79. சூதபா டலங்க ளெங்குஞ் சூழ்வழை ஞாழ
                               லெங்கும்
 
  சாதிமா லதிக ளெங்குந் தண்டளிர் நறவ மெங்கும்
மாதவி சரள மெங்கும் வகுளசண் பகங்க
                               ளெங்கும்
போதவிழ் கைதை யெங்கும் பூகபுன் னாக
                               மெங்கும்.
29

     (இ-ள்.) வெளிப்படை.

     (வி-ரை.) சூத பாடலங்கள் - சூதங்களும் பாடலங்களும்;
உம்மைத் தொகை. சூதம் - மா; பாடலம் - பாதிரிமரம். சூழ்வழை
- கொத்திலே மலர்கள் மொய்த்து நிறையப் பூக்கும் சுரபுன்னை.
சூழ்
- கொத்தில் மலர்கள் நிறைந்து சூழும் இயல்புடைய என்க.
ஞாழல் - குங்குமப்பூ மரங்கள்; புலிநகக்கொன்றை என்றலுமாம்.
சாதி
- சாதிப்பூ; நொடிப்பூ வகை. இதனைப் பிச்சி என்றும் கூறுவர். மாலதி - முல்லை; மல்லிகையுமாம்.

     தண்தளிர் நறவம்
- அனிச்சம். (இது கோட்டுப்பூ வகை);
மிக மெல்லிய இதழ்களையுடைமையால் தண் தளிர் என்றார்.
“மோப்பக் குழையும் அனிச்சம்” என்பது குறள்.

     மாதவி - குருக்கத்தி. சரளம் - ஒருவகைத் தேவதாரு;
நீண்ட இலையுடையது. “நாக சூத வகுளம் சரளம்” என்று பின்னர்
வருதலும் காண்க. (தடுத் - புரா - 93).


     வகுளம் - மகிழமரம். கோட்டுப்பூ கொடிப்பூ, முதலிய பலவும்
விரவக் கூறுதல் நாட்டின் அணியியல்பு குறித்தது.

     போதவிழ் கைதை - மடல்கள் விரிந்த பூக்களையுடைய
தாழை; சோற்றின் அவிழ்போன்ற போதுகளையுடைய தாழை
என்றலுமாம். பூகம் - கமுகு. புன்னாகம் - புன்னை.

     மேலே இந்நாடு பெரும்பான்மை மருதத்திணையாகச்
சொன்னாரேனும், மேற்பாட்டிலும் இப்பாட்டிலும் குறித்த
பொருள்களாகிய கோட்டுப் பூ - கொடிப்பூவாதி பலவகைப்
பூமரம் கொடி முதலியவை மருதம் நெய்தல் முதலியபல்வகை
நிலப் பொருள்களாய் மயங்கியும் விரவியும் வருதல்
அந்நாட்டிலே பல வகைத் திணைகளும் விரவியிருத்தலைக்
குறிக்கும். திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்தில்
தொண்டை நாட்டிற்குச் சொல்லியவாறே இந்நாட்டிற்கும்,
இவ்வாறே பிறநாடுகளுக்கும் ஏற்ற பெற்றி வைத்துக்
கண்டுகொள்க.   29