525. “வேறு நல்லதோர் கோவணம் விரும்பிமுன்
                          கொணர்ந்தேன்;
 
  கீறு கோவண மன்று;நெய் தமைத்தது; கிளர்கொ
ணீறு சாத்திய நெற்றியீர்! மற்றது களைந்து
மாறு சாத்தியென் பிழைபொறுப் பீ“ரென வணங்க,
24

     (இ-ள்.) வெளிப்படை. “வேறு நல்ல கோவணத்தை, ஈரம்
மாற்றி நீர் தரித்துக்கொள்ள வேண்டுமென்ற விருப்பத்துடன் முன்
கொணர்ந்துள்ளேன்; அது கிழித்த கோவணமன்று; கோவணமாகவே
நெய்ததாம். அசுத்தங்களையெல்லாம் கிளரச் செய்து போக்கித்
தனதாக்கிக் கொள்ளும் திருநீற்றினைச் சாத்திய நெற்றியுடையீரே!
உமது ஈரமாகிய மற்றைக் கோவணத்தைக் களைந்து, அதற்கு
மாற்றாக இதனைச் சாத்திக்கொண்டு, எனது பிழையினைப்
பொறுத்தருள்க!“ என்று சொல்லி வணங்க,

     (வி-ரை.) வேறு நல்ல - அடிகள் தந்ததுபோல நல்லதன்று;
ஆயினும் அதனைத் தவிர்த்து வேறுள்ள எல்லாவற்றினும் நல்லது.
ஓர் கோவணம்
- நல்ல தன்மையில் ஒப்பற்றது. விரும்பி - நீர்
ஈரம் மாற்றி அணிந்து கொள்ளவேண்டு மென்று விரும்பி, அவ்வாறு
விரும்பிய காரணத்தால். முன் - முன்னர். நீர் தந்த கோவணம்
போயின நெறியின் அதைத் தேடி அடையும் முயற்சி முற்று
முன்னர்.
அதனை விடுத்து முதலாவதாக. பின்னர்ச் செய்வன பல
வுள்ளன என்ற குறிப்புமாம்.

     கீறு கோவணம் அன்று - நெய்து அமைத்தது - “யாணர்
வெண்கிழிக் கோவணம்“ (512), “பொங்கு வெண்கிழிக் கோவணம்“
(522) என்று முன்னர்க்குறித்தபடி அக்கோவணங்கள் கிழித்தெடுத்த
வகையினைச் சேர்ந்தவை. இஃது அவ்வாறன்றித்
தனிக்கோவணமாகவே நெய்து பெற்றது என்பதாம்.
கிழிகோவணத்துக்கு நெய்த கோவணம் உயர்வுடைத்து என்ற கருத்து.

     கிளர் கொள் நீறு சாத்திய நெற்றியீர் - கிளரச்செய்து
தன்னதாக்கிக்கொண்ட நீற்றினைச் சாத்திய நெற்றியுடையீர்! கிளர்நீறு
- கொள்நீறு எனத் தனிப் பிரித்துக் கூட்டுக. இங்குக் கிளரச்
செய்தல் ஆன்மாக்களது மலங்களை யெரித்தல். கொள்ளுதல் -
அழியாத் தன்மைசெய்து தன் மயமாக்கிக் கொள்ளுதல். “அருத்தம
தாவதுநீறு; அவல மறுப்பது நீறு“ என்ற தமிழ் வேதம் காண்க.

     மற்றது - தேவரீரிடம் உள்ள ஈரக்கோவணத்தை. இரண்டாம்
வேற்றுமைத் தொகை.

     மாறுசாத்தி - ஈரத்திற்கு மாற்றான காய்ந்த கோவணத்தைத்
தரித்துக் கொண்டு.

     என்பிழை - இங்கு நாயனார் ஏதும் பிழை செய்யாவிடினும்
தாம் பிழை செய்ததாகவே உட்கொண்டு என் பிழை பொறுப்பீர்
என்றார். பிழை - புத்தி பூர்வம், அபுத்தி பூர்வம் என
இருவகைப்படும். இங்கு அது எவ்வகைத்தேயாயினும், தமக்கு உள்ள
உத்தரவாதத் தன்மையில் வேறுபடுமேயன்றித், தம்மால் பிழை
செய்யப்பட்டார்க்கு ஒன்று போலவே யிடர்செய்யு மாதலின் தாம்
ஒன்றும் அறியக்கூடாதபடி நிகழ்ந்த இதனைப் பிழையென்று
கூறினார். அவ்விடர் சிவனடியாராகிய ஒரு தவசியார்பாற்
செய்யப்பட்டதென்றபோது பெரும் பிழையுமாம் என்று நாயனார்
கருதினார். “சிறிய என் பெரும் பிழை“ என்றும், “அடியேன் அறிய
வந்ததொன் றன்று “என்றும் (528) பின்னர் நாயனார் கூறுவது காண்க.

     வணங்க - உடலை வளைத்து (குனிந்து) இறைஞ்ச.
வணங்குதல் - வளைத்தல் - இழிதல். முன்னர் இத்தவசியாரே
புகழ்ந்துரைத்தபடி, அடியார்க்குக் கோவணங் கொடுத்த பெருமையின்
உயர்வைப் பெரியவருடைய கோவணம் போக்கிய சிறுமை
தாழ்த்திவிட்டது. ஆதலின் வணங்க என்றார். 24