67.
|
காடெல்லாங்
கழைக்கரும்பு காவெல்லாங்
குழைக்கரும்பு |
|
|
மாடெல்லாங்
கருங்குவளை வயலெல்லாம்
நெருங்குவளை
கோடெல்லா மடவன்னங் குளமெல்லாங்
கடலன்ன
நாடெல்லா நீர்நாடு தனையொவ்வா
நலமெல்லாம். |
17 |
(இ-ள்.)
காடு எல்லாம் கழை கரும்பு - கழையாகிய கரும்பு
எல்லாக் காடுகளிலுமுள்ளன; கா எல்லாம் குழைக்கு அரும்பு -
சோலைகளில் எங்கும் சிறுகிளை சிறுதளிர்தோறும் மலர் அரும்புகள்
தோன்றும்; மாடு எல்லாம் கருங்குவளை - பக்கங்களில்
எங்கும்
கரிய குவளை மலர்கள் அலரும்; வயல் எல்லாம் நெருங்கு வளை -
வயல்களில் எங்கும் நெருங்கிய சங்குகள் கிடக்கும்; கோடு எல்லாம்
மட அன்னம் - (வாவிக்) கரை எங்கும் இளமையுடைய அன்னங்கள்
உண்டு; குளம் எல்லாம் கடல் அன்ன - குளங்கள் எல்லாம்
கடல்போன்ற பரப்பையுடையன; (ஆதலின்) நாடு எல்லாம்...ஒவ்வா
நலமெல்லாம் - எந்த நாடும் எந்த நலத்தாலும் சோழநாட்டிற்கு
ஒப்பாகாது. வாவி - ஆதலின் என்பனவும், வினைச் சொற்களும்
வருவித்துரைக்கப்பட்டன.
(வி-ரை.)
காடு எல்லாம் கழை கரும்பு - காடுகளில்
எங்கும் கரும்பு விளைந்துள்ளன. மனிதர் நீர்மிக்க வயல்களில்
விளைப்பன அன்றி நீர் பாயாது மழைபபெயலால் விளையும் தாவரக்
கூட்டமே காடு எனப் பெறுவன, இதனையே ஆங்கிலத்திலும் Wild
growth - Wild cane - Wild paddy - காட்டு நெல் - முதலான
பெயர்களாற் கூறுவர். இங்ஙனமின்றி வயல்களையே வளத்தின்
மிகுதியாற் காடு என்றார் என்றலுமாம். “வயற்காடு” என்ற வழக்கும்
காண்க.
ஆனால் இங்கே, கரும்பு, மனிதர் விளைவிக்க விளையினும்,
வளத்தின் மிகுதியால் காட்டுப் பயிர்போன்றன என்றலும் ஆம். காடு
எல்லாம் - ஒழுங்கின்றிக் காடுபோலத் தூரத்தே காணப்படுவன
எல்லாம். “செந்தாமரைக் காடனைய மேனி” என்ற திருவாசகமும்.
“காய்ந்த செந்நெலின் காடுசூழ் காவிரி நாடு” என்ற
திருநீலநக்கநாயனார் புராணமும்காண்க. “கடிகமழ் கமலக் காடு
பூத்தது” என்ற கம்பன் பாட்டும் நோக்குக.
கழை -
கரும்புத் தண்டு. கழை - மூங்கில் எனக் கொண்டு
மூங்கில்போற் பருத்து உயர்ந்த கரும்பு என்பதுமாம். மேலே
கமுகல்ல கரும்பென்ன” என்று கூறியதும் காண்க. கரும்பின்
(நாணற் கரும்பு) ஒருவகை என்பதுமாம்.
குழை - சிறு கிளை
- சிறு இலை (தளிர்). கிளைதோறும்
தளிர்தோறும் அரும்பு வைத்தல் செழுமையின் அறிகுறி என்க.
மாடு -
பக்கம். வயற் பக்கங்கள். வயல் நடுநிலைத்
தீவகமாய்க் கொண்டு வயல் மாடு எல்லாம் என்க. கருங் குவளை
- நீலோற்பலம்.
வயலெல்லாம் நெருங்கு
வளை - நெருங்கு வயல் என
மாற்றியுரைத்தலுமாம். நெருங்கும் (செறியும்) பயிருடைய வயல்
என்க. வளை - சங்குகள். முன் (63) “தண்டரளம்
சொரி பணிலம்
இடறி” என்றும், “வெள்வளைத் தரளம்” என்றும், கூறினமையும்
காண்க.
கோடு -
வாவிக் கரை. வாவிகள், தாமரை முதலிய
நீர்ப்பூக்கள் நீர்ப் பறவைகளுக்கிடமாகி, மாக்களும் மக்களும்
அருந்துதற்கும் ஆடுதற்குமிடமாய் உள்ள சிறிய நீர்நிலைகள்.
சிறுபான்மை பயிருக்கும் உதவும். குளம் - நீர்ப்பாய்ச்சற் கேதுவாய
பெரு நீர்நிலைகள்.
கடல் அன்ன
- நீர் நிறைந்த பரப்பினாலும் உதவியினாலும்
குளங்கள் கடல் போன்றன என்க. கடல், மழையை உதவிப் பயிர்
வளர்க்கின்றது போலக் குளங்களும் பயிர் வளர்க்கின்றன.
“பாரவன்காண்
பாரதனிற் பயிரா னான்காண் பயிர்வளர்க்கும்
துளியவன்
காண் துளியில் நின்ற, நீரவன்காண்..”
(திருத்தாண்டகம்
- சிவபுரம் - 6) |
“....ஏரிநிறைந்தனைய
செல்வன் கண்டாய்..” என்பன அப்பர்
சுவாமிகள் திருவாக்கு.
வெளித் தூரத்தே நின்று கரும்பு என்று நினைத்தவன்,
பக்கத்தே வந்து கரும்பு அல்ல நெல் என்று உணர்ந்தது முதலிய
காட்சியும் உணர்ச்சியும் முன் 65-வது பாட்டிற் கண்டோம். இனி
அவ்வாறு வெளியே யிருந்து கண்டு, வயலுள் வந்த ஒருவன்,
இங்கிருந்து வெளியே தூரத்தே பார்க்கும்போது, காடெனக் கண்டது,
பின்னர்ச் சென்று காடன்றிக் கரும்பாகக் கண்டான்; பின்னரும்
அணித்தாகச் சென்று சோலையின் அரும்பும் செழுமை கண்டான்;
வயலினின்று வெளிச் செல்லும் வரம்பு வழியில் குவளையும் சங்கும்
கண்டான்; வெளிப்போந்த அணிமையில் வாவியும் கரையில்
அன்னமும் கண்டான்; பின்னரும் வெளிப்போகக் கடல் போன்ற
குளங்கண்டான்; அதன் அப்புறம் பிறநாடு கண்டு அவை எவையும்
இந்நாட்டுக்கு ஒவ்வா என்று தெளிந்து கொண்டான்; எனத்
தொடர்பாய் ஒருகதைபோல வரும் உருசியான இயற்கை
வருணனையின் அழகு காண்க.
நாடு எல்லாம் - நலம்
எல்லாம் - எந்த நாடும் எந்த
நலத்தாலும் என்க. மேல் மூன்றடிகளிற் குறித்த காரணங்களாற்
எந்நாடும் எந்நலத்தினும் நீர்நாட்டினை ஒவ்வாது என்பது. இங்கு
எல்லாம் என்பதற்கு மேல் மூன்றடிகளிற் கொண்டது போலல்லாமல்
ஒரு நாடும் ஒரு நலமும் என்று பொருள் கொள்ளப்பெற்றது.
அவ்வாறன்றி ஏனையவற்றைப்போலவே கொண்டால், சில நாடு சில
நலங்களால் ஒவ்வுமென்று தருக்க முறையிற் பொருள் பெற்று
இழுக்காகுமாறு உணர்க.
நீர்நாடு
- சோழநாடு (காவிரி நீர் பொய்க்காது பெருகிப்
பாய்தலால்). நாட்டின் அணியை ஏற்றவாறு இப்பாட்டிலே
சொல்லணியாலும் நாட்டியவாறு காண்க. "நாடென்ப நாடா
வளத்தன" என்ற குறட்கருத்தை இங்கு பொருத்திக் காண்க. 17
|
|
|
|