7. செப்ப லுற்றா பொருளின் சிறப்பினால்
 
  அப்பொ ருட்குரை யாவரும் கொள்வரால்
இப்பொ ருட்கென் னுரைசிறி தாயினும்
மெய்ப்பொ ருட்குரி யார்கொள்வர் மேன்மையால்.
7

     (இ-ள்.) செப்பல்......சிறப்பினால் - சொல்லற் பெறப்படும் பொருள் சிறந்ததானால், அதனைச் சொல்லும் சொல்
சிறந்ததல்லாவிட்டாலும் அதுபற்றி யிகழாது, பொருளின் சிறப்பையே
நோக்கி; அப்பொருட்கு...கொள்வர் ஆல் - அப்பொருளைச்
சொல்லும் சொல்லை யாவர்களும் கைக்கொள்வர்; (அதுபற்றியே)
இப்பொருட்கு....ஆயினும் - இதனுள்ளே குறித்த அடியார்களது
வரலாறும் பண்புமாகிய பெரும் பொருளுக்கு எனது சொல்
சிறிதேயானாலும்; மெய்ப் பொருட்கு....மேன்மையால - உண்மைப்
பொருளையே உணரும் உரிமையுடைய பெரியோர் இதனை அந்த
மேன்மை பற்றிக் கைக்கொள்வர்.

     (வி-ரை.) இப்பாட்டில் முதலிரண்டடிகளிற் கூறியது ஒரு
பொது உண்மை; அவ்வுண்மையைப்பற்றிப் புன்உரையும் கொள்வர்
என்று அவைஅடக்கம் கூறியவாறு.


     செப்பலுற்ற பொருள் - ஒருவன் சொல்லப் புகுந்த பொருள்.
இவ்வாறன்றித்“தம்பொருள் என்ப தம்மக்கள” - (குறள்)
என்றதிற்போலப் பொருள் என்பதை மக்கள் என்று கொண்டு,
மக்களின் சிறப்பு நோக்கி அவர் வாயில் உரைக்கும் பாச்சி -
சோச்சி முதலிய உரையும் கொள்ளுவர் என்றுரைப்பாரு முளர்.

     மெய்ப்பொருட்கு உரியார் - உண்மை காணும் விருப்புடைய
பெரியோர். பிறர் (பொய்ப்பொருள் கருதுவோர் முதலிய பிறர்)
கொள்ளாவிடினும் இவர் கொள்வர் என்க. மெய்ப்பொருள் -
இறைவன் எனக் கொண்டு, அவனுக்குரியார்; அவனது அடியார்
என்றலுமாம்.

     “தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்; எம்மை யுடைமை எமையிகழார் - தம்மை, உணரார் உணரார்
உடங்கியைந்து தம்மிற், புணராமை கேளாம் புறன்” என்பது -
சிவஞானபோதம்.

     மேன்மையால் -
பொருளின் மேன்மையால் என்க. தங்கள்
மேன்மையால் என்றுரைப்பினுமாம். அப்பொருட்கு உரை - அப்பொருளை உரைக்கவந்த உரை. உரை பொருளுக்கு ஏற்பத்
தகுதியற்றதாயினும் என்க.

     இப்பொருட்கு - இந்தப் புராணத்திற் போந்த பொருளுக்கு.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்,
மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்ற திருக்குறட் சொல்லையும்
கருத்தையும் இங்கு வைத்து நோக்குக. 7