524. அத்தர் முன்புசென் “றடிக!ணீர் தந்தகோ
                               வணத்தை
 
  வைத்தி டத்துநான் கண்டிலன்; மற்றுமோரிடத்தி
லுய்த்தொ ளித்தனரில்லை; யஃதொழிந்தவா
                                 றறியே;
னித்த கைத்தவே றதிசயங் கண்டிலே“ னென்று,

23

     (இ-ள்.) வெளிப்படை. அத்தர் முன்பு சென்று, “அடிகளே! நீர்
தந்த கோவணத்தைச் சேமத்தில் வைத்த இடத்தில் நான்
கண்டிலேன்; அதனை வேறிடத்தில் வைத்து ஒளித்தார் பிறருமில்லை;
அஃது மறைந்துபோயினவாறு அறிகிலேன்; இத்தன்மைத்தாகிய
அதிசயம் வேறு நான் கண்டதில்லை“ என்று கூறி.

     (வி-ரை.) அடிகள்! - பெரியீர் - அண்மைவிளி.
“இம்மடத்தினிற் காணும் படியிலாத நீர்“ (511), “இன்று நீரும்
இங்கமுது செய்தருளும்“ (513), “கடுப்பிலிங்கெழுந் தருளுநீர்“ (516)
என முன்னர் விளித்த நாயனார் இங்கு “அடிகள்!“ என்றது தமது
பிழைகளைப் பொறுக்கும் பொருட்டு அதற்குத் தக்க
பெருந்தன்மையினை உடையாராக வேதியரை விளித்ததாம்.
“என்பிழை பொறுப்பீர்“ என வரும் பாட்டில் முடித்ததும், “சிறிய
என்பெரும் பிழைபொறுத் தருள்செய்வீர்“ (528) என்றதுங் காண்க.
“பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர்.
கடமை போற்றி“
(திருச்சதகம் - 66) என்று மணிவாசகனார் பெரியவர் கடமைக்கு
வரையறை கூறியருளியது காண்க.

     நான் வைத்திடம் - வைத்த இடம் என்றது வைத்திடம்
எனப் பெயரெச்ச ஈறுதொக்கு நின்றது. நானே சிந்தித்துச் சேமத்தில்
வைத்த அந்த இடம். நான் வைத்த என்றும், நான் கண்டிலன்
என்றும் இருவழியும் கூட்டுக.

     மற்றும்
- நான் வைத்த சேமமாகிய இடமன்றி வேறு.
உய்த்து
- புகுத்தி, நானே வைத்த இடத்தில் அஃது
காணப்படவில்லை; வேறிடத்தில் அதனை ஒளித்து வைப்பார்
பிறருமில்லை; அதுவோ அசேதனமாதலின் தானே போதலுமியலாது;
ஆதலின் அஃதொழிந்தபடி யின்னதென்றறியேன் என்பதாம்.

     வேறு அதிசயம் கண்டிலேன் - இவ்வதிசயம் கண்டேன்;
இஃதன்றி, இங்குக் கண்டதுபோன்ற வேறோர் அதிசயம்
கண்டேனில்லை. அதிசயம் - அற்புதம் என்பனவற்றைப்பற்றி முன்னர்
உரைத்தவை காண்க.

     நானொளித்தவாறு - அஃதொளித்தவாறு - என்பனவும்
பாடங்கள். 23