80. மங்கல வினைக ளெங்கு மணஞ்செய்கம் பலைக
                                ளெங்கும்
 
  பங்கய வதன மெங்கும் பண்களின் மழலை
                                யெங்கும்
பொங்கொளிக் கலன்க ளெங்கும் புதுமலர்ப் பந்த
                                ரெங்குஞ்
செங்கயற் பழன மெங்குந் திருமக ளுறையு
                                ளெங்கும்.
30

     (இ-ள்.) வெளிப்படை.

     (வி-ரை.) மங்கலவினைகள் - பலவகை மங்கலச் செயல்கள்.
மணஞ்செய் கம்பலை - இவற்றுளே சிறந்ததாகவும் கம்பலை
மிகுதியாகவும் உள்ளதென்று குறிக்க இதனை வேறுபிரித்துக்
கூறினார். கம்பலை - ஆர்ப்பரிப்பு - முழக்கம். கம்பலைகள் என்ற
பன்மை பல மணங்களில் நிகழும் பல முழக்கங்களையும் பல
வகைகளையும் குறித்தது.

     பங்கய வதனம் - மேற்கூறிய மணமுதலிய மங்கலங்களிற்
கூடி வினைசெய்யும் பெண்களின் தாமரைபோன்ற முகங்கள்.
பண்களின் மழலை - அவ்வினைகளில் அவர்கள் மழலையினால்
மிழற்றும் பண்ணிசைகள். பெண்களின் இன்சொற்கள்
பண்போன்றிருத்தலாலும் அவர்களது மழலையிற்
பண்களிருத்தலாலும் இவ்வாறு கூறினார்.

“பண்ணி னேர்மொழி யாளுமை பங்கர்”
                            - தேவாரம்.

“பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும், பெண்சுமந்த
பாகத்தன்”
                       - திருவாசகம்

“பண்ணி னேரும் மொழியாளென் றெடுத்துப் பாடப்
பயன்றுய்ப்பான்”
         - திருநாவுக் - புராணம்

முதலிய திருவாக்குக்கள் காண்க.

     கலன்கள் - ஆடவர்களும் மகளிரும் அணியும் அணிகள்.

     புதுமலர்ப் பந்தர் - மேற்கூறிய மங்கல வினைகளுக்காக
அமைந்து அழகு செய்வன. புதுமலர்ப் பந்தர் இடுதல் மங்கலஞ்செய்
வினைகளுள் ஒன்றென்பது.

“பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை, துணையுற
                       அறுத்துத் தூங்க நாற்றி”

என்ற திருமுருகாற்றுப்படையாலும் காணப்பெறும்.

“தாதவிழ்பூந் தொடைமாலைத் தண்பந்தர் களுஞ்சமைத்து”- தடுத் - புரா - 121

“தோடு குலவு மலர்மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும்”- திருநா - புரா - 319

என்பனவாதி புராணத் திருவாக்குக்களும் காண்க.

     செங்கயற் பழனம் - செங்கயல் மீன்களையுடைய வயல்கள்.

     திருமகள் உறையுள் - இலக்குமி வாழும் இடம் -
இருப்பிடம். மங்கல வினைகள் நிகழும் இடங்கள் யாவும் அந்த
வினைகளின் சிறப்புக்களால் இலக்குமி தேவியே வசிக்கும்
இடங்களாகத் தோன்றின என்பது. திருமகள் உறையுள் - தாமரை
என்றுரைப்பினும் அமையும்.

     முதலில் மங்கல வினைகள் எனப் பொதுப்படக் கூறிப்
பின்னர் அவற்றில் நிகழும் கம்பலைகளும், அவற்றில் வினைசெய்
பெண்களும், அவர் மழலையும், அவர் அணிகளும், அவ்விடங்களின்
அழகும் தொடர்ந்து கூறினாராயிற்று.  30