76. 
             
             | 
          அரசுகொள் 
            கடன்க ளாற்றி மிகுதிகொண்  
                                     டறங்கள் 
            பேணிப்  | 
            | 
         
         
          |   | 
          பரவருங் 
            கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும்  
                                            பண்பின் 
            விரவிய கிளையுந் தாங்கி விளங்கிய குடிக  
                                            ளோங்கி 
            வரைபுரை மாட நீடி மலர்ந்துள பதிக ளெங்கும். | 
          26 | 
         
       
       
       (இ-ள்.) 
      அரசுகொள்...ஆற்றி - (முன் கூறியவாறு ஆக்கியநெற்  
      குவைகளில்) அரசர்க்குச் செலுத்தவேண்டிய ஆறில் ஒருபங்கு  
      கடமையைச் செலுத்திய பின்; மிகுதி...தாங்கி - (எஞ்சிய விளைவைக்  
      கொண்டு) ஆங்கு முதலிற் செய்யக் கடவனவாகிய தருமங்களை  
      விரும்பிச் செய்து. பரவுதற்குரிய அரிய கடவுட் பூசையைப் பாராட்டிச்  
      செய்து, தென் புலத்தார்களையும் விருந்தினரையும் ஒழுக்கமுடைய  
      சுற்றத்தாரையும் ஓம்பி, அதனால்; விளங்கிய குடிகள் ஓங்கி -  
      விளக்கம் பெறும் குடிகளால் செழித்து; வரை...எங்கும் -  
      மலைபோன்ற மாடங்கள் அந்நாட்டுப் பதிகள் எங்கணும்  
      நீடியுள்ளன. 
       
           (வி-ரை.) 
      விளங்கிய குடிகள் ஓங்கி - குடிகள்  
      விளங்குதற்கும், மேலும் பெருகி ஓங்குதற்கும், காரணம், ஆற்றுதல் -  
      பேணுதல் - போற்றுதல் - தாங்குதலாகிய நற்செய்கைகளேயாகும்  
      என்பது குறிப்பு. முன்னர் விளங்கியதற்கும், பின்னரும் ஓங்கி  
      வளர்தற்கும் இவையே காரணம் என்பார் குடிகள் என்பதனை  
      இடையில் வைத்தார். 
       
           அரசுகொள் கடன்கள் 
      ஆற்றுதல் அரசுக்குச்  
      சேரவேண்டிய பகுதியாகிய ஆறில் ஒரு பங்கு இறைப்பொருளின்  
      கடமையைச் செலுத்துதலாம்.இறைப் பொருளை முறையாகச்  
      செலுத்துதல் குடிமக்களின் கடமையாதலின் கடன் என்றும், அவை  
      காலத்தாலும் இடத்தாலும் மற்றும் பலவற்றாலும் (வேறு வரி  
      வகைகளும் கூட்டி) மேலும் பலவாய்ப் பின்னரும்  
      திகரிப்பனவாதலின் கடன்கள் என்றும் கூறினார். இது குடிகளின்  
      கடமைகளில் முதற் கடமையாம் என்பார் தெய்வத்தின் முன்னரும்  
      வைத்து முதலிற் கூறினார். வரிகொடா இயக்கம் முதலிய இக்காலத்  
      தோற்றங்கள் அந்நாள் தமிழ்மக்களுக்கு உடன்பாடன்றாம் என்பது  
      இதனால் விளங்கும். 
       
       
      
         
          “தென்புலத்தார் 
            தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் 
            கைம்புலத்தா றோம்பல் தலை” | 
         
       
       
      என்ற நாயானார் நியதிப்படி 
      ஒழுகுவோர் இந்நாட்டுமக்கள் என்பதை  
      இப்பாட்டினாற் குறித்தனர். 
       
           “இவ்வைந்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலின் அரசற் 
       
      கிறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று” என்ற உரையாசிரியர் கூற்றும்  
      காண்க. குடிமக்கள் இக்கடன்களைக் கொடாக்கால் அரசு தாமே  
      கொள்வதற் குரியதாம் - என்ற குறிப்புத் தோன்ற கொள்கடன்கள்  
      என்றார். இறைப்பகுதி அரச அங்கத்தையும் உள்ளிட்டதாதலின்  
      அரசர் என்னாது அரசு என்றதாம். 
       
           அரச இறையை வெள்ளி முதலிய நாணயத்தால் நிச்சயித்து 
       
      விளைவுகளை வெள்ளி முதலிய நாணயங்களாக மாற்றி அரச இறை  
      செலுத்துதல் இந்நாள் ஆங்கில ஆட்சியின் பிற்கால முறை. முன்  
      நாளிலே விளைவுகளில் ஆறில் ஒருபங்கே அரசுகொண்டது.  
      ஆதலின் நெல்விளைவு கூறிய உடன் அரசிறை செலுத்தல் கூறினார்.  
      இதுவே முறையாம் என்பது அந்நாள் அரசாங்க அமைச்சராகிய  
      ஆசிரியர் கருத்துமாம். பண்டமாற்றிற்கு உதவுதற்காகச் சங்கேதமாய்  
      மனிதர் தரும் சத்தியைப் பெற்றதாய்க், கொள்வோரும் தருவோரும்  
      என்ற இருவர்களின் இடையும், பண்டங்களினிடையிலும் இடைப்  
      புகுதலேயன்றி வேறு தனக்கென்று பொருளும் நாணயமும் மதிப்பும்  
      அற்றதாய் உள்ள, பொன், வெள்ளி, ஈயம், காகிதம் முதலிய  
      நாணயமென்ற பேர்கொண்ட பொருள்களை இங்கு ஆசிரியர்  
      அரசுக்கும் குடிகளுக்கும் இடையிட்டுக் கூறினாரில்லை.  
      அக்காலத்துப் பண்டமாற்று முறையும் இவ்வாறேயாம்.. இதனைத்  
      திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் முதலியவற்றுட் காண்க.  
      விளைபொருளின் ஒரு பகுதியளவே கொள்ளப்பெறாமல் நாணய  
      மாற்றுக்கொண்டு அரசிறை நியமனம் பெற்ற அன்றைக்கே  
      உழவர்களின் சங்கடங்கள் தொடங்கின என்று பொருள் நூலார்  
      காணும் துணிபும் இங்கே வைத்து உணர்தற்பாலதாம்.  
       
           மிகுதி 
      கொண்டு - அரசிறைக் கடன்கள் செலுத்தியபின்  
      எஞ்சிய விளை பொருட்பகுதி, மாதவர் நோன்பும் மடவார் கற்பும்  
      காவலன் காவலின்றித் தங்கா ஆதலினாலும், அரசன் காவலே  
      குடிகட்கு ஐவகைப் பயமும் தீர்த்து அறங்காத்தலுக்குக்  
      காரணமாதலாலும், அதனையன்றி இவ்விளைவு உண்டாமாறு  
      இல்லையாதலாலும், அரசிறை செலுத்தலே குடிகளின் முதற்கடமை  
      என்றும், அது செலுத்திய மிகுதியே பிற எல்லா வற்றிற்கும்  
      உதவல்வேண்டும் என்றும் கூறுவார், அதனை முதலில் வைத்தது  
      மன்றி மிகுதிகொண்டு என்றும் வற்புறுத்திக் கூறினார். முன்னைய  
      தமிழ் ஆசிரியர்களுக்கும் இதுவே கருத்தாகுமாறும் காண்க.  
      வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு முதலிய பின்னாள் நிகழ்ச்சிகளை  
      இதனோடு ஒப்பிட்டு உயர்வு தாழ்வு கண்டுகொள்க. 
       
           கடன்கள் 
      - இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கது.  
      பின்வரும் பிறவும் இவ்வாறே காண்க. 
       
           கடவுள் - நாயனார். தெய்வம் என்றதும் 
      இது. தெய்வத்தை  
      ஓம்பும் முறை நூல்களில் விதிப்படி போற்றுதலேயாம். ஆதலின்  
      போற்றி என்றார். 
       
           குரவர் 
      - தாய் தந்தை முதலிய முன்னோரும், அவர்க்குப்  
      “பிரதிநிதி” களாகிய தென்புலத்தாரும் ஆம். தென்புலத்தாரைப்,  
      “படைப்புக் காலத்தில் அயனார் படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி”  
      என்பர் பரிமேலழகியார். 
       
           குரவரும் - விருந்தும் 
      - கிளையும் - தன்னொடு சேர்ந்து  
      தொடர்பு பற்றி வருதலின் இம்மூவகையையும் [தென்புலத்தார் -  
      விருந்து - ஒக்கல் - (குறள்)] ஒன்று சேர்த்துத் தாங்கி என்று ஒரே  
      வினையெச்சத்தாற் கூறினார். 
       
           அறஞ் செய்தற்கும் இக் குறித்த ஏனைய வினைகளைச் 
       
      செய்தற்கும் தான் உளனாக வேண்டுவது இன்றியமையாதாகலின்  
      தன்னைப் பேணுதல் அறச் செய்கையின் பாற்படும். அன்றியும்  
      விருந்தோம்பலும் சுற்றந்தழுவலும் கூறவே தன்னை ஓம்புதலும்  
      சார்புபற்றிக் கொள்ளநிற்கும். ஆதலின் அதனை வேறு பிரித்துக்  
      கூறினாரில்லை என்க. அறநூலார் “தான்” என்று காட்டியது  
      அறவகையை அளவுபடுத்திக் காட்டி இலக்கணம் வகுத்தற்  
      பொருட்டாமென்க. 
       
           பண்பின் விரவிய 
      - நல் ஒழுக்கம் பொருந்திய கிளையே  
      தாங்குதற் குரியது ஆதலின் பண்பின் விரவிய என்றார். 
       
           வரைபுரை மாடம் 
      - மலைகளை ஒத்த மாடங்கள். இவை  
      பதிகளின் வாழ்வாரது செல்வத்திற்கு அறிகுறியாகலின் மலர்ந்துள  
      என்றார். மலர்தல் - விளக்கம் பொருந்தி 
      யிருத்தல். விளைவிலே  
      “தான்” கொள்ளநின்ற பகுதி ஆறில் ஒரு பங்கே என்க. அந்த  
      ஆறில் ஒன்றிலே, தான், உண்டதுபோக எஞ்சியதைக் கொண்டு  
      செல்வ மாடங்களை அமைத்தார்கள் என்று அவர்களது வாழ்க்கைச்  
      சிறப்பும், அந்நாள் நாட்டுச் சிறப்பும், கூறியவாறு, சோழநாட்டுத்  
      தஞ்சைச் சில்லாக் குடிகள் இந்நாளில் வரிதானும் கொடுக்க  
      இயலாது படும் சங்கடங்களின் காரணங்களை ஒப்புநோக்கி இங்கு  
      உய்த்துணர்தல் நலம் தருவதாகும். அறநூல்கள் விதித்த  
      ஒழுக்கத்தின் வழுவிய நிலையே எல்லாக் கேடுகளுக்கும்  
      காரணமாமென்க. 
       
           எங்கும் - எங்கும் மாடம் மலர்ந்துள 
      என வினைமுடிபு  
      கொள்க.   26 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |