519. கதிரி ளம்பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதின்  
  முதிரு மன்புடைத் தொணடர்தா முறைமையின்
                                  முன்னே
யதிக நன்மையி னறுசுவைத் திருவமு தாக்கி
யெதிரெ ழுந்துசென் றிறைஞ்சிட நிறைந்தநூன்
                                   மார்பர்,

18

     (இ-ள்.) வெளிப்படை. ஒளியுடைய இளம்பிறையை மாலையாகச்
சூடிய இறைவர் சேர்ந்தபோது முதிரும் அன்புடைய தொண்டராகிய
நாயனார், தாம், அவர் வருவதற்கு முன்னே முறையின்படி அதிக
நன்மையிலே ஆறு சுவையும் பொருந்தத் திருவமுது ஆக்குவித்து,
அவர் வந்தணைந்ததும் எழுந்து அவரை எதிர்கொண்டு போய்
வணங்கி நிற்க, நிறைந்த நூலணிந்த மார்பினையுடைய அவர்.


     (வி-ரை.) கதிர் இளம் பிறைக் கண்ணியர் - முன் “பிறைத்
தளிர்ச் சடைப் பெருந்தகை“ (507) என்றதுங் காண்க. “கோவணப்
பெருமை முன் காட்டி அருள் கொடுப்பான்“ என்று கூறியபடி, முன்
பெருமைகாட்டவும் பின் அருள் கொடுக்கவும் தொடங்கிய சமயம்
இதுவாதலின், இங்கும் அதனையே அனுவதித்துக் கதிர் இளம்
பிறைக்கண்ணியர்
எனச் சிறப்பித்துக் கூறினார். முன்னர்த்
தளிராயிருந்த பிறை, இப்போது அருள் விளக்கம் வருங்
காலமாதலின் கதிர்ப்பிறையாகிய முதிர்ந்தமையும் குறிக்க. தளிர்
பின்னர்க் கதிர் விடுதல் இயல்பாம். அன்பு முதிரப் பிறையும்
முதிர்ந்து கதிரீன்றது என்று குறிக்க முதிருமன்புடைத் தொண்டனார்
என்ற நயமுங் காண்க. பிறைக் கண்ணி - அருளினைக் குறிக்கும்.
திருவையாற்றிற் கைலாயக் காட்சி கண்டபோது அப்பர்சுவாமிகள்
அருளிய “மாதர் பிறைக் கண்ணியானை“ என்ற பதிகத்திற்
பாசுரந்தோறும் இதனைக் குறித்தல் காண்க. தமது பாதத்தினை
வந்தடைந்த பிறையைக் காத்து முடிமேல் ஏற்றி உலகுக்குக் கருணை
விளக்கம் செய்தலின் அதுபோலவே, முன் அன்பு கொண்டு “சிந்தை
- செய்வது சிவன் கழல் அல்லதொன் றில்லார்“ (504) என்றபடி
தமது திருவடியிற் பணிதலே கடன்பூண்டு கிடந்த அன்பரை நீடருள்
கொடுத்துச் “சழக்கினின்றேற்றித்“ (542) துலையே விமானமாகி
மேற்செல்லச் சிவபுரியணைவிக்கும் (549) செயல் தொடங்கிய
இதுபோழ்து அருளடையாளமாகிய கதிர் இளம் பிறைக்கண்ணி
யுடையோனாக இறைவனைச் சுவைபெற அறிவித்தார் ஆசிரியர்.

“சுற்றமொடு பற்றவை துயக்கற வறுத்துக்
குற்றமில் குணத்தினொடு கூடுமடி யார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்
கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே“
      - பண் - இந்தளம் - திருவிராகம் - 1

என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரக் கருத்தினை இங்கு
வைத்துக் காண்க.

     தாம் - ஆக்கி.....தாம்
- தாமே முன்னின்று. அமுது
அமைக்கத துன்றும் வேதியர் வழக்கம்போல் அமைப்பர் என்று
விட்டு விடாது, தாமே ஆவனவற்றைக் கவனித்து. தாம் -
அசையென் றொதுக்குவாரு முளர்.

     முறைமையின்
- எந்த முறைமையிற் கண்காணித்தல் கூடுமோ
அந்த முறைமையிலே - அமுது அமைக்கும் பாகநூல் முறைப்படி
என்றுரைப்பினுமாம். முன்னே - பிரமசாரியார் நீராடித் திரும்பி வரும்
முன்பே. அதிக நன்மையின் - என்றும் அமைக்கும்படியினும்
மேலாக அதிக நலம் பெறுவதாக. உண்மையில் இன்று அமைத்த
திருவமுதினை அவர்க்கென்று நாயனார் எண்ணிய
எண்ணத்தினுள்ளே நின்று இறைவர் ஏற்று, இவர்க்கு
நன்மைகளிலெல்லாம் மிக்கதாகிய தமதுலகம் பெறுவித்தலின், முன்
அமைத்த அமுதுகளிலெல்லாம் இஃது அதிக நன்மையின்
அமைத்ததேயாயினமையும் காண்க. “வெவ்வேறியல்பினின்“ - கண்
- புரா
- 162. அறுசுவைத் திருவமுது (443).

     ஆக்கி - ஆக்குவித்து. பிறவினை விகுதி தொக்கது.
“குடியொன்றி“ யென்ற குறளில் போல.

     இறைஞ்சிட - “கடுப்பில் இங்கெழுந்தருளும் நீர் குளித்து“
(516) எனத் தாம் வேண்டியபடியே எழுந்தருளிய கருணைக்காக
வணங்கினார்.


     நூல் நிறைந்த மார்பர் என மாற்றுக. “மெய்யின் வெண்புரி
நூலுடன் விளங்கும் மான்றோலும்“ (508) விளங்கியபடியால் இவ்வாறு
கூறினார். நிறைதல் - விதிப்படி உள்ள இலக்கணங்களால் நிறைவு
பெறுதல். 18