53.
|
சையமால்
வரைபயில் தலைமை சான்றது; |
|
|
செய்யபூ
மகட்குநற் செவிலி போன்றது;
வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்
உய்யவே சுரந்தளித் தூட்டு நீரது. |
3 |
(இ-ள்.)
சையமால்.........சான்றது - (மேலும் காவிரியாறு)
சையமாகிய பெரிய மலையினின்றும் வரும் பெருமையிற் சிறந்தது;
செய்ய.......போன்றது - செம்மை செய்யும் பூமகளை வளர்க்கும்
செவிலித்தாய் போன்றுள்ளது; வையகம்.......நீரது - உலகில் உள்ள
எல்லாவகை உயிர்களையும் வளரச் செய்து தினமும் அவைகள்
உய்யும்படி சுரந்தும் அளித்தும் ஊட்டுகின்ற நீர்மையுடையது.
(வி-ரை.)
சையமால்வரை - பரதகண்டத்தின் மேற்குத்
தொடர்ச்சி மலைகளிலே காவிரிக்கு உற்பத்தித் தானமாய் விளங்கும்
மலைத்தொடர் - சையமலை என்பர். இது குடகு நாட்டில் உள்ளது.
செய்ய பூமகள்
- மேலே மண்மடந்தை என்றதற் கேற்பப்
பூமகள் என்றார். செவிலி - மகள் என்றாராதலின்,
மகளை
வளர்க்கத் தாயர் வேண்டுதலின், ஐவகைத் தாயர்களிலே
வளர்க்குந்தன்மையுடைமையாற், காவிரியைச் செவிலித்தாய் என்றார்.
நாடொறும் -
பெருகிய காலத்து நீர்ப் பெருக்கினாலும்,
வறந்த காலத்து நீர் ஊற்றினாலும், ஊட்டுதலின் எந்நாளும் என்க.
இவ்விரண்டும் சேர்த்துச் சுரந்தும் அளித்தும் ஊட்டும் என்றார்.
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் என்றார் பிறறும்.
நீர்
- நீர்மை. சுரந்தும் அளித்தும் ஊட்டி வளர்க்கும் நீர்மை
உடையது என்க. நீரது - நீரையுடையது என்றலுமாம்.
என்னை?
காவிரியின் நீர் முழுதும் உலகினை ஊட்டி உய்விப்பதற்கேயன்றி
ஏனை ஆறுகள்போல வறிதே கடலிற் போதலில்லை ஆதலின்.
பின்னரும் கடல் வயிறு நிறையாத காவிரி (திருமூலர் புரா 8)
என்றனர்.
வையகம் பல் உயிர்
வளர்த்து - உய்யவே - வையகத்தில்
வாழ்ந்து அதன் போகங்களை நுகரும் உயிர் தங்கும் உடம்புகளை
வளர்த்தும், உயிர்களை உய்யச் செய்தும் என்றபடி வையகம்
வளர்த்து உயிர் உய்யவே என்க. உயிர்களுக்காக இறைவன் தந்த
உடம்பும், கரணங்களும், உலகங்களும், அவற்றின் போகங்களும்
வளரும்படி செய்தும், அவற்றை உயிர்கள் அனுபவிக்குமாறு செய்தும்,
சிவத்திலே ஈடுபட்டு உய்யும்படி கூட்டுவதற்குத் துணை செய்வது
என்பது கருத்து. உயிர்கள் சிவப்பணிவிடையிலே முயல்வதற்கு உரிய
பூவும் நீரும் ஆகிய சாதனங்களைத் தருதலேயன்றித், தானும் பூசை
செய்து வழிபட்டு ஆன்மாக்களையும் வழிப்படுத்தும் என்பது வரும்
57-வது பாட்டிற் காண்க. இவ்வுதவி என்றும் இன்றியமையாததென
நாடோறும் என்றார்.
உய்யவே -
இவ்வுலகில் இறந்துபடாமலிருக்கும்படி.
பசும்புற்றலை காண்பரிது என்றார் நாயனார்; இஃது எல்லா
ஆறுகளுக்கும் பொது இயல்பு. மேலும் அழியாத வாழ்வடைந்து
உறுதி பெறும்படி என்பதுமாம். இது காவிரிக்குச் சிறப்பியல்பாம்.
உய்யவே சுரந்து அளித்து
ஊட்டு நீரது - சுரத்தலால்
பிரமனையும், அளித்தலால் கங்கையையும், ஊட்டுதலால்
உமாதேவியையும், உய்யத்துணை செய்தலால் சிவனடியார்களையும்,
ஒப்பாகுவது காவிரி எனப் பின்னர் இம்முறையிலே 54, 55, 56, 57
திருப்பாட்டுக்களில் விரித்துக் கூறியருளினார். காவிரி இவ்வுலகிற்
போந்தது இந்திரன் சிவபூசைக்காகச் சீகாழியில் வைத்த
நந்தனவனத்தைக் காப்பாற்றுதற் பொருட்டே என்று மேலே
கொள்ளப்பட்டது. காக உருவம் கொண்ட விநயாகப் பெருமான்
அகத்தியரது கமண்டலத்தைக் கவிழ்க்க, அதனின்று பெருகி விரிந்த
காரணத்தால் காவிரி என்று காரணப் பெயர்பெற்றதென்பர். கவேர
முனிவர் ஆசிரமத்தின் வழி வந்தமையால் அவர் பெயரால் காவேரி
என்று பெயராயிற்று என்பதும் ஒரு வரலாறு. இது உலகில் வந்தது
மலர் வனத்தை வளர்க்கும் காரணம் பற்றியாதலின் அச்சிறப்பு
நேர்ககி வளர்த்து எனத் தொடங்கிக் காட்டினார்.
இப்பாட்டிற்குக் ‘காவிரி' என்ற எழுவாய் மேற்பாட்டிலிருந்து
வருவித்து உரைக்க. காவிரி - சான்றது - போன்றது - நீரது என்று
தனித்தனி முடிக்க. 3
|
|
|
|