171. கண்களெண் ணிலாத வேண்டுங் காளையைக்
                          காண வென்பார்
 
  பெண்களி லுயர நோற்றாள் சடங்கவி பேதை
                               யென்பார்
மண்களி கூர வந்த மணங்கண்டு வாழ்ந்தோ
                               மென்பார்
பண்களி னிறைந்த கீதம் பாடுவா ராடு வார்கள்.
25

     (இ-ள்.) கண்கள்.......என்பார் - (வேறு மடவார்)
காளைபோன்ற இவரைக் காண அளவிலாத கண்கள் வேண்டும்
என்று சொல்வார் சிலர்; பெண்களில்.....என்
பார் - சடங்கவி
சிவாச்சாரியாரின் மகளே (இவரை மணக்க நின்றமையால்)
பெண்களிலெல்லாம் மிக நோற்றவள் என்பார் சிலர்; மண.......என்பார்
- உலகம் மகிழத்தக்க இந்த மணத்தைக் காணப்பெற்றதால் நாம்
பெருவாழ்வை யடைந்தோம் என்று சிலர் சொல்வர்;
பண்களின்......ஆடுவார்கள் - சிலர் பண்களினால் நிறைந்த கீதம்
பாடுவாரும் ஆடுவாருமாயினர்.

     (வி-ரை.) இதுவும் வரும்பாட்டும் மண எழுச்சியுடன் போந்த
மணமகனாகிய நம்பிஆரூரரைப் புத்தூர்மறையவர் மடவார்கண்டு
சொல்லியவற்றைக் குறிப்பன.

     கண்கள் எண்ணிலாத வேண்டும்
- இவரது பேரழகை
முற்றுங் காண இரு கண்கள் போதா; அளவற்ற கண்கள் வேண்டும்
என்றதாம். நம்பிகள் சிவபெருமானது அழகு திரண்டு வந்த திருவுரு
உடையராதலின் இவ்வாறு கூறினார்கள். சுந்தரர் என்ற பேரும்
காண்க. இளமையிலே இவரது அழகு அந்நாடுவாழ்
அரசரதுள்ளத்தைக் கவர்ந்து கொண்ட சரிதமும் காண்க.

     உயர நோற்றாள்
- நாம் ஒருவாற்றாற் காணும்பேறு
பெற்றோம். அவ்வாறன்றி இவரைத் தன் நாயகனாகவே பெற்றுக்
காணும் பேறு நம்முட் சடங்கவி மகளுக்குக் கிடைத்தது அவளது
முன்னைத் தவத்தாலே என்றதாம். உயர - உயரும் பொருட்டு
என்றலுமாம்.

     வாழ்ந்தோம் - நமக்கும் காணும் வாழ்வு கிடைத்தலாற்
கண்பெற்றபயனடைந்தோம். “வாழ்ந்தன கண்க ளென்பார்“ -
திருஞா - புரா - 803. என்று திருஞான சம்பந்த சுவாமிகளைக்
கண்ட மாதர் மைந்தர் சொல்லியதும் காண்க. இவ்வாறு மணமகனைக்
கண்டு பாராட்டுதல் கற்பிலக்கணத்துக்கு இழுக்கில்லாமையறிக.

     காண்பார் பலருள்ளே ஒருசிலர் ஒன்று சொல்ல, வேறு சிலர்
அதைத் தொடர்ந்து மேலே சொல்லிக் காணும் கருத்து
இப்பாட்டினும் வரும்பாட்டினும், இன்னும் இவ்வாறு வரும்
இடங்களினும் கண்டு கொள்க. 25