535. “உலகி லில்லதோர் மாயை!; யிக் கோவண
                               மொன்றுக்
 
  கலகில் கோவண மொத்தில!“ வென்றதி சயித்துப்
பலவும் வெண்டுகில் பட்டுட னிடவிட உயர
விலகு பூந்துகிற் பொதிகளை யெடுத்துமே
                                லிட்டார்.
34

     (இ-ள்.) வெளிப்படை. “இது உலகத்தில் இல்லாததோர்
மாயையாயிருக்கின்றது; இந்தக் கோவணம் ஒன்றினுக்கு அளவில்லாத
கோவணங்கள் ஒப்பில்லாவாயின“ என்று அதிசயப்பட்டு. அதன்
மேலும், மென்றுகில்கள், பட்டுக்கள் முதலிய பலவற்றையும்
இடஇடவும் தட்டு உயர்ந்து நின்றதாகவே, பின்னும் விளங்கிய
பூந்துகிற் பொதிகள் ஆகியவைகளை எடுத்து அவற்றின் மேலிட்டனர்.

     (வி-ரை.) உலகில் இல்லது ஓர் மாயை - இது உலகிற்
காணாததாகிய ஓர் மாயையாயிருக்கிறது. மாயை - மாயமுள்ளது.
அறிய முடியாத தன்மை பெற்றது. ஒரு கோவணத்திற்கு அளவில்லாத
கோவணமும் ஒப்பாகா நிலையினையே மாயை என்று நாயனார்
கருதினார் எனப் பின்னர் விரித்தல் காண்க. அலகில் - அளவு
இல்லாத. அடியார்களுக்களிக்க வைத்திருந்த எல்லாக்
கோவணங்களையும் இட்டாராதலின் அலகில் என்றார்.

     அதிசயித்து - முன் அற்புத வுணர்ச்சி யெய்தியவர்,
அவ்வுணர்ச்சியின் காரணத்தை அறிய முயன்று அளவில்லாத
கோவணமும் இவ்வொன்றுக்கு ஒவ்வாதது ஓர் மாயை என்ற
நிச்சயமே கண்டாராதலின் அதிசயித்து என்றார். அதிசயமாவது இது
இன்னதென்று கண்டுணரும் பெருமித உணர்ச்சி என்பது முன்னர்
உரைக்கப்பெற்றது. அதிசயம் கண்டாமே என்பது திருவாசகம்.

     பலவும் மென்துகில் இடஇட - பிரமசாரியார் கோவணமே
நேர்தர வேண்டினர்; மணியும் பொன்னும் நல் ஆடையும்
வேண்டிலார்; ஆதலின் முதலிற்கோவணங்களையே யிட்டனர்; அவை
யெல்லா மிட்டுத் தீர்ந்தும் கோவண நேர்பெறா தொழியவே, மேல்
அதன் இனமாகிய துகில்களை யிட்டனர் என்க. பலவும் - துகில்
வருக்கங்கள் பலவற்றையும். உம்மை முற்றும்மை. மென் துகில் -
நிறை நேர்பெற முதலிற்கனத்தவற்றை இட்ட அவர் அவ்வருக்கத்தில்
எஞ்சிய மென்றுகில்களை இறுதியில் அவையும் ஒழியாமை யிட்டனர்
என்பது குறிப்பு. இடஇட - என்ற அடுக்குத் துகில்பலவும்,
அவ்வருக்கம் பலவும் ஒன்றொன்றாய் இட்டு நேர்காணும் இயல்பு
குறித்தது. மேற்பாட்டிற் கூறியது காண்க. உயர - உயர்ந்தே நிற்க.

     இலகு பூந்துகிற் பொதிகளை - ஒன்றொன்றாகத் துகில்கள்
பலவுமிட்டும்அவை நேர் பெறாதொழியக் கண்டவர், மேலே
பொதிகளாக இட்டு நேர்காண முயன்றனர். இது தற்போதத்தெழுந்த
ஆன்ம முயற்சியின் இயல்பு குறித்தது. பூந்துகில் இலகுவான
பொருள்களாயினமையின் ஒன்றொன்றாயிடாது பொதிகளாக இட்டனர்
என்றதுமாம். மேல் - மேன்மேலும். உம்மை தொக்கது. 34