542. பொச்ச மில்லடி மைத்திறம் புரிந்தவ ரெதிர்நின்  
  றச்ச முன்புற வுரைத்தலு, மங்கண ரருளா
னிச்ச யித்தவர் நிலையினைத் துலையெனுஞ்
                                 சலத்தா
லிச்ச ழக்கினின் றேற்றுவா ரேறுதற் கிசைந்தார்.
41

     (இ-ள்.) வெளிப்படை. குற்றமில்லாத அடிமைத் திறத்தினையே
புரிந்த நாயனார் எதிரே நின்று தம்முன்பு அச்சம் உற இவ்வாறு
சொல்லலும், அங்கணராகிய மறையவர் அருளினாலே அவரது
நிலையினை நிச்சயித்து, துலை என்கின்ற
முன்னிலையால் அவர்களை
இந்தச் சழக்கிலிருந்து ஏற்றுவாராய் அவரும் மனைவியாரும்
மைந்தரும் துலையிலே ஏறுதற்கு இசைந்தனர்.

     (வி-ரை.) பொச்சம் இல் - குற்றம் இல்லாத. அடிமைத்திறம்
- அடிமைச் செயல்வகை. இத்திறத்தினை 504, 505-ம் பாட்டுக்களிற்
காண்க. புரிந்தவர் - புரிதல் - செய்தல், இடை விடாது நினைத்தல்
என இரண்டுமாம்.

     “புகழ் புரிந்து“ - குறள் - “சிந்தை செய்வது சிவன் கழல்“,
“உதவி“ (504) என இவ்விரண்டினையும் குறித்தது காண்க. மேலே
தலைவ என்றதற்கேற்ப அடிமைத்திறம் என்றார். முன்பு அச்சம்
உற
என மாற்றுக. அவர் முன்னே இவரும், இவர் முன்னே இவரது
அச்சமும் உற்றன என்பது. முகத்தும் அச்சமே முதன்மையாய்
வெளிப்பட்டது என்பது கருத்து. “உடம்பினி லடங்காப் பயத்தொடும்“
(529) “சிந்தனை முகத்திற் றேக்கி“ என்பது கம்பராமாயணம்.

     அங்கணர் நிச்சயித்து - முன்னர் வெகுண்டு
காட்டியதுபோலன்றி இங்கு அழகிய அருட்பார்வை செய்தாராதலின்
இவ்விடத்து அங்கணர் என்று குறித்தார். இதுகாறும் திரோதான
சத்தியாக நின்ற செயல்கள் இங்கு அருட்செயலாக வெளிப்படுதல்
குறித்தது. நிச்சயித்து - உறுதிப்படுத்தி. உறுதிப்பாடு பெற்ற
உண்மையாய் மற்றெதனானும் மாறுபடாத. “பகருஞானி பகலூண்
பலத்துக்கு நிகரில்லை யென்பது நிச்சயம்“ - திருமந்திரம். “மண்டல
நாயகராய் வாழ்வது நிச்சயமே“ - நம்பிகள் தேவாரம்.
(திருக்கானப்பேர் - 11).


     அவர் நிலையினை - நிலையினை நிச்சயித்துப் பின்னர்
அவரை ஏற்றுவார் என்க. இங்கு நிச்சயித்தலாவது உலகரறிய
நிறுத்துக் காட்டுதல். “தொண்ட ரன்பெனுந் தூநெறி வெளிப்படுப்
பாராய் (510) என்றது காண்க.

     துலைஎனும் சலத்தால் - சலம் - முகாந்தரம். Guise or
device
என்பர் நவீனர். இச்சழக்கு - இவ்வுலகில் எனதல்லாததை
எனது என்றும், யானல்லாததை யான் என்றும் கொண்ட அகங்கார
மமகாரங்களாகிய தொடக்கு. இகரம் - அண்மைச்சுட்டு. யாவரும்
அறிந்துநின்ற சிறப்புக் குறித்தது. உண்மையற்ற பொருளினுட்பட்டு
நிற்குநிலை இங்குச் சழக்கு எனப்பட்டது. “சழக்கின்று நானியைந்தாற்
றருமந்தான் சலியாதோ?“ (120) காண்க.

     ஏற்றுவார் - ஏறச் செய்வாராய். சேற்றினுட்பட்டு வெளியேற
முடியாது நின்ற ஒருவனை மேலுள்ள ஒருவன் கைதந்து
வெளியேற்றுவது போல். “கண்ணுதலான் பெருங் கருணை
கைதந்தபடி“ என்றது காண்க. “கொடுநர கக்குழிநின்று அருள்தரு
கைகொடுத் தேற்றுமை யாற னடித்தலமே“ என்ற திருவிருத்தத்
திருவாக்குங் காண்க. ஏற்றுவார் - இசைந்தார் எனக் கூட்டி முடிக்க.

     ஏறுதற்கு இசைந்தார் - ஏறிடப் பெறுவது உன் அருள் என
அருளிப்பாட்டினை வேண்டிய தொண்டர்க்கு அங்ஙனமே ஏறுக
எனத் தமது அருளினைத் தந்ததாம். துலையில் ஏறிய செய்தி
அவருடையதாகக் காணப்படினும் அஃது இவர் ஏற்றியருளியதேயாம்.
செயல் இவர்பாலதன்றி அவருடையதன்று என்பது குறிப்பு. இவர்
அருளினால் ஏற்றினாலன்றி உயிர்கள் ஏறமுடியாது என்பது சாத்திரம்.
என்னை? அவர் துலையில் ஏறிய அச்செயலே தம் செயலாக
அத்துலையினையே விமானமாகக் கொண்டு சிவபுரியிலே அவரை
ஏற்றிக் கொண்டார் (549) ஆதலின் என்க.

     துலையெனுங் கலத்தால் என்ற பாடம் சில
ஆதீனப்பிரதிகளில் உள்ளதென்பது திரு. இராமநாதச் செட்டியார்
உரைக்குறிப்பு. இப்பாடத்திற்குப் பிறவிச் சழக்கினின்றேற்றுதற்குத்
துலையே கலமாயிற்று என்க. கலம் - மரக்கலம். 41