550. மலர்மிசை யயனு மாலுங் காணுதற் கரிய வள்ளல்  
  பலர்புகழ் வெண்ணெய் நல்லூ ராவணப் பழைமை
                                  காட்டி
யுலகுய்ய வாண்டு கொள்ளப் பெற்றவர் பாத
                                முன்னித்
தலைமிசை வைத்து வாழுந் தலைமைநந் தலைமை
                                 யாகும்.
49

     (இ-ள்.) வெளிப்படை. தாமரையில் இருக்கும் பிரமதேவனும்
விட்டுணு மூர்த்தியும் காண்பதற் கரியவராகும் வள்ளலாராகிய
சிவபெருமான், பலரும் புகழும் திருவெண்ணெய் நல்லூரிலே
ஓலையின் பழைமையைக் காட்டி உலகமுய்ய
ஆண்டுகொள்ளப்பெற்றவராகிய நம்பியாரூரருடைய பாதங்களைத்
தியானித்துத் தலையின் மேல் வைத்துக்கெண்டு அதன் கீழ்
வாழ்கின்ற தலைமையே நமது தலைமையாவதாம்.

     (வி-ரை.) காணுதற்கு அரிய வள்ளல் - காட்டி - பிரம
விட்டுணுக்கள் யாம் காண்போம் என்று காணலுற்றார்க்கு
அரியவராகியும், தாமே கருணையினாலே வெளிப்பட எழுந்தருளி
வந்து பலருமறியக் காட்டினார் என்ற நயங் காண்க. அவர் காட்டக்
காண்பதேயன்றி உயிர்கள் காண வலியற்றன என்பது. “மாலுமிரு
வர்க்கு மரியா ரொருவர் வந்தார்“ (174) என முன்னர்க் கூறியது
காண்க. வள்ளல் - தாமே வலிய வந்து காட்டியதும், அவர்
மறுப்பவும் விடாது பற்றி வழக்கிட்டு ஆட்கொண்டதும்
வள்ளற்றன்மை குறித்தன. இதுபற்றித் தடுத்தாட்கொண்ட புராணத்தில்
(174) முன்னர் உரைத்தவையும் காண்க. “பன்னெடுங் காலம்
பணிசெய்து பழையோர் தாம்பல ரேம்பலித் திருக்க, வென்னெடுங்
கோயினெஞ்சுவீற் றிருந்த வெளிமை“ என்றது கருவூர்த்தேவர்
(தஞ்சை இராசராசேச்சுரம் - 8) திருவிசைப்பா.

     பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் - பலர் புகழ் -
அறிவோர் பலரும். பலரும் - உம்மை தொக்கது. இதனை
முதனிலைத் தீபமாக வைத்துப், பலர் புகழ் ஆவணம் என்றும், பலர்
புகழ் பழைமை என்றும் கூட்டி யுரைத்தலுமாம். ஆவணப் பழைமை
காட்டி
- “அதன் தொன்மை நோக்கி“ (204) என்றது காண்க.

     உலகுய்ய ஆண்டுகொள்ளப் பெற்றவர் - உலகமுய்யும்
பொருட்டு. “உலகுய்ய மறையளித்த“ (345), “உலகேத்த“ (348),
“தேசமுய்ய“ (சண்டீசர் புராணம் - 60) முதலிய இடங்களிற்
பெருமான் நம்பிகளை ஆட்கொண்டதனால் உலகமுய்ந்த வகை
விரிக்கப்பட்டது. ஆட்செய் எனப் பெற்றவன் என்ற வகை நூல்
இங்ஙனம் விரிந்தது. ஆண்டுகொள்ள - ஆண்டருள் செய் (38),
அடிமை கொள்வான் (174) முதலியவை காண்க. உன்னி வைத்து
என்பன மனம் காயம் என்பவற்றால் வணக்கங்களாம்.

     இப்பாட்டால் வாக்கின்றொழில் பெறப்படுதலின் அதனை
வேறு கூறாராயினார். தலைமிசை வைத்தல் - தலைமேற் சூடுதல்.
தலைக்குமேல் உயர்ந்த அங்கம் இல்லை. பாதத்தை உயர்ந்ததனினும்
உயர்ந்ததாக வைப்போம் என்றார்.“தலைக்கணி யாக்குவாம்“ என்றார்
சிவப்பிரகாச சுவாமிகள். வாழும் - வாழ்வு பெறும். தலைமை -
தலையின் றன்மை, முதன்மை என இரு பொருளும் பெற வைத்த
அழகு காண்க. பாதந் தலையில் வைத்த அடிமையே எமக்கு
முதன்மையாம். பிறர் எல்லாம் தாந்தாம் முதன்மை பெறுதலை
வேண்டுவர். நாம் அங்ஙனமன்றிப் பாதந் தலைவைத்த வாழ்வினையே
நாம் பெற்ற தலைமை யென்போம். “உன்பாதந் தலைவைத்த
உத்தமர்கள்“ - திருவிருத்தம். கால் + தலை = காறலை, தாள்
+ தலை = தாடலை என்ற சொற்சந்திகளைத் திருவடி நிறைவிற்குள்
உயிர் தன்போதஞ் சிவபோகமாக மாறிக் கலந்து நிற்றற்கு உவமித்துக்
கூறும் ஞானசாத்திர மரபும் இங்கு வைத்துக் காண்க. நம்பிகள்
ஆளே
என்றும், அடியேன் என்றும் தமது அடிமைத் திறத்தினைத்
தொகைநூலில் நாட்டினர்; நாம் அவரது அடியின் கீழ் முடி
வைத்தலையே தலைமை என்போம்; அது அடிமையாகாது என்ற
சுவையுங் காண்க. “தொண்டர்தொண் டர்க்குத் தொழும்பாய்த் திரியத்
தொடங்கினனே“ என்பது பதினொராந் திருமுறை.

     அம்மானுக்காளே என்ற தொகைநூற் பொருளை வகைநூல்
வகுத்த அதனையே, மேலும் விரிநூலுள் விரித்துக் காட்டினார்.
இப்பொருளே திருமலைச் சருக்கத்தினும் இச்சருக்கத்தினும்
பேசப்பட்ட பொருளின் சாராமாயினமையும், இதுவரையும் போந்த
நம்பிகளது சரிதப்பகுதி யாயினமையும் காண்க. இவ்வாறே பின்னரும்
நம்பிகளது துதிகளாக அவரது சரிதத்தின் அவ்வச் சருக்கத்திற்
பெறக் கூடிய பொருள்களை வைத்து இம்மகுடப் பொருளை
விரித்துக் காட்டிச் செல்கின்றமை அங்கங்கும் உய்த்துணர்ந்து
கொள்க. ஆயின், அம்மானுக்காளே என்ற தொரு சொற்றொடராகிய
மகுடமே சரிதத்தின் பல பகுதிகளாக விரியுமாறெவ்வாறெனின்,
“மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீதி லாத்திருத் தொண்டத்
தொகைதர“ என்று குறித்தபடி, “ஆளா“யின, “அடியே“ னாகிய,
தன்மைகளினாலே உலகை உய்விக்கும் சரிதப் பகுதிகள்
நிகழ்ந்தனவாம் என்க. இச்சரிதங்கள் ஆளாயினதன்
மேல்விளைவுகளாதலின் ஆளே, “அடியேன்“ என்ற
முதனூலாட்சியின் விரிவுகளாயினமையும் கண்டுகொள்க. 49