8.
|
மேய விவ்வுரை
கொண்டு விரும்புமாம்
|
|
|
சேய வன்றிருப்
பேரம்பலஞ் செய்ய
தூய பொன்னணி சோழனீ டூழிபார்
ஆய சீர்அந பாய னரசவை. |
8 |
(இ-ள்.)
சேயவன்.......சோழன் - செம்மேனி எம்மானாகிய
நடராசப் பெருமானுடைய திருப்பேரம்பலமாகிய சபையைப்
பொன்னினால் வேய்ந்து அணிசெய்த சோழர் பெருமானாகிய;
நீடுழி......அநபாயன் - உலகிலே நீடூழி நிலைத்த புகழும் சிறப்பும்
உடைய அநபாயச் சோழச் சக்கரவர்த்தியாரது, அரசு அவை
மேய........ஆம் - அரச சபையானது (மேலே
கூறியபடி சிறந்த
பொருளைத் தன்னுள்ளே) மேவப்பெற்ற இவ்வுரையை
ஏற்றுக்கொண்டு விருப்பத்துடன் நிகழச் செய்வதாகும்.
(வி-ரை)
ஆம் - (விரும்பும். ஆதலின்) இது ஆகும்.
ஆவதாம் - செய்யப் பெறுவதாயிற்று - என்று இந்நுல் செய்தற்குரிய
காரணமும் கூறினார். அநபாயச் சோழர் செய்க எனக் கேட்டபடியே
ஆசிரியர் செய்தனர் என்ற வரலாறு திருத்தொண்டர் புராண
வரலாற்றிலே உமாபதிசிவாசாரியார் விரிவாய்க் கூறியருளினார்.
அங்குக் காண்க. அநபாயன் அரசவை இவ்வுரைகொண்டு விரும்பும்
என்று கூட்டி முடிக்க.
பேரம்பலம்
செய்ய தூய பொன்அணி சோழன் -
இப்புராணம் பாடுவித்த அநபாயர் என்ற குலோத்துங்கச் சோழர் ll
தில்லையிலே பேரம்பலத்திற்குப் பொன்வேய்ந்தார் என்பது
1கல்வெட்டுக்களாலும் அறியப்பெறும் உண்மை. ஆசிரியரது காலத்தை
நிச்சயம் செய்யக் கிடைக்கும் சரித ஆதரவுகளில் இஃது ஒன்று.
இங்குக் கூறிய “பேரம்பலம்”
என்றதற்குச் சிற்றம்பலம் என
மயங்கிக் கொண்டு உரை கூறுவாரும் உளர். சிற்றம்பலம் வேறு;
பேரம்பலம் வேறு; இரண்டு வெவ்வேறாய் இறைவன்
எழுந்தருளியிருக்கும் தனியிடங்கள் என்பது தில்லையிற் சென்று
கூர்ந்து தரிசித்தார்க்கு நன்கு விளங்கும். முதலாவது குலோத்துங்கச்
சோழர் (இரண்டாவது குலோத்துங்கருடைய பாட்டனார்)
சிற்றம்பலம் பொன்வேய்ந்தார். இரண்டாவது குலோத்துங்கர் மீண்டும்
சிற்றம் பலத்தில் பொன் வேய்தற்கு இடமில்லாமையால்
பரம்பலத்தைப் பொன் வேய்ந்தார். அன்றியும், தமது அன்பு
மிகுதியினால் தில்லை எல்லையிலும் திருவீதிகளிலும் அவ்வாறே
பொன்மயமாக்கும் பலதிருப்பணிகளும் செய்தனர் என்பது ஆசிரியர்
பின்னர்க் கூறுவனவற்றால் விளங்கும்.2
“சென்னி
யபயன், குலோத்துங்கச் சோழன், றில்லைத் திருவெலலை
பொன்னின் மயமாக் கியவளவர் போரே, றென்றும்
புவிகாக்கும்
மன்னர் பெருமா, னநபாயன”
-
சண்டீசர்புராணம் - 8. |
“மன்னுதிருத்
தில்லைநகர் மணிவீதி யணிவிளங்கும்
சென்னி, நீடநபாயன்......... ”
-
புகழச்சோழ நாயனார் புராணம் - 8. |
கொண்டு
விரும்பும் அநபாயன் அரசவை என நிகழ்காலத்திற்
கூறியதனால் காலமுங் களனும் காரணமுங் கூறியதாயிற்று. நீடூழிபார்
ஆயசீர் அநபாயன் - இப்போது அநபாயர் உலகை ஆள்கின்றார்;
அவர் அரசு நீடூழி நிலை பெறுக; அதன்கீழ் உலகம் ஆகுக;
(ஆக்கம் பெறுக.) - என்று இப்புராணம் பாடுவித்த உபகாரத்தின்
பொருட்டு வாழ்த்துக் கூறியவாறுமாயிற்று. “வேந்தனு மோங்குக”
என்ற தேவாரமும் காண்க.
“.......வையம்
பொதுக்கடிந் தினிது காக்கும்
கொற்றவ னநபா யன்பொற் குடைநிழற் குளிர்வது..... ”
-
திருநாட்டுச் சிறப்பு - 35. |
என்ற இடத்திலேயும் அந்நாளிற் சோழவளநாடு அநபாயருடைய ஆளுகையில் வாழ்கின்றதாக நிகழ்காலத்துக்
குறித்ததும் காண்க.
பாடுவித்த அரசன் சிறப்பை வாழ்த்தியதும் நன்றி பாராட்டியதும்
ஆம். இக்கருத்துப் பற்றியே ஆசிரியர் அநபாயருடைய பெயரை
இப்புராணத்துள்ளே பதினொரு இடங்களில் அமைத்துள்ளார்.
அங்கங்கே கண்டு கொள்க.3 8
1
திருப்புறம்பயம். 1927 - 350 இலக்கமுள்ள கல்வெட்டினால்
விக்கிரமசோழ வளநாட்டின் அரசரான குலோத்துங்கர் பேரம்பலம்
பொன்வேய்ந்தமை தெரிகின்றது.
2 இதன் விரிவு, எனது ‘சேக்கிழார்’
என்னும் நூலில் 12 முதல் 23 வரை உள்ள பக்கங்களிற் காண்க.
3 எனது சேக்கிழார் - 180
- 183 பக்கங்களிற் காண்க.
|