86. சொன்ன நாட்டிடைத் தொன்மையின் மிக்கது  
  மன்னு மாமல ராள்வழி பட்டது
வன்னி யாறு மதிபொதி செஞ்சடைச்
சென்னி யார்திரு வாரூர்த் திருநகர்.
1

     (இ-ள்.) சொன்ன ... மிக்கது - மேலே (“நாம்புகழ் திருநாடு”
என்று முடித்துக் காட்டிச்) சொன்ன சோழநாட்டிலே உள்ள பல
நகரங்களிலேயும் மிகப்பழமை வாய்ந்தது; மன்னும் ... வழிபட்டது -
நிலைபெறும் இலக்குமி தேவியினால் வழிபடப் பெற்றது; வன்னி ...
நகர் - வன்னியும் கங்கையும் நிலாவும் தங்கிய சிவந்த சடைமுடித்
தலைவராகிய தியாகேசர் எழுந்தருளிய திருவாரூர்த் திருநகரமாம்.

     (வி-ரை.) சென்னியார் - திருவாரூர்த் திருநகர்
தொன்மையின் மிக்கதும் வழி பட்டதுமாம் என்று கூட்டி முடிக்க.

     சொன்னநாடு - மேலே “காவிரி நாட்டியல் பதனையான்
நவிலலுற்றனன்” என்று தொடங்கி “நாம்புகழ் திருநாடு” என்று
முடித்ததுவரைப் பலதிறத்திலும் நாட்டுச் சிறப்பிலே புகழ்ந்து
சொன்ன நாடு என்றபடி. பொன்னிநதி பாய்ந்து பொன் மயமாக்கிய
நாடு என்றலுமாம். நாட்டுச் சிறப்பினை முடித்துக்காட்டி நகரச்
சிறப்புத் தொடக்கத்தைக் குறித்தபடி கண்டு கொள்க.

     நாட்டு இடை மிக்கது - அந்நாட்டில் எல்லா நகர்களும்
பழைமையானவையே. “வரைபுரை மாட நீடி மலர்ந்துள பதிகள்
எங்கும்” (நாடு - 26) அவற்றினுள் மிகப்பழைமை வாய்ந்தது என்க.

     தொன்மையின் மிக்கது - தொன்மை மிகுந்தது என்பதற்கு
இத்திருநகரத்தை ஆளும் தியாகராசப் பெருமான் பலகாலம்
திருப்பாற் கடலிலே விட்டுணுமூர்த்தியின் மார்பிலேயும், அதன்
பின்னர்ப்பலகாலம் தேவவுலகத்திலேயும், அதன்பின் மீளவும்
திருவாரூரிலேயும், எழுந்தருளினார் எனும் சரித வரலாறு ஆதரவாம்.
“அமரர் நாடாளாதே ஆரூர் ஆண்ட அயிராவணமே” என்றும், “...
நீங்கியநீர்த் தாமரையா னெடுமா லோடு நில்லாயெம் பெருமானே
யென்றங் கேத்தி வாங்கி மதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
வளராரூர் கோயிலாக் கொண்ட நாளே” என்றும் வரும்
திருத்தாண்டகங்களும் பிறவும் காண்க.

     மன்னுமாமலராள் - ஈண்டு இலக்குமியைக் குறித்தது.
மலராளினால் - ஆல் உருபு தொக்கி நின்றது.

     வழிபட்டது - வழிபடப்பட்டது. செய்வினை செயப்பாட்டு
வினைப்பொருளில் வந்தது. மலராள் - இங்கே வழிபட்டுத்
தவஞ்செய்தனள். அதனால் தனது மங்கலம் நிலைபெறும் பேற்றை
யடைந்தனள். ஆதலின் மன்னும் - நிலைபெறும் - என்றார்.
இலக்குமி இந்நகரில் வழிபடும் பொருட்டு நிலைத்து
வசிக்கின்றதாலும் மன்னும் என்றலுமாம். இவர் வழிபட்ட
திருக்குளம் கமலாலயம் என்ப. இதனாலே இந்நகர் திரு -
ஆர் - ஊர் - திருவாரூர் என்று பெயர் பெற்றதாகும்.

     வன்னி - வன்னித்தழை; இது சிவபெருமான் பூசனைக்குரிய
பத்திரங்களில் ஒன்று. ஆறு - கங்கை. மதி - மூன்றாம்
பிறைச்சந்திரன்.

     வழிபட்டது என்பது இந்நகரின் முற்கூறிய தொன்மைக்கு
உரிய பல காரணங்களிலே சிறந்ததாய் நகரப் பெயர்க்குக்
காரணமாய் இன்றைக்கும் நிகழ்வதாய் உள்ளதாதலின் இதனை
அடுத்து எடுத்துக்கூறியவாறு.

     சென்னியார் - சென்னி என்பது சோழர்க்குரிய பட்டப்
பேர்களில் ஒன்று. சோழநாட்டின் இறைவர் என்று குறிக்கச்
சென்னியார் என்றதுமாம். 1