81. மேகமுங் களிறு மெங்கும் வேதமுங் கிடையு
                                மெங்கும்
 
  யாகமுஞ் சடங்கு மெங்கு மின்பமு மகிழ்வு
                                மெங்கும்
யோகமுந் தவமு மெங்கு மூசலு மறுகு மெங்கும்
போகமும் பொலிவு மெங்கும் புண்ணிய முனிவ
                                ரெங்கும்.
31

     (இ-ள்.) வெளிப்படை.

     (வி-ரை.) மேகமும் களிறும் - முகில்களும் யானைகளும்
ஒருங்கே விரவிக் காணப்பெறுகின்றன. முகிலோ - யானையோ என
நிறத்தினாலும் அளவினாலும் முழக்கினாலும் பிரித்துணரப்படாமல்
ஐயமுறும்படி பொருந்தின. இவை யிரண்டின் ஓசையும் மங்கல
ஓசைகளாம். “காரெதிர் தானமாக்கள் முழக்கமும்” என முன்னரும்
கூறினமை காண்க. (திருமலை-4)

     வேதமும் கிடையும் - வேத மோதுதலும், அவைகளைப்
பயிலும் மாணவர் குழாமும். “ஓது கிடைசூழ் சிறுவர்களும் உதவும்
பெருமை யாசானும்” (சண்டேசர் புரா-3) “ஓது கிடையி னுடன்
போவார்” (சண்டேசர் புரா - 17) கிடை - வேதம் பயிலும்
மாணாக்கர் கூட்டம். மறுகு - தெருக்கள்; வீதிகள்.

     மேகவோசை - யானை ஓசை - வேத ஓசை - இம் மூன்று
விரவி முழங்குவன என இவற்றை ஓரடியில் வைத்துக் கூறினார்.

     “ஆரணங்களே யல்ல மறுகிடை, வாரணங்களும் மாறி
முழங்குமால்” - திருநகர் - 10 எனப் பின்னர்க் கூறுவதும் காண்க.
யானைப் பந்திகள் நாட்டிலே நகரங்களின் புறத்து அமைவன.
அந்நகர்ப்புறங்களிலேயே வேதம் ஓது கிடையும் யூப வேள்விப்
பொதுச்சாலைகளும் அமைவன. வேள்வியினால் மேகங்கள்
உண்டாவன - ஆதலின், களிறும் - யாகமும் - மேகமும் -
ஓரிடத்து நிகழ் பொருள்களாகிய இப்பாட்டில் ஒருங்கே கூறப்பட்டன.
“வேள்வி நற்பயன் வீழ்புனலாவது” என்ற பிரமாணமும் காண்க.

     யாகமும் சடங்கும் - யாகங்களும், அவற்றின் முன்னும்
பின்னும் செய்யும் சடங்குகளும், சண்டீச நாயனார் புராணத்தில்
“கோதின் மான்றோற் புரிமுந்நூல்” (3) என்ற பாட்டில் வேதமும்
கிடையும் கூறிய ஆசிரியர் அதனோடு சார வைத்து அடுத்த “யாக
நிலவு” (4) எனும் பாட்டில் “யாகமும் களிறும” கூறினமையும்
இங்குச் சிந்திக்கற்பாலது. இந்த யாகங்கள் சிவபெருமானைக்
குறித்துச் செய்யப் பெறுவன.

     இன்பமும் மகிழ்வும் - “இருமைக்கும் இன்பம் அளிக்”
கின்றவையாய்த், “தீது நீங்கச் செய்யப்” பெறுவனவாய் உள்ள
யாகங்களைச் செய்ததனாலே உளதாகும் அனுபவமாகிய இன்பமும்,
மகிழ்வைத்தரும் செயல்களும் என்க. யாகங்களினியல்பு
திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் 280-429 திருப்பாட்டுக்களிற்
காண்க. இன்பம் - மனம் முதலியவற்றால் நிகழும் உயிர் அறிவு.
அகப்பொருளின்பம். மகிழ்வு அதனாற் புறத்தே நிகழ்வது.

     போகமும் பொலிவும் - போகமும் அவற்றாற் புறத்தே
தோன்றும் விளக்கமும். போகம் - இந்திரியங்களால்
அனுபவிக்கப்பெறும் அனுபவங்கள். ஆதலின் இவை பின்னர்
வைக்கப் பெற்றன. போகமும் பொலிவும் - யாகங்களாலும்
யோகங்களாலும் முறையே பயனாய்ப்பெற்ற போகங்களும்
அவற்றின் பொலிவும். பொலிவு - விளக்கம்.

     யோகமும் தவமும் - மேற்கூறிய யாகங்களேயன்றி, யோக
முயற்சிகளும் பிற தவங்களும். இவையும் யாகங்களைப் போலவே
இல்வாழ்வாராற் செய்யப் பெறுவன. யோகத்தினியல்பும் பயனும்
ஒளவைப் பிராட்டியார் அருளிய விநாயகரகவலிலும், திருவாதவூரர்
புராணம் உபதேசப் பகுதியிலும், பிற நூல்களிலும் காண்க. தவம் -
மனம் புலன்வழி போகாதிருத்தற் பொருட்டு, உண்டி சுருக்கல்
முதலியவற்றால் தம்முயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும்,
பிறவுயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமையுமாம். யோகமாவது
கரணங்களை அடக்கி மனத்தை ஒரு குறியினிறுத்துதல்; “உற்றநோய்
நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை, யற்றே தவத்திற்குரு” (குறள்)

     ஊசலும் மறுகும் - (ஆடவர்கள் தவமும்யோகமும் பயில,
அவரது) பெண்கள் பயிலும் ஊசல்களும் அவை பயிலிடமாகிய
மறுகும் என்க.

     புண்ணிய முனிவர் - மேற் சொல்லிய வேதம் - யாகம் -
யோகம் - தவம் - முதலியவற்றால் போகம் பெற்றுச் சிவ
புண்ணியம் செய்யும் முனிவர். இல்வாழ்வாராயினும்
போகங்களிலேயே மூழ்கிவிடாது தனி நிற்பார் என்பார்
முனிவர் என்றார். “இயற்பகை முனிவா வோலம்” முதலிய
திருவாக்குக்கள் காண்க.

     மேற்பாட்டிலே வினைகள் - கம்பலைகள் - வதனங்கள் -
முதலிய ஒவ்வோர் பொருள்களாகக் குறித்தார். இப்பாட்டிலே
இடத்தாற் பொருத்தமுற்ற - மேகமுங்களிறும் - என்றும், பொருளாற்
பொருத்தம் பெற்றுத் தொடர்பு கொண்டு ஒரே பொருளின்
தன்மையுடைய - வேதமும் கிடையும் - யாகமும் சடங்கும் -
என்றும், இவ்விரண்டாய்ச் சேர்த்துக் குறித்தார். அவற்றின்
தொடர்புகள் கண்டு கொள்க.

     வேதமும் கிடையும் - வேதமும் அவற்றை ஓதுகின்ற கிடையும்
- எனப் பிரித்துக் கூறியதாம்.

     புண்ணியங்கள் “செய்வோரின்றிச் செய்வினை யின்மையின்”
என்பவாகலின், அவற்றைச் செய்வோரிடத்தன்றித் தனித்து
நில்லாமையால் மேலே சேர்த்துக் கூறியவற்றைப்போலப்
புண்ணியமும் முனிவரும் என்னாது புண்ணிய முனிவர் எனப்
புண்ணியத்தை முனிவருக்கு அடைமொழியாக்கிக்
கூறினார்.

    இதுவரை கூறியவை பொருளைப்பற்றி அணி செய்தனவாம். 31