156. மங்கலம் பொலியச் செய்த மணவினை யோலை
                                 யேந்தி
 
  அங்கயற் கண்ணி னாரு மாடவர் பலரு மீண்டிக்
கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினா ரெதிரே வந்து
பங்கய வதனி மாரு மைந்தரும் பணிந்து
                             கொண்டார்.
10

     (இ-ள்.) வெளிப்படை. மங்கலமாகச் செய்த நாளோலையை
மணமகன் வீட்டிலிருந்து மங்கலப் பெண்களும் ஆடவர்களும்
ஏந்திக் கொண்டு புத்தூருக்குச் செல்ல மணமகள் வீட்டிலிருந்து
அவ்வாறே மங்கலப் பெண்களும் ஆடவர்களும் எதிர்கொண்டு வந்து
பணிந்து அதை ஏற்றுக்கொண்டார்கள்.

     (வி-ரை.) இவை நாளோலை விடுத்தல் - எடுத்தல் - ஏற்றல்
- ஆகிய முறைகளாம்.

     மங்கலம் ........ மணவினை ஒலை - மங்கலங்களை
விளக்கமுறச் செய்துள்ள மண நிகழ்ச்சிகளைக் காட்டும் ஓலை.
சொற்களில் அமங்கலப் பொருள் வாராதபடி எழுதுதல் - ஓலையைச்
செம்மைசெய்து மஞ்சட் பூசுதல் முதலியன.

     ஏந்தி - மங்கலப் பெண்கள் பூ முதலிய மங்கலப்
பொருள்களை ஏந்திச் செல்லுதலும், அவ்வாறே பெண் வீட்டார்
எதிரே வந்து பணிந்து அவற்றை ஏற்றுக்கொள்ளுதலும் இதற்கு உரிய
சடங்கு.

     அங்கயற் கண்ணினார் - பங்கய - வதனிமார் - ஈண்டுச்
சுமங்கிலிகளைக் குறித்து நின்றன. பெண்ணைநோக்கிச்
செல்லுதலினால் கண்ணினார் என்று கண்ணையும், முகமலர்ந்து
ஏற்றுக் கொள்ளுதலினால் வதனிமார் என்று முகத்தையும்
குறித்தவாறு. இப்பெண்கள் சதிபதிகளாகச் சேர்ந்துசெல்வதும்
வந்துஏற்றலும் வழக்கு ஆதலின் கண்ணினாரும் ஆடவர்
பலரும் என்றும், வதனிமாரும் மைந்தரும் என்றும் கூட்டி
உரைத்தார். ஆடவர் - மைந்தர் - மங்கலங்களிலே காணக் கூடாத
கூன் குருடு இல்லாத உத்தம இலக்கணமுடையார். கொண்டார் -
ஏற்றுக்கொண்டார்.

     கொங்கலர் சோலை மூதூர் - வாசனை வீசும் மலர்கள்
நிறைந்த சோலைகள் சூழ்ந்த பழமை பொருந்திய புத்தூர். இதன்
பேர் புத்தூர் ஆயினும் பழமையான புகழுடைய தென்பார் மூதூர்
என்றார். 10