520. தொண்ட ரன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி  
  “மண்டு தண்புனல் மூழ்கிய வீரத்தை மாற்றத்
தண்டின் மேலுள தீரநான் றந்தகோ வணத்தைக்
கொண்டு வாரு“மென் றுரைத்தனர் கோவணக்
                                கள்வார்.
19

     (இ-ள்.) வெளிப்படை. தொண்டருடைய அன்பு என்னும் தூய
நீரினை ஆட விரும்பி, அவரை நோக்கிச், “செறிந்த குளிர்ந்த நீரிலே
முழுகப் பெற்றதனால் ஈரமுடைய கோவணத்தை மாற்றுதற்குத்,
தண்டின் மேலுள்ளது ஈரமாகிய கோவணமாதலின், நான் தந்த
கோவணத்தைக் கொண்டு வருவீராக!“ என்றுரைத்தார் கோவணக்
கள்வர்.

     (வி-ரை.) தொண்டர் அன்பு எனும் தூயநீர் ஆடுதல்
வேண்டி
- மிகப் புனிதம் செய்வதாகிய காவிரி நீரோ, அன்றிக்
கங்கை நீரோ ஆடி. வான்நீரினும் நனைந்த அவர் அவை பழுதாம்
என்றும், தூய்மை போதா என்றும், எண்ணியவர் போல, அவற்றினும்
மிக்க புனிதமாகிய தொண்டர் அன்பு என்னும் நீரினில் ஆட
விரும்பிப் பின்வருமாறு செயல் செய்தனர் என்க.

“பவனன் பணிசெய வருணன் புனல்கொடு பணிமா றவுமவை
                                       பழுதாமென்
றெவருந் தொழுதெழுமடியார் திருவல கிடுவார் குளிர்புனல்
                                 விடுவார்கள் ”(163)

என்ற திருநாவுக்கரசு நாயனார் புராணமும் இங்கு நினைவு கூர்க.
“புண்ணியக் கங்கைநீரிற் புனிதமாந் திருவாய் நீ“ரினை
“விளைத்தவன் புமிழ்வார் போல விமலனார் முடிமேல் விட்ட“
கண்ணப்ப நாயனார் செய்தியை இங்கு நினைவு கூர்க. “நேயமே
தயிர் நெய் பாலா நிறையநீ ரமைய வாட்டி“ - (திருநேரிசை),
“அன்பர் வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை“ - (திருவிசைப்பா)
முதலியவை காண்க.

     அன்பெனும் தூயநீர் ஆடுதல்
- அன்பு வெளிப்படக் கண்டு
மகிழ்ந்து ஏற்று அருள் கொடுத்தல். வேண்டி - வேண்டுதலும்
வேண்டாமையும் இல்லானாகிய இறைவன் வேண்டுவது அன்பு
ஒன்றேயாம் என்க. வேண்டி - உரைத்தனர் என முடிக்க.
உரைத்ததன் பயனாகத் தூய அன்பின் வெளிப்பாடு நிகழ்ந்ததென்க.

     தூய நீராடுதல் - நீரானது இறைவனது அங்கத்திற்
றோய்தலாலே பரிசுத்தமடைவதாம். “செழுநீர்த் திரளைச்சென் றாடி
னேனே“, “சென்றாடுந் தீர்த்தங்களானார் தாமே“ என்பன சுருதி.
அவனுடைய தோய்தலில்லாத நீர் பரிசுத்தத்தைச் செய்யா. அவை
வெறும் பௌதிகமா யெண்ணத்தக்கன. “கங்கை யாடி லென் காவிரி
யாடிலென்? ஒங்கு மாகட லோதநீ ராடிலென்?“ என இங்கு இவர்
நனைந்த நீர்களைப்பற்றியே அப்பர் சுவாமிகள் அருளினர். (கடல்
நீரே மழை நீராம்). மழையில் நனைந்த அபரிசுத்தத்தினை மாற்ற
அன்பெனுந் தூய நீராடுதல் வேண்டினார் போன்றனர் என்றதும்
குறிப்பாம். இறைவனது திருவிழாப் புறப் பாடுகளில் மழையில்
நனைய நேரிட்டால் புண்ணியாகம் செய்து அபிடேகித்துப் பவித்திரம்
செய்யும் ஆகம விதிகளும் காண்க.

     மண்டு தண்புனல் - மண்டுபுனல், தண்புனல் எனத்
தனித்தனிப் பிரித்துக் கூட்டுக. மண்டுபுனல் மூழ்குதல் காவிரி
(கங்கை?) யாடுதலையும், தண்புனல் மூழ்குதல் வான்மழை நீரில்
நனைதலையும் குறிக்கும்.

     உளது ஈரம் - உள்ளது ஈரமாகிய கோவணம்; ஆதலின் அது
ஈரத்தை மாற்ற வலியிலது என்றது குறிப்பு. ஈரம் - ஈரமாகிய
கோவணம். ஆகுபெயர்.

     கோவணக் கள்வர் - திருவுருத்திரம் இறைவனைக் கள்வனே
உனக்கு நமஸ்காரம் - கள்வர் தலைவனே உனக்கு நமஸ்காரம் -
என்று பேசுகின்றது. “என் உள்ளங் கவர் கள்வன்“, “தாவியவ
னுடனிருந்துங் காணாத தற்பரன்“ என்பன ஆளுடைய பிள்ளையார்
திருவாக்குக்கள். “ஒளிக்குஞ் சோரனைக் கண்டன, மார்மினார்மி
னாண்மலர்ப் பிணையலிற், றாடளை யிடுமின், சுற்றுமின சூழ்மின்
றொடர் மின் விடேன்மின், பற்றுமி னென்றவர் பற்றுமுற்
றொளித்தும்“ - திருவாசகம் - திருவண்டப்பகுதி.

     இங்குக் கோவணம் இவர் பொருளேயாயினும் நாயனாரிடத்து
ஒப்புவித்த பொருளாயினமையின் அவரை அறியாது போக்கி அவரைப் பிழையுட்படுத்தியது கள்ளமாம். ஆதலின் கள்வர்
என்றார். கோவணக் கள்வர் - கோவணத்தின்மூலம் கள்ளச்செயல்
செய்தவர்.


     கண்ணியர் கண்ணியபொழுதில் - தொண்டர் - முன்னே -
ஆக்கி - இறைஞ்சிட, - மார்பர் - கள்வர் - வேண்டி -
“கோவணத்தைக் கொண்டு வாரும்“ என்றுரைத்தனர் என
இவ்விரண்டு பாட்டுக்களையும் தொடர்ந்துரைத்துக் கொள்க.

     மேலது மீரம்
- என்பதும் பாடம். 19