534. நாடு மன்பொடு நாயன்மார்க் களிக்கமுன் வைத்த  
  நீடு கோவண மடையநே ராகவொன் றொன்றாக்
கோடு தட்டின்மீ திடவிடக் கொண்டெழுந்
                                ததுகண்
டாடு சேவடிக் கடியரு மற்புத மெய்தி,
33

     (இ-ள்.) வெளிப்படை. நாடும் அன்புடனே தாம்
அடியார்களுக்கு அளிக்கும் பொருட்டு முன் வைத்திருந்த நீடிய
கோவணங்களை, முழுதும் நேராகுமென்று, ஒன்றொன்றாக எடுத்துக்
கோடு தட்டின்மேல் இடஇட, அது அவற்றைக் கொண்டு மேல்
எழுந்தே நின்றது கண்டாராய், அம்பலத்தாடும் இறைவரது
திருவடிக்கு அடிமை செய்யும் நாயனாரும் அற்புதமடைந்து,

     (வி-ரை.) நாடும் அன்பொடு - அடியார்களுக்கு
வேண்டுவதின்னதென்று அவர்கள் சொல்லாமலே தாமே நாடி
யறிகின்ற அன்பினாலே. முன்னர் “கருத்தறிந்து“ - 504. “நாடிய
மனத்தினாலே“ - 470 என்றதும் காண்க.

     நாயன்மார் - தலைவர்கள். இவர் அடியார்களைத் தமது
தலைவர்களாகக் கொண்டொழுகி வந்தவர் என்பது. அன்றியும்
அடியார்களே யாவர்க்குந் தலைவராவர் என்றலுமாம். “அகில
காரணர் தாள்பணி வார்கடாம், அகில லோகமுமாளற் குரியர்“
- 139 என்றது காண்க. நாயனார் என்ற இறைவனது பெயர் அவரை
அடைந்து, பெற்று, அவரையே போன்ற அடியார்களுக்காகி வழங்குவதாம். “நாயன்மா ரணைந்த போது“ - 470. முதலியன
காண்க. முன் நாயன்மார்க்கு அளிக்க வைத்தவற்றை இங்கு
நாயனார்க்கே யளித்தனர் என்றதும்குறிப்பு.

     அளிக்க - அன்பினோடும் தர. முன்வைத்த - சேமித்து
வைத்திருந்த.

     நீடு - அளவாலும் குணத்தாலும் குறைவின்றி நீடிய. அடைய
கோவணங்கள் முழுவதையும்; நேராக - இக்கோவணம் நேர்பெறும்
பொருட்டு.

     ஒன்றொன்றா இடஇட - ஒன்றொன்றாக இட்டுக் காணவும்.
இது துலையில் நேர் காண்போர் இடும் முறை. ஒரே காலத்தில்
அனைத்தையும் இடவிருப்பமில்லாமையன்று. முன்னரே, “உயர்த்த
கோடி கொண்டருளும்“ - 529 என்று சொல்லியதனையும், “நீர்தந்த“
- 530 என்று மறையவர் ஏற்றதையும் காண்க. அவர் கோவண நேர்
கேட்டனராதலின் நேர் காணவே இவ்வாறு ஒன்றொன்றாக இட்டுக்
கண்டார் என்க.

     கோடுதட்டு - பல கோவணமிடவும் நேர்நில்லாமல் ஒருபால்
உயர்ந்து நின்றதட்டு.

     எழுந்தது - எழுந்தபடியே நின்றது.

     ஆடு சேவடிக்கு அடியர் - இது இறைவரது அருள்
விளையாட்டு என்றது குறிப்பு. “ஐயா! நீ ஆட்கொண் டருளும்
விளையாட்டி, னுய்வார்க ளுய்யும் வகையெல்லா முய்ந்தொழிந்தோம்“
என்ற திருவாசகமுங் காண்க. இங்கு அவ் வருள் விளையாட்டிலே
இறைவர் நாயனாரை “இச்சழக்கினின் றேற்றி“ - 542 -
ஆட்கொள்ளத் திரோதானமாய் நின்ற தமது அருட்சத்தியாய்ப் பதிய
நிற்கின்ற நிலையும், இதுவே விரைவில் அருட்சத்தியாக வெளிப்பட்டு
நாயனாரைத் திருவடிக்கீழ் வைக்கும் நிலையும் ஆம். ஆதலின்
ஆடுகின்ற அந்தத் திருவடியின் அருளினுக்குள் அடிப்பட்டு நின்றார்
என்று குறிப்பிட்டவாறு. “பெருந் தொடக்கினிலகப்பட்டார்“ 522.

     அற்புதம் எய்தி - “அற்புத மறியேனே“ என்பது
திருவாசகம்
. இஃது இன்னதென்று அறியலாகா நிலைமையில் நின்ற
பெருமித உணர்ச்சியாதலின் அற்புதமென்றார். இவ்வுள்ள
நிகழ்ச்சியினை வரும் பாட்டில் விரிக்கின்றது காண்க. 33