549. நாதர் தந்திரு வருளினா னற்பெருந் துலையே  
  மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக்
கோதி லன்பருங் குடும்பமுங் குறைவறக் கொடுத்த
வாதி மூர்த்தியா ருடன்சிவ புரியினை யணைந்தார்.
48

     (இ-ள்.) வெளிப்படை. நாதருடைய திருவருளினாலே நல்ல
பெரிய அந்தத் துலையே அவர்களை மேலே கொண்டு எழுகின்ற
விமானமாகி மேற்செல்லக், குற்றமில்லாத அன்பராகிய நாயனாரும்,
அவரது மைந்தர் மனைவியாராகிய குடும்பத்தாரும் எஞ்ஞான்றும்
குறைவுபடாத அழிவில் வான்பதங் கொடுத்த மூர்த்தியாருடனே
சிவபுரியை அணைந்தனர்.

     (வி-ரை.) துலையே விமானமதாகி மேற்செல்ல - ஐயர்
தம்முன் தொழுதிருக்கும் அழிவில்வான் பதம் கொடுத்தாராதலின்,
அப்பதத்திற் சேர்த்தற்குரியதாய் நாயனாரும், மைந்தரும்,
மனைவியாரும் ஏறிய அந்தத் துலையே, விமானமாக ஆயிற்று,
துலையே விமானமாகி என்றதனால் அதுவே விமான உருவம்
பெற்று இவர்களை மேலெடுத்துச் சென்றது என்றதாம். திருவருளால்
- தன முதலிய பல பொருள்களை ஒரு தட்டிலே கொண்டும்
கோவணத் தட்டுக் கீழ் இறங்கியபடியே தாழ்ந்து நிற்கும் வலிமை
பெற்றதும் திருவருட் செயலேயாம். பின்னர் இம்மூவரும் ஏறியவுடன்
இருதட்டும் நேர் நின்றதும் திருவருளேயாம். இங்கு அத்துலையே
விமானமாகி மேற்சென்றதும் திருவருளேயாம். ஆயின் முன்னர்த்
திருவயிருள் வெளிப்பாடின்றி யிருந்து இங்கு அருட்சத்தியாகி
நாயனாரை அவர் குடும்பத்துடன் அழியா இன்பத்தில் வைத்தலின்
திருவருளினால் என வெளிப்படக் கூறினார்.

     குடும்பம் - மைந்தரும் மனைவியாரும். குறைவறக்
கொடுத்த ஆதிமூர்த்தியார்
- முழுதும் இன்னருள் தந்து முன்
தொழுதிருக்கும் அழிவில் வான்பதம் கொடுத்த தனையே இங்குக்
குறைவறக் கொடுத்த என்றார். குறைவறுதல் -
எஞ்ஞான்றுங்கேடுறா திருத்தல். குறைவற குறைவு பிறவியாகிய
குறை; அற - அறும்படியாக; கொடுத்த - அருள் கொடுத்த;
என்றலுமாம் - அதாவது மல மற அருளிய என்பது. “இச்சழக்கினின்
றேற்றுவார்“ (512) என்றதும் காண்க.

     ஆதிமூர்த்தியாருடன் சிவபுரியினை அணைந்தார் -
பதங்கொடுத் தெழுந்தருளிய ஆதிமூர்த்தியுனுடனே பதம் பெற்ற
இவர்களும் சிவலோகமடைந்தனர்.

     அழிவில் வான்பதம் - காலநீங்கிய நிலைமையாலே
நித்தமாகிய சுத்தபுவனம். உடன் சிவபுரியினை யிணைந்தார்
என்றதனால் இறைவன் இவரை “வாராவுலக நெறியேற்றி“ வைத்தார்
என்பதாம். அந்தச் சத்தமாகிய சிவபுரியே “நிலமிசை நீடு வாழ்வார்“
என்ற வீட்டுலகமாம். 48