539. நல்ல பொன்னொடும் வெள்ளியு நவமணித்
                                 திரளும்
 
  பல்வ கைத்திறத் துலோகமும் புணர்ச்சிகள் பலவு
மெல்லை யில்பொருள் சுமந்தவரிடவிடக்
                               கொண்டே
மல்கு தட்டுமீ தெழுந்தது; வியந்தனர் மண்ணோர்.
38

     (இ-ள்.) வெளிப்படை. நல்ல பொன்னுடனே வெள்ளியும்
நவமணித்தொகுதிகளும் மற்றும் பலவகையான் மேம்பட்ட தனி
உலோகங்களும் இன்னும் பல உலோகங்களின் சேர்க்கையாலான
பலவகைப் புணர்ச்சி உலோகங்களும் ஆக அளவற்ற பொருள்களை
அவர் சுமந்து வந்து அந்தத் தட்டில் இடஇட அது அவற்றைத்
தன்னுட் கொண்டே, நிறைவுடையதாயும், மேலெழுந்தபடியே நின்றது;
உலகத்தார் அதைக் கண்டு வியப்படைந்தார்கள்.

     (வி-ரை.) நல்ல பொன்னொடு - உலோகங்களில்
உயர்ந்ததும், நற்பயன் றருவதும் ஆகிய பொன்னுடனே. பொன்னிலே
நல்ல - உயர்ந்த - சாம்புநதம் முதலாக அதனுடனே என்பாருமுண்டு.

     பொன்னொடு வெள்ளியும் - பொன்னிலும் வெள்ளி
தாழ்ந்ததாயினும் அதனோடு ஒருபுடை ஒக்க வெண்பொன் என்று
சொல்லப்பெற்று அதற்கடுத்தபடியில் வழங்க உள்ளது. பொன்னின்
உயர்வு குறித்து ஒடு விகுதி தந்து பிரித்தோதிய படியாம். அதனோடு
சேர்க்கத்தகாததாயினும் தனம் என்று இதனையும் வழங்குதலால்
இதனையும் இட்டார் என்பார் வெள்ளியும் என இழிவு சிறப்பும்மை
கொடுத்தோதினார். எண்ணும்மையுமாம்.

     நவமணித் திரளும் - பொன்னினை அடுத்துவரும்
தனங்களின் வகை மணிகளாம். “பொன்னு முத்துநன் மணிகளும்“
(503), “பொன்னினு மணியினும்“ (375) முதலியன காண்க.
பொன்னினும் மணிகள் விலையுயர்ந்தவையாதலின் அவற்றை முன்
வைக்காது பொன்னின் பின் வைத்ததென்னை? யெனின், மணிகள்
பொன்னி லழுத்தியோ அல்லது பொன்னாற் கட்டியோ பொன்னொடு
புணர்ந்தாலன்றிப் பயன்படுமாறில்லை. இவற்றை மதிப்பதும்
பொன்கொண்டேயாம். ஆதலின் பொன்னை முன்னர் வைத்ததுமன்றி
நல்ல என்ற அடைமொழியும் கொடுத்தோதினார். பொன்
அமையாதவிடத்து ஒரோவழி வெள்ளியும் அவ்வாறே மணிகளுக்கு
உதவுதலால் வெள்ளியையும் அடைமொழியின்றி முன்வைத்தார்.
நவமணிகளாவன - கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம்,
மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன.

     பல்வகைத் திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும் -
முன் குறித்த பொன்னும் வெள்ளியுமேயன்றி இரும்பு, செம்பு முதலிய
வேறு பலவும் கருதிப் பல்வகைத் திறத்து என்றார். இவை தனி
உலோகங்கள். இரும்பைக் கரும்பொன் என்னும் வழக்கும் காண்க.
இவை தாமே பெரும்பயன் தருவதனோடு பொன், மணி
முதலியவற்றைத் தேடிக்கொள்ள உதவுவன ஆதலின் திறத்து
என்றார்.
ஓடும் செம்பொனும் ஒக்க நோக்கும் அடியார் திறத்து
நின்றவராகிய நாயனார் கோவண நிறை காணும் இடத்து விலையும்
மதிப்பும் குறிக்கொள்ளாது நிறையளவொன்றனையே குறித்தார்.
ஆதலின் பொன் - வெள்ளி - மணி யிவைகளை முன்னர் இட்டார்
என அவற்றைப் பிற உலோகங்களின் முன்னர்க் கூறியது காண்க.
பிற உலோகங்களை முன்னர் இடுவாராயின் பொன் முதலியவற்றை
விலைநோக்கித் தமக்கென எண்ணியவராக் கொள்ளவரும் என்பது
குறிப்பாம். பொன் - வெள்ளி முதலியன அந்நாளிலும்
நாணயங்களாகவும் விலைபெற்ற அணிகலன்களாகவும் வழங்கினர்
என்றறிகின்றோம்.

     புணர்ச்சிகள் பலவும் - பல தனி உலோகங்களின்
சேர்க்கையால் உண்டாகும் வெண்கலம் முதலியன.

     எல்லையில் பொருள் - “அந்நிலைக்கண் மிக்கவர்“ 503,
என முன்னர்க்குறித்தபடி வாணிபத் துறையிலே வேறு
நாடுகளிலிருந்தும் வரும் பொன் - மணி - துகில் முதலிய
விலைபெற்ற சரக்குக்களில் மிக்க வாணிபம் செய்தாராதலின் மிக்க
பொருள் பெற்றனர். இவையே இந்நாளிலும் மிக்க பொருள் வரும்
வாணிபமாதலும் காண்க. ஆதலின் எல்லையில் பொருள் என்றார்.
பின்னர் அவரே உலைவில் பல் தனம் - (541) என்று தமது
பொருள்களின் அளவற்ற பெருநிலையினைக் கூறுதலும் காண்க.
எல்லையில் - வகையிலும் தொகையிலும் அளக்கலாகாத நிலை
குறித்தது.

     சுமந்து - இவற்றின் விலை குறியாது எடைமட்டிற்
குறிக்கொண்டாராதலின் சுமந்து என்ற சொல்லாற் குறித்தார். இவை
உருவிற் சிறியவாயினும் எடையில் மிகும். இவை பலவும் சேருங்கால்
மிகுகனமாம் என்பதும் குறிப்பு. சுமந்து இட்டதேயன்றிப் பயனில்லை
என்ற இலேசாற் கூறியதுமாம்.

     இடஇட - பல வகைகளையும், ஒவ்வோர் வகையினிலும்
பலவற்றையும்குறித்த அடுக்கு. “துகில்பட்டுடன் இடஇட“ 535.
என்றதும் காண்க.

     கொண்டே - கொண்டேயும். சிறப்பு உம்மை தொக்கது.

     மல்கு - நிரம்பிய - நிறைவெய்திய. இனி இடப்பெறும்
பொருளின்மையின் இவ்வாறு கூறிமுடித்தார். 541 பார்க்க.
மீதெழுந்தது மேல் எழுந்தபடியே நின்றது.

     வியந்தனர் - காரணமறியாத பெருஞ் செயலைக் கண்டபோது
உளதாம் உள்ள நிகழ்ச்சி வியப்பு எனப்படும். இதனையே பின்னர்த்
திருவருளும் திருத்தொண்டின் பெருமையும் காரணமாகக்
கண்டபோது துதிசெய்து அதிசயித்துத் தொழுதார் (546) என்பதும்
காண்க. வியப்பின் மிகுதியும் விரைவும் கருதிப் பயனிலையை
முன்னர் வைத்தார். அறிவின் வலிமை பெற்ற விண்ணோர் இதனை
அருளென்றறிந்தாராதலின் அவர்களின் பராட்டுதல் மட்டும் பின்னர்
(546) ஒருசேரக் கூறினார்.

     எல்லைதீர் தனம் - எல்லையில் தனம் - என்பனவும்
பாடங்கள். 38