68. ஆலை பாய்பவ ரார்ப்புறு மோலமுஞ்  
  சோலை வாய்வண் டிரைத்தெழு சும்மையும்
ஞால மோங்கிய நான்மறை யோதையும்
வேலை யோசையின் மிக்கு விரவுமால்.

18

     (இ-ள்.) ஆலை...ஓலமும் - ஆலை பாய்ச்சுவர் கூவும்
சத்தமும்; சோலை...சும்மையும் - சோலைகளிலே வண்டுகள் பல
சேர்ந்து செய்யும் சத்தமும்; ஞாலம்... ஓதையும் - உலகத்தை ஒங்கச்
செய்யும் வேதச் சத்தமும்; வேலை...விரவு மால் - கடற் சத்தத்தினும்
பெரிது முழங்கிக் கலந்தன.

     ஓலமும் - சும்மையும் - ஓதையும் - ஓசையின் மிக்கு விரவும்
என்க.

     (வி-ரை.) பாய்பவர் - பாய்ச்சுபவர், பிறவினை தன்வினையாக
வந்தது. ஆலை பாய்பவர் - அலையிற் பாய்ச்சுபவர். அஃதாவது,
ஆலையிற் கரும்பினையும், பிழிந்த சாற்றைக் காய்ச்சு கலன்களிலும்,
காய்ச்சிய சாற்றினைத் தட்டுகளிலும், கட்டிகளைக் கொள்
கலன்களிலும் பாய்ச்சுபவர்; செல்ல வைப்பவர்கள். ஆர்ப்புறும் -
ஆரவாரம் செய்யும்.

     ஓலம் - சும்மை - ஓதை - ஓசை - சத்தத்தின் பற்பல
பெயர்கள், பல்வேறு வகைச் சத்தங்களைப் பல்வேறு பெயர்களாற்
குறித்தனர். பின்னரும் இவ்வாறே காண்க. இஃது ஆசிரியர்
சேக்கிழார் சுவாமிகளின் கவித் தனி மான்புகளில் ஒன்று.
கண்ணப்பர் புராணம் - 34; திருக்குறிப்பு - புராணம் - 98
முதலியவை காண்க.

     சோலைவாய் - சோலையினிடத்து. வாய் ஏழாம்
வேற்றுமையுருபு. சோலை (யிலே) வண்டு வாயினால் இரைத்தும்
எழுந்தும் உண்டாக்கும் சும்மை எனினும் ஆம். வண்டு
ஊதுதலினாலும் பறத்தலினாலும் சத்தம் உளதாம்; ஆதலின் இரைத்து
எழும் - உம்மைத் தொகையாக்கி இரைத்தும் - எழுந்தும் என்க.

     ஞாலம் ஓங்கிய நான்மறை - உலகத்தை மேன்மை
பெறச்செய்யும் வேதங்கள். ஓங்கிய - ஓங்கச் செய்த எனப்
பிறவினைப் பொருளில் வந்தது. மேலே [திருமலைச் சிறப்பு - 4]
“மேன்மை நான்மறை நாதமும்” என்ற இடத்துக் காண்க. உலகத்தார்
ஒதி யுணர்ந் தொழுகி யுய்யும் பொருட்டு இறைவர் வேதங்களை
அருளிச்செய்தனர் என்ற உண்மை உணர்த்தப்பட்டது காண்க.
வேதம் பயிலிடங்களும் வேள்விச் சாலைகளும் அமையும் இடமும்
குறித்தபடி.

     வேலை ஓசையின் மிக்கு விரவும - மருதநில ஒழுக்கம்
நெய்தல் நிலத்து எல்லை வரை பரவுகின்றது. எனவே, மருதத்
தொழிலாகிய கரும்பு அடுகின்ற துழனியும், மருதச்சோலைகளின்
ஓசையும், மருதநிலத்து ஊர்களை அடுத்து வெளிப்புறத்து அமைந்த
வேதம்பயி லிடங்களினின்று போந்த மறையோசையும் பயின்று
விரவின. இம்மூன்றும் ஒன்று சேரவே, பக்கத்திருந்த கடல்
ஓசையினும் (நெய்தல்) மிகுந்திருந்தது என நயம் பெறக் கூறினவாறு.

     விரவும் - சும்மை ஒசை பொருளற்ற சத்தங்கள்; ஓலம் -
ஓதை பொருள் உள்ள சத்தங்கள். இரண்டு (தனித்தனி
பொருள்உள்ளன ஆயினும்) சேர்ந்தபோது அத்தன்மைபோய்ச்
சந்தை இரைச்சல்போல் ஒரேசத்தமாகக் கேட்பனவாயின


     மருதத்திணையின் தொழிலும், மள்ளர் முதல் மறையோர்
வரை அங்குள்ள மக்களின் வகையும் கூறப்பெற்றன. மேலே
கமுகல்ல கரும்பு - கழைக்கரும்பு - என்று குறித்த கரும்பினது
செய்வினைகளையே தொடர்ந்து தொடங்கி இப்பாட்டிலே கரும்பு
முற்றியபின் - அலை பாய்பவர் - என எடுக்கப்பெற்றமை காண்க.
காவெல்லாம் குழைக் கரும்பு என்றதை அனுவதித்து அவ்வரும்புகள்
மலர்ந்தபின் மொய்த்த வண்டுகளின் ஒசையினை வண்டிரைத்தெழு
சும்மை என்றார்.

     காவிரிப் புதுநீர் வருதல் முதல், முறையே, நாற்று நடுதல் -
களை பறித்தல் - பயிர் வளர்தல் முதலிய செயல்களைக்
கூறிவந்தமை காண்க. பெரும்பான்மை பற்றி நெல்லுக்குக் கூறியவை
அவ்வவற்றிற்கேற்றபடி கரும்புக்கும் சோலைக்கும் கொள்க. சோலை
பூக்களுக்காகவும் பழங்களுக்காகவும் வைக்கப்பெறுவன. முன்னே,
சோலையும், அடுத்துக் கரும்பு, அவற்றை அடுத்து நெல்லும்
உள்ளன. இவற்றை அடுத்து, ஊருக்கு வெளியே தடமும், வேள்விச்
சாலையும், வேதம் பயிலும் இடங்களும், கல்வி பயிலிடமும்
அமையும். இஃது அந்நாள் மருதத் திணையின் நாடு நகரங்களின்
அமைப்பு. இவற்றைக் கடந்த பின்னரே ஊரைச் சேரலாம்.
சண்டேசுர நாயனார் புராணம் - 3,4,5, பாட்டுக்களும், பிறவும்
அங்கங்கே கண்டுகொள்க.

     இக்காரணம் பற்றியே “கரும்பல்ல நெல்லென்ன கமுகல்ல
கரும்பென்ன” எனவும், “காடெல்லாம் கழைக்கரும்பு கா எல்லாம்
குழைக்கரும்பு” எனவும், மேலே கா - கரும்பு - நெல் - இவற்றைச்
சேர்த்துக் கூறியதென்க. இதுபற்றியே இப்பாட்டிலும் ஆலையும்
சோலையும், மறையோதையும் சேர்த்துக் கூறியவாறாம். பின்னரும்
களமராலையும் - பெரும் பெயர்ச்சாலையும் (77) - (நாளிகேரம்)
செருந்தி முதலியவை பொருந்திய சோலையும் (78) (79)- சேர்த்துக்
கூறுவதையும் காண்க. அவ்வப்பயிர்கள் வளர்ந்து பயன்றரும் கால
அளவுகளைப் பின்பற்றியே கூறிக்கொண்டு போகும் முறைமையும்
காண்க. மரங்கள் நாட்சென்று பலன் றருதலால் பின்னர்க்
கூறப்பெற்றமையும் உணர்க. பிறவும் இவ்வாறேயாம். 18