54. மாலினுந் திச்சுழி மலர்தன் மேல்வருஞ்  
  சால்பினாற் பல்லுயிர் தருதன் மாண்பினாற்
கோலநற் குண்டிகை தாங்குங் கொள்கையாற்
போலுநான் முகனையும் பொன்னி மாநதி.
4

     (இ-ள்.) மாலின் உந்தி.......சால்பினால் (1) மிகப் பெரிய ஆற்று
நீர்ச் சுழியையும் மலர்களையும் தன்னிடத்துத் தாங்கி வருகின்ற
சிறப்பினால் - (2) (பிரமன்) திருமாலின் சுழிந்த உந்திக்
கமலத்தினின்று பிறத்தலாகிய விசேடத்தால்; பல்லுயிர் தருதல்
மாண்பினால் - (1) (காவிரி) பல உயிர்களையும் சாவாது நீர் தந்து
காக்கும் மாட்சியினால் - (2) (பிரமன்) பல உயிர்களையும் படைக்கும்
மாண்பினால்; கோலம்..........கொள்கையால் - (1) (காவிரி)
(அகத்தியமுனிவரது) நற்கோலமுடைய கமண்டலத்தினாலே தாங்கி
வரப்பெற்ற வரலாற்றினால்; (2) (பிரமன்) நற்குண்டிகையைத் தாங்கி
நிற்கும் கோலமுடையன் எனப் புராணங்கள் கூறும்
கொள்கையினால்;
(என்ற மூன்று காரணங்களாலும்) போலும்.......நதி - காவிரிநதி
நான்முகனாகிய பிரமனையும் போன்றுள்ளது.

     (வி-ரை.) பொன்னி மா நதி - சால்பினால் - மாண்பினால் -
கொள்கையால் நான்முகனையும் போலும் என்க.

     பிரமதேவர் ஒருகையில் செபவடமும் ஒருகையில்
குண்டிகையும் தாங்கி நிற்பர் என்பது வரலாறு.

     மாலின் உந்திச்சுழி மலர்தன்மேல் வரு சால்பு - (காவிரிக்கு)
மாலின் - பெருமையுடன் (கம்பீரமாக); உந்தி - உந்திக்கொண்டு -
(அலைத்துச்சுமந்துகொண்டு); சுழி - சுழியும்; மலர் - மலர்களும்;
தன்மேல் வரும் சால்பினால் - தன்பேரில் வருகின்ற சிறப்பினால்
என்று பொருள் கொள்வதுமாம். இது சிதம்பரம் நடராச ஓதுவா
மூர்த்திகள் இராமநாதச் செட்டியாரிடம் பெரியபுராணம் பாடம்
கேட்டபோது எழுதிவைத்த குறிப்புக்களிற் கண்டது. மால் - பெரிய;
உந்திச் சுழி - ஆற்றுநீர்ச்சுழி;

     நான்முகனையும் போலும் - பிரமனையும் என்ற உம்மை
எதிரது தழுவிய எச்சஉம்மை. வரும்பாட்டிற் சொல்லப்
பறுவதுபோலக் கங்கையையே யல்லாமற் பிரமனையும் போலும்
என்க. பிரமனுக்குப் பிறப்பு - குணம் - செயல்களால் ஒற்றுமை
காணப்பட்டது.

     இப்பாட்டும் மேல்வரும் பாட்டும் சொற் சிலேடையால் வந்த
ஒப்புமை.

     (1) உந்திச் சுழி மலரானது தன்மேல் வரும் எனவும், மலரின்
மேல் வரும் எனவும், (2) உயிர் தருதல் நீரினாற் காத்தல் எனவும்,
உயிர்களுக்கு புவனமும் தனுகரண முதலியனவும், படைத்தல் (தருதல்)
எனவும் (3) குண்டிகையினால் தாங்கப்பெறுதல் எனவும்,
குண்டிகையைத் தாங்கும் எனவும், காவிரிக்கும் பிரமனுக்கும்
முறையே சிலேடை கண்டுகொள்க.

     பல்லுயிர் தருதல் - காவிரி பல்லுயிர் உய்யச்
சுரந்தளித்தூட்டும் என மேற்பாட்டிற் கூறியது இங்கு உணர்தற்பாலது.

     கோல நற்குண்டிகை தாங்கும் கொள்கை -
“அகத்தியன்தரும் பூதநீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி” என
முன்னர் விரித்தமையும் இங்கு வைத்துக் காண்க. குண்டிகைக்குக்
கோலமாவது பெரிய ஆற்றைச் சிறிய உருவத்துக்குள்ளே அடக்கி
நின்றதும் அகத்தியமா முனிவரது கையாற்றாங்கப்பெற்றதுமாம்.
பிரமன் நற்குண்டிகை தாங்கும் கோலமுடைமை - தாங்கும் கோலம்
என்ற கொள்கை.

     உந்திச் சுழிமேல் வருதல் - விட்டுணுவினின்றும் பிரமன்
பிறத்தல் சிருட்டிக் கிரமமாகிய சால்பு - தகுதி. அலையும் நுரையும்
கழித்துவருதல் நீர்பெருக்குக்குச் சால்பு. அலைகளினால் நீர்
சுழித்தலுக்கு சுழி என்று பெயர். திருவலஞ்சுழி என்ற தலப்பெயரும்
அதன் காரணமும் காண்க.

     உயிர் தருதல் - இரண்டிடத்தும் மாண்பு ஆகும்.
குண்டிகை
- தாங்கல் ஈரிடத்தும் புராண வரலாறாகியதொரு
கொள்கையாம், ஆதலின் சால்பு - மாண்பு - கொள்கை என்ற
சொற்களாற் குறித்தது காண்க.   4