78 நாளிகே ரஞ்செ ருந்தி நறுமலர் நரந்த மெங்கும்  
  கோளிசா லந்த மாலங் குளிர்மலர்க் குரவ
                               மெங்குந்
தாளிரும் போந்து சந்து தண்மலர் நாக மெங்கு
நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்க
                               மெங்கும்.
28

     (இ-ள்.) வெளிப்படை.

     (வி-ரை.) நாளிகேரம் - தென்னை. செருந்தி - மஞ்சட்பூப்
பூக்கும் ஒருவகைப் பூ மரம். “செருந்தி செம்பொன் மலர் திருநெல்
வேலியுறை செல்வர் தாமே” - என்பது திருஞானசம்பந்த நாயனார்
தேவாரம். செருந்தி என்பதற்கு - வாட் கோரை - மணத்தக்காளி
என்றும் உரை கூறுவர். அவை ஈண்டைக்கு ஏலாமையின் விடுக்க.


     நரந்தம் - நாரத்தை. இதன் பூக்களின் மணம் மிகுதி பற்றி
நறுமலர் என்றார்.

     கோளி - அரசு; சாலம் - கடம்பு. மரா என்றும் ஆச்சா
என்றும் கூறினும் ஆம்; தமாலம் - பச்சிலை மரம். “சம்பக மாதவி
தமாலங் கருமுகை” என்ற சிலப்பதிகாரம் காண்க.

     குளிர் மலர்க் குரவம் - குளிர்ச்சி தரும் மலர்களையுடைய
குராமரம். இது சிவபெருமானுக் குகந்தமலர் என்பது “குராமலரோ
டராமதியம் சடைமேற் கொண்டார்” என்ற திருத்தாண்டகத்தால்
விளங்கும்.

     தாள் இரும் போந்து - வலிய பெரிய அடிப்பாகத்தையுடைய
பனை. தாள்இரும் - இருந்தாள் என மாற்றுக. பனையின்
அடிப்பாகம் பெருத்தும் வலிமை பெற்றும் உள்ள தென்பது. தாள் -
அடிப்பக்கம் - “பனந்தாள்”, பனையின் அடியில் இறைவன்
வீற்றிருத்தலால் வந்த தலப்பெயரும் காண்க.

     சந்து - சந்தனமரம்; நாகம் - குங்குமமரம்; நீள் இலை
வஞ்சி
- நீண்ட இலைகளையுடைய வஞ்சிமரம்; காஞ்சி -
காஞ்சிமரம்; நிறைமலர்க் கோங்கம - பூக்கும் காலத்தில் நிறையப்
பூக்களையே கொடுக்கும் இயல்புடைய கோங்கமரங்கள். “கோங்கமே
குரவமே” என்ற தேவாரமும் காண்க. நறுமலர் - குளிர்மலர் -
தண்மலர் - நிறைமலர்
- என்று அவ்வம் மரங்கள் மலராகிய
பயன் தருவன என்பதும், மலர்களின் இயல்பு இத்தன்மையன
என்பதும், சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருத்தல் காண்க.

     தாளிரும்போந்து...நீளிலை வஞ்சி - இந்த அடைமொழிகள்
இப்பொருள்களின் சிறப்பியல்பை உணர்த்தியவாறு. இதிலும், அடுத்த
பாட்டிலும் சோலைகளையே கூறினாரேனும் இப்பாட்டிற் கூறியவை
பெரும்பான்மை மனிதரின் முயற்சியின்றித் தாமே நீர்ப் பெருக்கு
மிக்குள்ள இடங்களில் முளைத்து வளர்ந்து செறிந்து
காணப்படுவனவும் ஏகதேசத்தில் பயன் தருவனவுமாம். வரும்
பாட்டிற் காண்பன இத்தனை செறிவில்லாதனவும், மனிதர் முயன்று
பயிர்செய்து ஆக்குவனவும், ஒவ்வோரிடங்களில் பிரிந்து பிரிந்து
காணப் பெறுவனவும், இவற்றினும் மேலாய் அதிக பலன்
தருவனவும் ஆம். ஆதலின் அவற்றை வேறுபிரித்து அடுத்த
பாட்டிற் கூறியதுமன்றி, இப்பாட்டிற் பல மரத்தொகுதி சேர்த்துக்
கூறியதுபோலக் கூறாது ஒர் அடியிலே மரங்களையும் செடிகளையும்
இவ்விரண்டு முறை “எங்கும்” என்ற சொல்லாற் பிரித்தும்
காட்டினார். 28