அன்பர் என்ற
ஆசிரியர், இவரை, மறைத்த மறையோர் என்றார். பின்னருங்
கோவணக் கள்வர்“ (520) என்பதுங் காண்க.

     அடுத்த - நகருக்குப் பக்கத்திலே உள்ள. நீராடற்கடுத்த -
பொருந்தியதாகிய என்றும், மறைத்த அந்தக் கங்கை நீரே வந்து
பொருந்திய - அடுத்த - என்றும் கூறலுமாம். யாவரும் வந்து
படிந்தாடிச் சுத்தம்பெறும் கங்கையை மறைத்து
வந்தாராதலின்
அதற்கடுத்தபடியில் உயர்ந்த காவிரியாட என்றுரைப்பதுமாம். காவிரி
தன்னுட் படிந்தாடினோர்க்குத் துன்பம் போக்கி இன்பந் தருதலிற்
சிறந்ததாம். அதுபற்றியே தெண் - திரை - என்ற
அடைமொழிகளாலுஞ் சிறப்பித்தார். இத்தகைய சிறப்புடைய
காவிரியை அதன் பெருமை யறியாது இந்நாள் மாக்கள்
பலவகையாலுந் தங்களுடைய விதி தவறிய தீ நடக்கையினாலே
அசுத்தப்படுத்தி இது நீராடற் கடுத்ததன்று - குளிக்கக்கூடாது -
இந்நீர் குடிக்கக்கூடாது என்று விளம்பரமுஞ் செய்யலாயினர்! என்ன
கொடுமை! காவிரியின் சிறப்பு - 52 முதல் 57 வரை
திருப்பாட்டுக்களிற் காண்க.

     நீர் ஆட என்று
- நீராட என்று காரணங் காட்டுதலே
யன்றி உண்மையில் நீராடப் போக வன்று என்பது குறிப்பு. நீர்
ஆடாமலே நனைந்து வந்தணைந்தார் (518) என்று காண்க. ஆயின்
இவர் விரும்பி ஆடுவது அன்பர்களது அன்பாகிய தூய நீரேயாம்
என்பது (520) அடுத்துக் கூறப்பெற்றதும் காண்க.

     அகன்றார் - அங்கு வெளிப்பட்டு நின்ற தோற்றத்தை
மறைத்தனர். எவ்விடத்தினின்றும் அகல்வது எங்கும் நிறைந்த
இறைவர்க்குக் கூடாதென்க. “நீங்கினாரெப்பொருளு நீங்காத
நிலைமையினார்“ (ஏயர்கோன் - புரா - 180) முதலிய திருவாக்குக்கள்
காண்க.

     ஆடுதற் ககன்றார் - என்பதும் பாடம். 15