| 64. 
           | 
          செங்குவளை 
            பறித்தணிவார் கருங்குழன்மேற்  
                                    சிறைவண்டை | 
            | 
         
         
          |   | 
          அங்கைமலர் 
            களைக்கொடுகைத் தயல்வண்டு  
                                   வரவழைப்பார் 
            திங்கணுதல் வெயர்வரும்பச் சிறுமுறுவ  
                                     றளவரும்பப 
             
            பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய்  
                                   மடுத்தயர்வார். 
             | 
          14 | 
         
       
       
            (இ-ள்.) 
      செங்குவளை பறித்து அணிவார் - (கடைசியர்கள்)  
      செங்குவளை மலர்களையும் களையாகப் பறித்து அவற்றை  
      அணிதலும் செய்வார்கள்; கருங்குழன்மேல் - தங்கள் கரிய கூந்தலின்  
      மேலே; சிறைவண்டை..அழைப்பார் - சிறை வண்டுகளைத் தமது  
      அங்கையாகிய மலர்களினாலே போகும்படி ஒட்டுவதால் அவை  
      போகாததுடன் அயலில் இருக்கும் வண்டுகளையும்கூட வரும்படி  
      செய்து கொள்வார்; திங்கள்...அயர்வார் - நிலாப்போன்ற நெற்றியிலே  
      வியர்வை யரும்பவும், முல்லை அரும்புகள் போன்ற பற்கள் சிறு  
      நகை யரும்பவும், (களைகளைந்த) புதிது பூத்த தாமரை மலரினின்று  
      பொங்கிய தேனை வாய் வைத்து உண்பார். 
       
           (வி-ரை.) 
      செங்குவளை - பறித்து அணிவார் - குவளை  
      - ஒருவகை நீர்ப்பூ. அது செங்குவளை கருங்குவளை என  
      இருவகைத்து. இவை நீர்நிலைகளிலேயன்றி நீர் செழித்துப்பாயும்  
      காலத்தில் வயல்களிலும் பூக்கும். இங்குக் குறித்தது செங்குவளை.  
      இதனைச் செங்கழுநீர் என்பார். நெற் பயிருக்குப் பிறவற்றைப்  
      போலவே இவையும் களைகளாதலின் இவற்றையும் களைந்தனர்  
      என்பார் பறித்து என்றார். ஆனால் இவை உருவினாலும்  
      மணத்தினாலும் நிறத்தினாலும் சிறந்தன ஆதலின்  
      மற்றக்களைகளைப்போல வறிதே போகட்டுவிடாமல், இவற்றை  
      அணிந்துகொண்டு பயன்படுத்தினார்கள் என்பது தோன்ற அணிவார்  
      என்றார். குவளையும் பறித்தார் - என்றும், பறித்தும் அணிந்தார் -  
      என்றும், ஈரிடத்தும் தொக்க உம்மை விரித்துரைத்துக் கொள்க. 
       
           பொங்குமலர்க் கமலத்தின் 
      புதுமது - கமலப் புது மலரின்  
      பொங்கு மது என மாற்றி உரைக்க. செங்குவளை போலவே  
      களையாகக் களைந்த என்றுகூட்டிக் கொள்க. களையாகக் களைந்த  
      என்பது குவளைக்கும் கமலத்துக்கும் வருவித்து உரைக்கப்பட்டது,  
      அல்லாத வழிக் களைகளையச் சென்ற கடைசியர்கள் அக்காரியம்  
      செய்யாது மனம் போனபடி வேறுசெய்து விளையாட்டயர்கின்றார்கள்  
      எனவரும் ஆதலின். செங்குவளையோடு கருங்குவளையும், கமலப்  
      புதுப் பூவுடன் பழம் பூவும் களையாகக் களையப்படுமாயினும்  
      அவற்றுள் இவை பயன்படுத்தப் பெற்றன என்று கூறியதனால்  
      ஏனைய தள்ளப்பட்டனவாம். 
       
           மது வாய்மடுத் தயர்வார் 
      - செங்குவளை வறிது போகாதபடி  
      பயன்படுத்த அணிந்தது போலவே, வயலிலும் அயலிலும பூத்த  
      கமலங்களைப்பறித்து அவையும் வறிதே போகாது அவற்றின்  
      அகத்தேனைத் தம் இளைப்புத் தணிய உண்டு களிப்பர் என்று  
      அணியும் சுவையும் குறிப்பும் சொற்சுருக்கமும் பெறக்கூறியவாறு.  
      அயர்தல் - உண்டாட்டயர்தல்; உண்டு திளைத்தல், 
      வாய்மடுத்து -  
      வாயிலே வைத்து. இது அயரும் வகையைக் கூறியவாறு. இது  
      குறிப்பதற்கே மது அயர்வார் என்னாது மது வாய் மடுத்து அயர்வார்  
      என்றார்; அஃதாவது மதுவை வேறு கொள்கலத்திற் பெய்து  
      உண்ணாது நேரே வாய் வைத்து உண்பார் என்பது. இந்நாளில்  
      மதுவும் அதுபோல்வனவும் அருந்துவோர் கலத்தை வாயினுட்  
      பெய்து அருந்துதல் இதின் மரபிலே வழிவழி வந்த வழக்கம்  
      போலும்.  
       
           அயர்வார் 
      என்பதற்கு மயங்குவார் - சோர்வார் என்று  
      கூறுவாருமுளர். பறித்த களைக் கமலத்தின் புதிய தேன் வீணாகாது  
      தம் இளைப்பையாற்றிக் கொள்ள விளையாட்டாய்த் தேனை  
      வாய்வைத்து உறிஞ்சி ஆட்டயர்தலேயன்றி மதுவுண்டு மயங்குதல்  
      இங்குப் பொருளன்று என்று விடுக்க. அணிவார் - அழைப்பார் 
      -  
      அயர்வார் - என்ற வினைமுற்றுக்கள் தனித்தனி வெவ்வேறு  
      செயல்களைக் குறித்தன. இவை முன்பாட்டிற் கண்ட கடைசியர்கள்  
      என்ற எழுவாயைத் தனித்தனி தழுவி நின்றன. 
       
           அங்கை....கொடு உகைத்து 
      - வர அழைப்பார் -  
      கையாகிய மலரைக் கொண்டு, செங்குவளையை அணிய அதிலுள்ள  
      வண்டுகள் குழலிற் படர்ந்தன; அவற்றைக் கையினால் துரத்தவே  
      கைகளும் மலர் போன்றிருத்தலின்முன் வண்டுகள் போகாததோடு  
      வேறு பக்கத்திருந்தவைகளும் வந்தன. அங்கை 
      - அழகியகை;  
      அல்லது அகங்கை. 
       
           அங்கை மலர் களைக்கொடு 
      - இனி, இரட்டுற  
      மொழிந்துகொண்டு, கையிலும் மலர்கொண்டார்; அது கொண்டு  
      வண்டு ஓச்ச அதன்மேலும் வண்டுவந்தன; அதனால் அது  
      தேனுடைத்தாதல் அறிந்து அதனை வாய்மடுத்தனர்; அதனால்  
      முறுவல் பூத்தனர் - என்றுரைத்தலும் ஒன்று. அணிவாராய்  
      அழைப்பார் என்றும், அழைப்பாராகி அணிவார் என்றும்  
      கொள்ளத்தக்கது. 
       
           வெயர்வு அரும்ப - 
      களை களைந்து வேலை செய்த  
      சிரமத்தால் என்க. இக்குறிப்பினாலே முன்னர் இளைப்புத்தீர  
      தேனைத் வாய்மடுத்தயர்ந்தார் என்றுரைக்கப் பெற்றதாம். 
       
           சிறு முறுவல் தளவு அரும்ப 
      - தளவு சிறு முறுவல்  
      அரும்ப என்க. தளவு - முல்லையரும்பு. இங்கு அதுபோன்ற பல் -  
      என்ற பொருள் குறித்தது ஆகுபெயர். “நெற்றி வேர்வை நிலத்தில்  
      விழப் பாடுபடுதல்” என்பது பழமொழி வழக்கு. இவ்வாறு வேலை  
      செய்தும் மனமகிழ்ச்சி யுடையார் என்பார் முறுவல் அரும்ப என்றார்.  
      மேலே தாம் வண்டு போக்கச்செய்த செயல் அழைக்க ஆயினது  
      நோக்கத் தமக்கே நகை தோன்றிற்று என்பதும் குறிப்பு. கமலத்தின்  
      புது மது உண்ணும் உருசியினாலும் நகைதோன்றும் என்க. சிறுமுறுவல் 
      - பற்கள் சிறிது தோன்றச் செய்யும் புன்னகை. 
       
           கருங்குழன் மேல் - இதனை மேல் அணிவார் 
      என்றும்,  
      மேல் உகைத்து அழைப்பார் என்றும், கூட்டி யுரைத்துக்கொள்க. 
       
           வாய்மடுத் தயில்வார் 
      - என்பதும் பாடம்.       14 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |