69. |
அன்ன
மாடு மகன்றுறைப் பொய்கையிற் |
|
|
றுன்னு
மேதி படியத் துதைந்தெழுங்
கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன
மன்னு வான்மிசை வானவிற் போலுமால். |
19 |
(இ-ள்.)
அன்னம்...படிய - அன்னங்கள் விளையாடுகின்ற
பெரிய துறைகளையுடைய வாவிகளிலே கூட்டமாகிய எருமைகள்
வீழ்ந்து முழுகுதலால்; துதைந்து...பாய்வன - வாளையின் இளமீன்கள்
நிரம்ப எழுந்து அருகிலிருக்கும் சோலையின் கமுக மரங்களின் மேற்
பாய்கின்ற தோற்றம்; மன்னும்...போலுமால் - எங்கும் பொருந்திய
வானத்திலே தோன்றி மறையும் வானவில்லைப் போன்றிருக்கும்.
(வி-ரை.)
அன்னம் ஆடும் அகன்றுறை - முன் 67-வது
பாட்டில் கோடெல்லாம் மடவன்னம் என்றதைத் தொடர்ந்து
கொண்டு, அந்த அன்னங்கள் ஆடுகின்ற துறையுடைய பொய்கை
என்றார். அன்னம்போன்ற பெண்கள் குளிக்கும் துறை என்றும்
கூறுவர்.
துன்னும் மேதி படிய -
எருமைகள் கூட்டமாகச் செல்லும்
இயல்புடையன அன்றியும் வாவிகளில் புகுந்து கடிதின் உழக்கி
நீண்டநேரம் கிடக்கும் தன்மையுமுடையன. உருவிற் பெரியனவும்
அறிவிற் சிறியனவும் ஆகிய இவை அப்பொய்கையில் வாழ்ந்து
விளையாடும் அன்னம் வாளைகளுக்குத் தமது செயலால் இன்னல்
விளைப்பன என்பதும் குறிப்பு. இவ்வாறு எருமைபோல உலகிலே
பல துறையிலும் உழக்கி ஒழுகிப் பிறர்க்கும் இன்னல் தரும் மாக்கள்
பலர். அவர்க்கு அறிவுறுத்திய குறிப்புமாம்.
துதைந்தெழுங்
கன்னி வாளை - கூட்டமாய் ஒன்றன்பின்
ஒன்றாய் எழுவது இளவாளைகளின் இயல்பு. வாளை மிக உயரமுந்
தூரமும் குதித்துப் பாயும் இயல்புடையன. ஆதலின் கன்னிவாளை
கமுகின் மேற்பாய்வன என்றார். கமுகு வாவியின் கரை அருகே
சோலையில் உள்ளது. மேதிக் கூட்டத்தையும் வாளைக்
கூட்டத்தையும் குறிப்பார் முறையே துன்னும் என்றும், துதைந்து
என்றும் அடைகொடுத்துக் கூறினார்.
மன்னும் வான்மிசை வானவில்
போலும் - வாளைகள்
பல நிறங்களுடன் மின்னுவன. நீரினின்றும் வெளிக்குதித்துப்
பாயும்போது சூரிய ஒளியில் அந்நிறங்கள் நீர்நிறத்துள்ளே பலவாகி
விளங்கிக் காட்டவே, இவையும் வானவில்லின் ஏழு நிறங்களைப்
போல ஒன்றோடொன்று விரவிப் பல நிறங்களைக் காட்டி மின்னும்.
அன்றியும் பாய்ந்துவரும் வளைவு வில்வட்ட வடிவம்போலும்.
சோலையும் வாவியும் வானம்போல நீலமுடையன. இவற்றிற்கிடையே
வரிசையாய் மின்னும் வாளைகள் வானவில் போன்றன என்க. வான்
அசையாது நிற்க வில் மட்டும வந்து போகுமாதலின் மன்னும் வான்
என்றார்.
மடையில் வாளை பாய மாதரார், குடையும் பொய்கைக்
கோலக் காவுளான் என்ற தேவாரத்திலும் வாளை பாயும் இயல்பு
விளக்கப்பெற்றமை காண்க. 19
|
|
|
|