75.
|
வைதெரிந்
தகற்றி யாற்றி மழைப்பெயன் மானத்
தூற்றி |
|
|
செய்யபொற்
குன்றும் வேறு நவமணிச் சிலம்பு
மென்னக்
கைவினை மள்ளர் வானங் கரக்கவாக் கியநெற்
குன்றான்
மொய்வரை யுலகம் போலு முளரிநீர் மருத
வைப்பு.
|
25 |
(இ-ள்.)
வை.....தூற்றி - வைக்கோலைப் பிரித்து எடுத்து
வேறிடத்திற் போக்கி, நெல்லை முறங்கொண்டு வீசி மழை தூற்றுவது
போலத்தூற்றி; செய்ய...நெற்குன்றால் - சிவந்த பொன்மலையும்
வெவ்வேறாகிய நவமணிக் குன்றுகளும் என்று சொல்லும்படி
கைத்தொழில் வல்ல மள்ளர்கள் ஆகாயத்தை மறைக்கும் படி
உயர்த்திச் சேர்த்த நெற்குன்றுகளால்; மெய்...வைப்பு - நிறைந்த
மலைகளையுடைய குறிஞ்சி நிலத்தைப்போல இருந்தது தாமரை
பூத்த நீர் பொருந்திய மருதநிலம்.
(வி-ரை.)
மேற்பாட்டிற் சொல்லிய செயல்களுக்குமேற்
செய்யக்கடவன வாகிய வைக்கோல் அகற்றி உதறுதல் - பதர்
போகத் தூற்றுதல் - நெற்களை வகைப்படுத்திப் பிரித்துச் சேர்த்தல்
எனும் இச்செயல்களை இப்பாட்டிலே கூறினார்.
பொற்குன்று - நவமணிச்சிலம்பு
- செந்நெல்லுக்கும்,
அதினின்று வேறாகிய வெண்ணெல் - சூட்டுநெல் முதலியவற்றிற்கும்
உவமை. செந்நெல்லே சிறந்து மிகுதியாயினமையின் அதனை வேறு
பிரித்துப் பொற்குன்று எனவும், மற்றவை வெவ்வேறு நிறத்தனவாய்ச்
சிறுசிறு அளவிலே, குவிந்தன ஆதலின் நவமணிச் சிலம்பு எனவும்
கூறினார். வேறு - வெவ்வேறு என்க. நவமணி பலவகைகளைக்
குறித்தது. செந்நெல்லின் சிறப்பை அரிவாட்டாய நாயனார்
புராணத்திலே காண்க.
சிலம்பு
- சிறு குன்றுகள் என்க. சாதிஒருமை. இவ்வாறன்றி
நவமணிகளும் கலந்த ஒரு கலவைக்குன்று என்று ஒருமையின்
உரைப்பினுமமையும்.
கைவினை மள்ளர்
- முன் 63 முதல் 66 வரை
திருப்பாட்டுக்களிலே கடைசியராகிய மகளிர் செய்யும்
செயல்களைச்சொல்லியும், களைப்பதம் காட்டல் முதலிய உழவர்
செயலுட் சிலவற்றைச் சொல்லியும், காட்டிய ஆசிரியர் மள்ளர்களின்
கைவினைத் திறத்தை அவர் செய்தொழில் வகையாலே இப்பாடடிற்
கூறினார். மள்ளர் கைவினையாவது தெரிந்து ஆற்றுறல் - தூற்றுதல்
- நெல் வகைப்படுத்துச் சேர்த்தல் முதலியன.
தெரிந்து
- (ஆய்ந்து); அகற்றி - தூற்றி - ஆக்கிய
-
என்ற ஒவ்வொன்றும் தனித்தனி நெல் ஒப்படை செய்தற்கான
தொழில்களைக் குறித்தன. இவர்களது கைவினைத் திறம்
நலமில்லாததாயின், நெல் வைக்கோலிற் போகியும், நெல்லும் பதரும்
கலந்தும், பலதிற நெற்கள் கலந்தும் ஊறு விளைக்கும்; ஆதலின்
திறம் என்றார்.
வானம் கரக்க
- ஆகாயத்தையும் மறைக்கும்படி
உயர்ந்தனவாய். தேவவுலகமும் வெட்கி மறைந்து கொள்ளும்படி
என்றலுமாம். என்னை? வரும் பாட்டிற் காணுமாறு, இவ்விளைவு
கொண்டு அறங்கள் பேணுதல், கடவுட் போற்றுதல் முதலிய செய்கை
தேவவுலகத்தில் இன்மையால் அவ்வுலகம் நாணி மறைதற்குக்
காரணமாயிற்று என்க. அன்றியும் இந்நெல்லினாலே அறமும்
பூசனையும் ஆம் - அவற்றால் மழை ஆம் - அதனால் (முகிற்
கூட்டம் சேர) வானம் மறையும் என்ற முறையினையும்
குறிப்பினாலுணர்க.
நெற்குன்று
- பலவகை நெற்குவியல்கள். சிலம்புக்கு
உரைத்ததுபோற் கொள்க.
மருதம் -
மருதநிலம் இந்த மலைகள் உள்ளதனாற் குறிஞ்சி
நிலம் போலும் என்ற நயமும் சுவையும் பெறக் கூறினார்.
“செந்நெற்குப்பைகள் செம்பொனின் குன்றம் ஒத்தன” என்று கூறி
விடுத்தனர் சிந்தாமணியார். அதனோடமையாது சுவாமிகள் இங்குப்
பலவகை நெற்குவைகளி னுண்மையை எடுத்துக் காட்டிய தன்றியும்
மருதத்திலே குறிஞ்சியைக் காணும் திணைமயக்கம் எனும் தமிழ்
இலக்கணச் சுவையையும் காட்டியது காண்க. நீர் நாட்டில்
இம்மலைகளையன்றி வேறு மலைகளினது அருமையும் இங்குக்
குறித்தவாறு காண்க.
வைப்பு
- சேமநிதி. பொன்னும் நவமணிகளும் கூறியதற்கேற்ப
வைப்பு என்றார். இந்நெல்லே எல்லாச் செல்வமும் சீரும் சிறப்பும்
தருமென்பது குறிப்பாம். நென்மணி என்னும் வழக்கும் குறிக்க. 25
|
|
|
|