540. தவநி றைந்தநான் மறைப்பொரு ணூல்களாற்
                                சமைந்த
 
  சிவன்வி ரும்பிய கோவண மிடுஞ்செழுந் தட்டுக்
கவனி மேலமர் நீதியார் தனமெலா மன்றிப்
புவனம் யாவையு நேர்நிலா வென்பது புகழோ?
39

     (இ-ள்.) வெளிப்படை. தவத்தால் நிறைந்த நான்மறைப்
பொருளாகும் நூல்களினால் அமைந்து சிவபெருமான் விரும்பியதாய்ச்
செழுந் தட்டிலிட்ட கோவணத்துக்கு இந்த ஒரு பூமியில்
அமர்நீதியாரது தனங்கள்மட்டுமேயன்றி எல்லாப் புவனங்களும்
நேர்நிற்க மாட்டா என்று சொல்வதும் அதற்கு ஒரு புகழாகுமோ?
(ஆகாது; அதன் புகழ் அதனினும் மேம்பட்டு நிற்கும்.)

     (வி-ரை.) இப்பாட்டு ஆசிரியர் கூற்று - கவிக்கூற்று என்பர்.


     தவநிறைந்த நான்மறை - தவமானது நிறைவு பெற்ற. தவம்
நிறைந்த வழியே மறைப்பொருள் பெறப்படுமென்க. மிகநிறைந்த
என்றலுமாம். மறைகள் செய்த தவம் நிறைந்த வழியே கோவணமாக
இறைவனைத் தமக்குட் பெற்றன என்ற குறிப்புமாம்.
திருமறைக்காட்டில் வேதங்கள் பூசித்த செய்தி முதலியன காண்க.

     மறைப்பொருள் நூல்களாற் சமைந்த - சிவனது
கோவணத்து நூலிழைகளானவை மறைப்பொருணூல்களேயாம்.
மறைப்பொருள்களும் அவற்றை உணர்த்தும் ஏனைக்கலைகளாகிய
நூல்களும் என்ற இவற்றாற் சமைந்த என்றலுமாம்.

“மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாய்“

என்பது திருவாசகம்.

     நூல்களால் - மறைப்பொருள்களை விரிக்கும் நூல்களுக்கும்
(சாத்திரங்கள்)“ கோவணமாக இழைக்க உதவிய நூலிழைகளுக்கும்
சிலேடையாக வழங்கிய சுவை காண்க. “கனக்கோட்டந் தீர்க்குநூ
லஃதேபோன் மாந்தர், மனக்கோட்டந் தீர்க்கு நூன்மாண்பு“ -
நன்னூல் என்று கூறிய ஒற்றுமைகளையும் உன்னுக. சமைத்த
கோவணம்
எனக் கூட்டுக. பிறிதொருவருடைய செயற்கையா
லமைக்கப்படாது இயற்கையானே நூல்களே கோவணமா யமைதலின்
சமைத்த என்னாது சமைந்த என்றார். மறைப்பொருளே நூலாக
அமைந்த கோவணம் என்பது கருத்து.

     விரும்பிய - இவ்விருப்பத்தினைப்பற்றி முன்னர் உரைத்தவை
காண்க.

     அவனிமேல்
- இந்தப் பூமியில். அன்றி - அன்றியும்.
எச்சவும்மை தொக்கது. தனமெலாம் நேர் நிலா; அதுவேயுமன்றிப்
புவனம் யாவையும் நேர்நிலா என்க. செழுந் தட்டு இடும்
கோவணத்துக்கு
என உருபு பிரித்துக் கூட்டிப் பொருள் கொள்க.

     அவனிமேல் அமர்நீதியார் தனமெலாம் - இந்தப்
பூமியாகிய ஒரு சிறு அண்டத்திலே ஒரு மிகச் சிறிய அளவினதாகி
அமர்நீதியார் தம்முடையன வென்று கருதியிருந்த எல்லாத் தனமும்.
நேர்நிலா என்பதனை இங்கும் கூட்டுக.

     புவனம் யாவையும் - இந்த ஒரு பிருதிவி அண்டம்
மட்டுமோ? பிருதிவியண்டங்களாகிய ஏனையவைகளும், ஏனைய நீர்
- வாயு முதலியனவாக எண்ணப்பட்ட எண்ணில்லாத அண்டங்களின்
புவனங்கள் எல்லாமும் ஒன்றுகூடினும், புவனங்கள் - பலதிறப்பட்ட
எண்ணில்லாத ஆன்மாக்கள் எண்ணில்லாத போகங்களை
அனுபவித்தற்கு இறைவனால் தரப்பட்ட எண்ணில்லாத இடங்கள்.
இவற்றை 224 என வகைப்படுத்திக் கூறுவது ஞானசாத்திரம். விரிவு
ஆண்டுக் கண்டுகொள்க. பெருந் தேவர்களையும் அலைத்த
சூரபன்மன் 1008 அண்டங்களை ஆண்டான் என்றும், அவன்மீது
சிறிது அருள்நோக்கம் வைத்து “அளவில்லாத நம் பெரு வடிவங்
கொள்வம் நன்று கண்டிடுதி“ என்றருள்செய்து, முருகப்பெருமான்
உலகெலாம் நிறைந்த தமது ஒரு பெருந் திருவுருவத்தினைக்
ாட்டியபோது அவன் ஆண்ட 1008 பெரிய அண்டங்களும்
அவ்வடிவத்தின் பாதத்தில் ஓர் உரோமநுனியில் தொங்கின என்றும்,
இவை முதலாகக் கந்தபுராணங் கூறும் உண்மைகளை இங்கு
வைத்துச் சிந்திப்பின் அவனி மேலமர் நீதியார் தனமெலாம்
அன்றிப் புவனம் யாவையும்
என்று கூறிய கருத்தின் உட்கோளும்
உயர்வும் நன்கு புலனாகும்.புவனம் யாவையும் நேர்நிலா என்றதன்
உண்மை தத்துவ சோபான முறையில் கண்டுகொள்க. புவனங்கள்
சுத்தம் - அசுத்தம் என்ற இருவகையாம். இவை மாயையின்
காரணத்தாலாவன. சிவன் விரும்பிய நான்மறைப் பொருள்
கோவணமோ
எனின் நாததத்துவமாம். ஆதலின் இதற்கு அவை
நேர்நிலா என்பதாம். செழுந்தட்டு இடும் கோவணத்துக்கு... நேர்நிலா
என்று கூட்டிமுடிக்க. பூ - பகுதி. தோன்றுதற்கு இடமாதலின்
புவனம்
எனப்படும்.

     என்பது புகழோ? - இது ஒரு புகழ்ச்சியின்பாற்படுமோ?
படாது என்பது குறிப்பு. புகழ்ச்சி - ஒன்றற்குச் சிறப்பும் பெருமையும்
தருவதோர் இயல்பு. இங்கு இது ஓர் புகழாகக் கூறுந் தகுதியான
பொருளன்று. ஒரு பொன் அளவு
கொண்டதொரு பொருள் ஆயிரம்
பொன்னளவு கொண்டதற்கு நேராகாது என்றால் அது பின்னதற்கு
ஒரு புகழ்ச்சியாகக் கொள்ளப்படாதது போல என்க. மண்ணோர்
வியந்தனர்
என மேற்பாட்டிற் குறித்த ஆசிரியர் இவ்வாறு வியக்கக்
காரணமின்று; “வளைவையல் லால்விய வேனய வேன்றெய்வ
மிக்கனவே“ - திருக்கோவையார், என்றபடி இதன் உண்மையை
அறியும் அருட்பதிவு பெறாத மண்ணோர்க்கு மட்டும் இது
வியப்பாயிற்று. அன்றி இஃது கோவணத்திற்குப் புகழாய் நில்லாது
என்று இதன் தத்துவத்தை ஆசிரியர் விரித்துரைத்தபடியாம்.

     தவநிறைந்து நாற்பொருள்மறை - என்பதும் பாடம். 39