56. வண்ணநீள் வரைதர வந்த மேன்மையால்  
  எண்ணில்பே ரறங்களும் வளர்க்கும் மீகையால்
அண்ணல்பா கத்தையா ளுடைய நாயகி
உண்ணெகிழ் கருணையி னொழுக்கம் போன்றது.
6

     (இ-ள்.) வண்ணம் நீள்.......மேன்மையால் - (1) (காவிரி)
அழகிய பெருந்தொடர்ச்சியில் ஒன்றாகிய சையமலையிலிருந்து வந்த
மேன்மையினால் - (2) (நாயகி கருணை ஒழுக்கம்) வண்ணத்தால்
எல்லா மலைகளிலும் நீண்ட இமயமலைக்கு மகளாய் உலகிலே வந்த
மேம்பாட்டினால்; எண்ணில்.......ஈகையால் - (1) காவிரி அளவற்ற
பெரிய அறங்கள் எல்லாவற்றையும் வளரத் துணை செய்து நிற்கும்
பொன்னுடைமையினாலே; (2) (நாயகி கருணை ஒழுக்கம்) எல்லா
அறமும் யான் செய்ய வேண்டும் என வரங்கேட்டு உயிர்களுக்கு
அறமாக்கும் வித்தாக இருநாழி நெற்பெற்று அறம் வளர்த்த
பெருங்கொடையினால்; அண்ணல்.........போன்றது - (காவிரியாறானது)
இறைவனது ஒரு பாகத்தைத் தம்மதாக ஆக்கிக்கொண்டு உலகத்தை
ஆட்கொண்ட உமாதேவியாருடைய திருவுள்ளத்திலே எல்லா
உயிர்களிடத்தும் பரந்து நெகிழும் தன்மையதாம் கருணையுடைய
இனிய ஒழுக்கம் போன்றதாம்.

     (வி-ரை.) காவிரி - எழுவாய் வருவித்துரைக்க. இப்பாட்டுப்
பண்புபற்றி வந்த பொருள் ஒப்புமையாம். ஆளுடை நாயகியின்
கருணை இடையறாது எல்லா உயிர்களிடத்தும் ஒழுகுவதுபோலக்
காவிரியும் ஒழுகுவது என்பது.

     உள்நெகிழ் கருணையின் ஒழுக்கம் - உமையம்மையார்
இமயமலை யரசன் மகளாய்ப் போந்தமையும், இறைவன்பால் அறம்
வளர்க்கும் வித்தாக இருநாழி நெல் பெற்று அறம் வளர்த்தமையும்,
அவரது பெருங்கருணையின் செய்கையேயாம் என்பது,
இக்கருணையானது உயிர்களை வாழ்விக்கும் இச்சையாலே
அம்மையாரது திருவுள்ளத்தினின்றும் நெகிழ்ந்து இடையறாது
பெருக்கெடுப்பது என்பார், “உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம்“
என்றார். இதன் விரிவு திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
புராணத்துட் காண்க. ஒழுக்கம் - இடையறாது ஒழுகி வருவது.

     வண்ணம் நீள்வரை - பனிமலை; நீள்வண்ணவரை என்க.
உருவினாலும் திருவினாலும் எப்போதும் நீள்வது என்பதாம். ஈகை
- பொன்; காவிரி - பொன்னுடைமையின் பொன்னி எனப்படும்.

     அண்ணல் பாகத்தை ஆளுடை - மேன்மையும் ஈகையும்
அருளினைப்பற்றியது. அருள் இறைவியின் இயல்பு. எனவே
பெருமானது அருள் உயிர்களிடம் செல்வதற்குத் தாமே
இறைவியாயிருத்தலின் அருட்பாகத்தை ஆளுடை நாயகி; ஆள்கின்ற
முதல்வி என்றுரைத்தலுமாம்.  6