55. திங்கள்சூ டியமுடிச் சிகரத் துச்சியிற்  
  பொங்குவெண் டலைநுரை பொருது போதலால்
எங்கணா யகன்முடி மிசைநின் றேய்ந்திழி
கங்கையாம் பொன்னியாங் கன்னி நீத்தமே.
5

     (இ-ள்.) திங்கள்........உச்சியில் (போதலால்) - (1) (காவிரி)
நிலவு தவழும்படி யுயர்ந்த சையமலையின் மீதிருந்து போதருதலால்
- (வருதலால்) - (2) (கங்கை) நிலவைச் சிரத்திலே சூடிய
சிவபெருமானது சடைமுடியாகிய சிகரத்திலிருந்து
இறங்கி உலகிற்
போதருதலால்; பொங்கு........போதலால் - (1) (காவிரி) நீர்வெள்ளம்
பொங்கி வருதலால் உளதாகிய வெள்ளிய தலைபோன்று உருண்ட
வடிவுடைய நுரைகளை மோதி அடித்துக்கொண்டு வருதலால் - (2)
(கங்கை) வெண்டலைகளிற் பொங்கு நுரைபோல மோதி வருதலால்;
எங்கள்.......கங்கையாம் - எங்கள் தலைவனாகிய சிவபெருமானது
திருமுடியிலிருந்து வருகின்ற கங்கையே போலும்; பொன்னியாம்
கன்னி நீத்தம் - காவிரியாகிய கன்னியாற்றின் பெருக்கு. -
ஆச்சரியக் குறிப்புப் பெறவரும் அசை. பொன்னியாம் கன்னி நீத்தம்
கங்கையாம் என்று கூட்டுக.

     (வி-ரை.) போதலால் என்பதனை உச்சியிற் போதலால்
எனவும். பொருது போதலால் எனவும் இரண்டிடத்தும் தனித்தனி
கூட்டுக. போதல் - போதருதல் - புகுதல் - வருதல் - என்க.
வெண்டலை - வெள் + தலை - வெளியிடங்களில் என்றும்
கூறுவர்.

     முடிச்சிகரத்துச்சியில் - சடைமுடியின் நுனியின்
மேலிடத்திலிருந்து எனப் பொருள் உரைப்பதும் ஒன்று. அவனது
முடி - “சடைமுடி“ (திருவிசைப்பா) என்பர். “சுடர்ச்சடை சுற்றி
முடித்து“ என்றபடி சடைக்கற்றையைச் சுற்றிக் கிரீடமாக
அமைந்துள்ளாராதலின் அதன் மேற்பாகத்தின் நுனியில் ஒரு
சடையிலிருந்து பனித்துளி போலக் கங்கை இறங்கி உலகிற் பரக்த
வருவதாம் என்ற புராண வரலாறு காண்க. காவிரிக்குப் பொருந்த
உரைக்கும்போது, முடி - சைய மலையின் சிகரங்களில் ஒன்று என்க.
மலைச் சிகரங்களுக்கு முடி என்று இப்போதும் பெயர் வழங்குகின்றது.

     கங்கையாம் பொன்னியாம் தென்றிசைக்கு வரும்போது
கங்கையிலே தமது கமண்டலத்தில் தீர்த்தம் முகந்து வந்தனர்
அகத்தியர் - என்ற கந்தபுராண வரலாறு இவ்வொற்றுமைக்குச்
சிறப்புத் தருவது காண்க.

     இச்சிறப்புப்பற்றியே கங்கையே காவிரி - காவிரியே கங்கை
எனக் கொள்ளற்பாலது என்பார் கங்கையாம் பொன்னியாம் எனச்
சொல்லினும் ஒற்றுமை நயம் பொருந்தக் கூறினார். “கங்கைக்கே
யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின்.......“எனத் திருஞானசம்பந்த
சுவாமிகள் போற்றியதும் அறிக. “காவிரி நாடன கழனி நாடு“ -
எனக் கம்பன் இதனை ஒட்டிக் கூறியதும் காண்க. இப்பாட்டிற்
சொல்லும் பொருளும் - என இருவகை ஒப்புமையும் குறித்தபடியாம்.

     மிசைநின் - றேயிழி - என்பதும் பாடம். 5