65.
|
கரும்பல்ல
நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச் |
|
|
சுரும்பல்லி
குடைநீலத் துகளல்ல பகலெல்லாம்
அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்ன
வரும்பல்லா யிரங்கடைசி மடந்தையர்கள் வயலெல்லாம். |
15 |
(இ-ள்.)
அரும்பு அல்ல...வயலெல்லாம் - இவை அரும்பு
அல்ல = அரும்புபோன்ற முலையே; இவை அமுதல்ல =
அமுதுபோன்ற மொழியே என்று சொல்லத்தக்க இலக்கணம் வாய்ந்த
பல்லாயிரம் கடைசியர் மடந்தையர்கள் களைபிடுங்கிய
வயல்களிலெல்லாம்; கரும்பு அல்ல...கரும்பு என்ன - (காண்பவர்கள்)
இவை கரும்பு அல்ல நெல்லே என்னவும்; இவை கமுகு அல்ல
கரும்பே என்னவும் சொல்லும்படி; சுரும்பும்...பகல் எல்லாம் -
பகற்போதெல்லாம் நீல மலரின் துகளாலாகிய அல்லை (இரவை)
உடையன.
(வி-ரை.)
வளர்ந்துவரும் நெற்பயிரின் வளம் - நெடுமை -
முதலியவற்றை ஒருவன் தூரத்தே கண்டு இவை கரும்போ என்று
எண்ணிக்கொண்டு வந்து வயலை அணுகினான்; அணுகியபின்
இவை கரும்பென முன் எண்ணியது தவறு; இவை நெல்லே எனத்
துணிந்தனன். இவ்வாறே கமுகினைப் பற்றியும்கொள்க. சில
தன்மைகள் உள்ளமையாலே தூரத்தே ஒன்றை இன்னது எனத்
துணிவானொருவன், மேலும் அணுகிக் கண்டபோது முன் துணிந்த
பொருளுக்கு இமையாத வேறு தன்மைகளைக் கண்டு முன்
உணர்ந்தது பிறழ்வுஞானம் எனத் தெளிவான். இவ்வகையிலே
உணரும் ஞானத்தினியல்பு இங்குக் குறிக்கப் பெற்றது.
இப்பொருளாகிய நெல் - கரும்பு - முலை - மொழி -
என்பன உவமான ஞானத்தினாலே அவ்வவற்றைப் போன்ற கரும்பு
கமுகு முதலியவற்றை நினைவூட்டும் தன்மை வாய்ந்தன.
இப்பாட்டிலே பிரத்தியட்சம் - அனுமானம் - உவமானம் - சாத்தம்
(ஆகமம்) - என்ற தருக்கநூற் பிரமாணங்கள் நான்கிலும் உளதாகும்
ஞானத்தினது அளவை யறிவினை மிக உருசிபெற அமைத்திருத்தல்
காணத்தக்கது.
ஒப்புமையால் நெல் கரும்பு போலும் என்பது முதலியவையே
இங்குக் கருத்து.
நெல்லும், கரும்பும், கமுகும், நீலமும் மருத நிலத்துக்குரிய
கருப்பொருள்களாம். கரும்பும் நெல்லும் மாறி மாறி அடுத்தடுத்த
வயல்களிற் பயிர் செய்யப் பெறுதலால் அவற்றின் செழிப்பும்
வளர்ச்சியும் பற்றித் தூரத்தே அவற்றிற்கு ஒப்புமை காண்பது
இயல்பு.
கரும்பு - நெல் - கமுகு - இவை - காணப்படு பொருளும்,
பகல் - காட்சியின்காலமும், வயல் - அதன் இடமும், கடைசியர்கள்
- நிலத்து உரியமாக்களும் ஆவர் என்பது,
அரும்பல்ல முலை
- அவர்கள் தலையிலும் கழுத்திலும்
கையிலும் பல மலர்களைக் கண்டானாகிய ஒருவன் முலையினையும்
அரும்பு என்றே கொண்டனன் என்பது குறிப்பு. மேற்பாட்டிலே
குவளை - கைமலர் - கமலம் - என்று குறித்தவற்றையே தொடர்ந்து
அனுவதித்து இங்கு இவை அரும்பல்ல முலை - என்றார்.
அமுது -
இனிய நாதம் நோயைப் போக்குதலின்
அமுதமயமாம். இசை நூலில் அமுதத்தானம், நச்சுத்தானம்
முதலியவையும் பேசப்பெறும். தூரத்தே மேலே கூறியபடி
காட்சிக்குப்புலப்பட்ட நெல் முதலியவைபோலச், செவிக்குப்
புலனாகியது அவர்கள் மொழி. அவை மொழியாக
உணரப்படாமல் இனிய நாதத்தை ஊட்டியன என்பது குறிப்பு.
பகல் எல்லாம் நீலத்துகள் அல்ல - அல் - இருள்;
அல்ல -
இருளினை உடையன; பகற்போது முழுமையும் இருளினையுடையது.
இந்த அல்ல என்பதற்கும் அல்லன எனப் பொருள்கொண்டு இவை
நீலத்துள் அல்ல; ஆனால் அவற்றின் அல்லிகுடை சுரும்பு (வண்டு)
என்று உரைப்பாருமுளர். இப்பாட்டு மயக்க வணி; சொற்பின்
வருநிலையும் விரவியது; மயங்குதற்கு இருள் காரணம்;
மடந்தையர்கள் (களை பிடுங்கும்) வயல்களிலெல்லாம், கரும்பல்ல
நெல் என்னவும், கமுகல்ல கரும்பு என்னவும், பகலெல்லாம்
துகளாலாகிய அல்லை உடையன; என்று முடித்துக்கொள்க.
கயிற்றைப் பாம்பென மயங்கி யுணர்தற்குக் கோணி நீண்டு
கிடத்தலாகிய ஒப்புமையும் (மாலை) இருளும் காரணமாதல்போல
நெல்லையும் கரும்பையும் கரும்பும் கமுகுமா மயங்கி யுணர்தற்கு
நீலத்துகளாலாகிய அல்லும் அப்பயிர்களின் செழிப்பு வளர்ச்சிகளும்
காரணங்களாம். அல் - இருள் - இரவு; துகள் அல்ல -
அல்லையுடையன; அஃறிணைப் பன்மை உடன்பாட்டுக் குறிப்பு
முற்று; அல்ல - ஏனைய நான்கும் எதிர்மறை முற்றுக்கள்.
அல்லி
- அகவிதழ். (புல்லி - புறஇதழ்) 15
|
|
|
|