84.
|
வீதிகள்
விழவி னார்ப்பும் விரும்பினர் விருந்தி
னார்ப்புஞ் |
|
|
சாதிக
ணெறியிற் றப்பா தனயரு மனையிற் றப்பா
நீதிய புள்ளு மாவு நிலத்திருப் புள்ளு மாவும்
ஓதிய வெழுத்தா மஞ்சு முறுபிணி வரத்தா
மஞ்சும். |
34 |
(இ-ள்.)
வெளிப்படை. விழவு + இன் + ஆர்ப்பு - கோயிற்
றிருவிழாக்களில் எழும் இனிய முழக்கங்களும்; விரும்பினர்
விருந்தின் ஆர்ப்பும் - விரும்பி வருவோர்களுக்குச் செய்யும்
விருந்தின் சிறப்பு; இவ்விருவகை ஆர்ப்பும் வீதிகளில் மிக்கன;
சாதிகள் நெறியில் தப்பா - எவ்வெச் சாதியில் உள்ளோரும்
தத்தமக்கு விதித்த ஒழுக்க நெறிகளிலிருந்து தவறமாட்டார்கள்;
தனயரும் மனையிற்றப்பா - வீடுகள் தோறும் (தப்பாமல்)
தனயர் உளர்; நீதிய புள்ளும் மாவும் - (பகை முதலிய குண
பேதங்களையுடைய) பறவைகளும் விலங்குகளும் அவற்றை
ஒழித்துத் தத்தம் வரம்பிலேயே நிற்கும்; நிலத்து இருப்பு உள்ளும்
ஆவும் - தேவ உலகத்தில் உள்ள காமதேனுவும் இந்நாட்டிலே
இருக்க நினைக்கும்; ஓதிய எழுத்து ஆம் அஞ்சும் உறுபிணி - வர
- தாம் - அஞ்சும் - எல்லா உயிர்களும் எழுத்தாகிய ஐந்தையும்
(ஐந்தெழுத்தையும்) ஓதின; வரக்கடவனவாகிய சென்மப் பிணியும்
உயிர்களைப் பீடிக்க வருவதற்குத் தாம் (அக்காரணத்தால்) அஞ்சும்.
(வி-ரை.)
விழவு - விழா என்பது குறியதன் கீழ் ஆக்
குறுகியது.
விரும்பினர் விருந்தின்
- விரும்பினராகிச் செய்யும்
விருந்து என்றலுமாம். விருந்து - புதுமை. இது ஆகுபெயராய்,
புதிதாய் வருவோரை உணர்த்தும்.
உலக
வழக்கிலே இவர்களைச் சுற்றத்தாருடன் ஒன்றாய்
மயங்கி வழங்குவர். சுற்றத்தார் தொடர்பு பற்றிவருவோர்.
சுற்றம்வேறு; விருந்து வேறு.
சாதிகள் நிலையிற்றப்பா - சாதி - பிராணிகளுக்குள்
பலவற்றுக்குப் பொதுவாகிய தன்மை. “சாதியும் வேதியன்”
(திருவா); விலங்கின் சாதி - மக்கட் சாதி - என்பன போல.
மனிதச் சாதிக்குள்ளும் சமூகவாழ்க்கை ஒழுங்குக்கு
இன்றியமையாததாய் நிறம் - குணம் - தொழில் - மொழி -
பிறப்பு - முதலிய ஒவ்வோர் காரணம்பற்றிய பகுப்புக்களும்
சாதி எனப் பெறும். இவை முற்கூறிய காரணவகையால்
தேயந்தோறும் காலந்தோறும் வேறுபாடுடையன. ஆயினும்
மக்களின் கர்ம வேறுபாடுகளும் உடம்பு உயிர் வேறுபாடுகளும்
உள்ளவரை இவை எவ்வகையாலாவது எப்பெயராலாவது,
இவ்வுலகநடை உள்ள வரையில் இருப்பனவேயாம். இவ்வுலக
மக்கள் வெள்ளை - கறுப்பு - மஞ்சள் என்ற நிறவேறுபாட்டால்
மூன்றாகப் பகுக்கும் ஒரு பெரும் சாதிப்பிரிவை உலகம்பேசி
ஒப்புக் கொள்கிறது. இவை போல்வனவே பிறவும் காண்க. இதன்
உள்ளுறைத் தத்துவங்களை உணராதார் பற்பலவாறு மயங்கிப்
பூசலிட்டுக் கலகத்துக்குக் காரணமாவர். இந்நாட்டில் உள்ள சாதி
வேறுபாட்டின் சிறப்பியல்புகளை நூல்களின் வாயிலாகவும்,
உலகியல் வாயிலாகவும் உய்த்துணர்ந்து கொண்டு ஒழுகுதல்
நலந்தரும். சாதிகள் நிலையிற்றப்பா என்பது அந்தந்தப் பகுப்புக்கு
விதித்த ஒழுக்கத்தில் வழுவாது நிற்றலைக் குறித்தது.
தனயர்
- குழந்தைகள் எனப் பலவின்பாற்பொருள் தந்து
(மகவு என்பது போல) தப்பா என்னும் அஃறிணைப் பலர்பால்
வினைமுற்றுக்கொண்டது. மனைக்கும் மனை வாழ்க்கைக்கும்
நன்கலனாவது மக்கட்பேறேயாம், அஃதில்லையாயின் ஏனைய
சிறப்புக்கள் ஒன்றும் பயன்படா ஆதலின் தனயர் மனையிற்றப்பா
என்றார். மனைகள் தோறும் தப்பாமல் மகவுகள் உண்டு என்க.
“மங்கல
மென்ப மனைமாட்சி; மற்றதன்
நன்கலன் நன்மக்கட்பேறு” |
என்பது நாயனார் திருவாக்கு.
மேலே “துணைவர்சூழ் மாலை” என்று
மனைமாட்சி கூறின ஆசிரியர் இப்பாட்டினால் மனைமாட்சிக்கு
நன்கலனாகிய மக்கட்பேறு கூறினார்.
நீதிய புள்ளுமாவும்
- அறிவில்லாத பறவைகளும்
விலங்குகளும் தாமும் நீதி பெற ஒழுகின. உம்மை சிறப்பும்மை.
உம்மையினால் அறிவில்லாத என்பது வருவிக்கப்பெற்றது. புள்
-
ஆகாயவாசிகளாகிய பிராணிகளுக்கும், மா -
நிலத்தின் நீரின்
வசிக்கும் பிராணிகளுக்கும் குறியீடாகிய சாதிப்பெயர்.
உறுபிணி வரத்தாம்
அஞ்சும் - அறிவில்லாத புள்ளும்
மாவும் முதலியவற்றின் நீதியாலும், அறிவுள்ள உயிர்களது
ஐந்தெழுத்து ஓதுவதாலும், ஆ இந்நிலத்தின் ஆசைப்பட்டு இங்கே
யிருத்தலானும், இந்நாட்டின் மாக்கள் மக்கள் தேவர் முதலிய
எவ்வுயிரையும் பொருந்த உறுபிணிகளும் வர அஞ்சுவன. சென்ம
முதலாகிய கருமப்பிணி அஞ்சும் என்னவே, அதனுள்வரும்
உடற்பிணியும் அடங்கும். சீல ஒழுக்க முடையார்க்கு நோய் வாரா
என்பது.
நிலத்து இருப்பு உள்ளும்
ஆவும் - காமதேனுவும்
விரும்பும் பொருள்கள் இங்கு உள்ளமையாலும், அது வழிபாட்டுப்
பேறுபெற்ற தலங்கள் உள்ளமையாலும் இவ்வாறு கூறினார்.
மனையிற்றப்பார்
- என்பதும் பாடம். 34
|