537. ஆன தன்மைகண் டடியவ ரஞ்சியந் தணர்முன்  
  “தூந றுந்துகில் வருக்கநூல் வருக்கமே முதலா
மான மில்லன குவிக்கவுந் தட்டின்மட் டிதுவால்;
ஏனை யென்றன மிடப்பெற வேண்டு“ மென்
                                றிறைஞ்ச,
36

     (இ-ள்.)வெளிப்படை. இவ்வாறு ஆயின தன்மையினைக்கண்டு,
அடியாராகிய நாயனார், அந்த அந்தணர் முன்னே, “இத்தட்டிலே
தூய நல்ல துகில் வருக்கங்களையும், அவற்றின் காரணமாகிய நூல்
வருக்கங்களையும், இவை முதலாயின அளவில்லாதவற்றை மேன்மேற்
குவித்திடவும் தட்டின் அளவு இதுவாய் நின்றது; இனி ஏனையவாகிய
எனது தனங்களையும் அடியேன் இத்தட்டிலே நேர்வுபெற
இடத்தேவரீர் ஏற்றுக்கொள்ள வேண்டும்“ என்றுவணங்க,

     (வி-ரை.) ஆன தன்மை - ஆள - ஆயின - இடஇட
அத்தட்டு எழுந்தே நிற்பதாயின; தன்மை - கோவணத்தின் றன்மை.
துகில் முதலியன இட்டு ஆயின - முடிந்த தன்மை - நிலை -
என்றலுமாம்.

     அஞ்சி - தாம் மறையவர்பாற் பட்ட பிழை மாற்றப்படாமலே
நின்று விடுமோ என்று அஞ்சி. அந்தணர் - நாயனார்பால்
வெளிப்படச் செந்தண்மை செய்யும் எல்லை அணுகியதாதலின்
அந்தணர் என்றார்.

     தூநறும் துகில் - மென்றுகில் - “பூந்துகில்“ - (535),
என்றதற்கேற்ப இங்குத் தூ - நறும் என்று சிறப்பித்தார். தூய்மை -
கலப்பில்லாமை; நறுமை - மெல்லிய பரிசு முடைமை. துகில்
வருக்கம்
- துகிலின் பல வகைகள். நூல்வருக்கம் - இவற்றால்
துகில்கள் உண்டாகக் காரணமாகும் தொடர்புபற்றி இவற்றையும்
இட்டார். நூல்களும் மென்மை நிறம் முதலிய பாகுபாடுகளாற்
பலவகையாவன. ஆதலின் நூல்வருக்கம் என்றார். மென்றுகில்
பட்டுடன் இடஇட உயரவே துகிற்பொதிகளையிட்டார் என்றபின்,
“துகில் அனேக கோடிகளிடும்“ என்றதனால் அந்த வருக்கமாக
அங்குள்ளன யாவையும் இட்டாயினதைக் கூறிவிட்டார். ஆதலின்
குவிக்கவும் தட்டின் மட்டிதுவால் - என முற்றும்மை தந்து
முடித்துக் கூறியபடியாம்.

     ஏனை என் தனம் - முன் இட்டனவும் தனமேயாம்; ஆயின்
(அவை) தனத்தினைக் கொண்டு பெற்றனவும் பொன் முதலியவற்றின்
பயனுமாம். இத்தனங்களோ எனின் இவை கோவணமாகா; துகில்
முதலியனபோல அக்கோவணத்திற்கு இனமுமாகா; ஏனைப்
போகங்களுக்கு ஒருவகையாற் காரணமாயிருத்தலன்றி வேறு பயன்
பெறா. இவற்றை முன்னரே வேதியர் “மணியும் பொன்னும் என்
செய்ய“ (530) என்றொதுக்கினர்; ஆதலின் இவற்றை ஏனை என்
தனம்
என்ற இலேசினாற் கூறினார்.

     இடப்பெற வேண்டும் - நேர்பெற இடுதற்கு இசையப்
பெறுதல் வேண்டும்.

     இறைஞ்ச - இதற்கிசைவது மறையோர் தம்பாற் செய்யுங்
கருணையாமாதலின், அது பெறுதற்கு இறைஞ்சினார். 36