92. செங்கண் மாதர் தெருவிற் றெளித்தசெங்  
  குங்கு மத்தின் குழம்பை யவர்குழற்
பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன்
அங்கண் மேவி யளறு புலர்த்துமால்.
7

     (இ-ள்.) செங்கண்...குழம்பை - சிவந்த கண்களையுடைய
பெண்கள் தெருவிலே தெளித்த குங்குமக் குழம்பை; அவர் குழல் ...
வீழ்ந்து - அவர் கூந்தலிலே அணிந்த புதுப் பூமாலைகளிலிருந்து
பூந்தாதுகள் உதிர்ந்து விழுந்து; உடன் ... புலர்த்தும் -
குழம்பினுடனே அங்குப் பொருந்தி அச்சேற்றை உலரச்செய்யும்.
ஆல் - அசை.

     (வி-ரை.) பெண்களுக்குச் செங்கண் அழகினைக் காட்டும்.
கண் தாமரை போலும் என்று உவமிப்பர். செங்கண் செவ்வரி
படர்ந்ததால் உளதாம்.


     செங்கண்மாதர் தெளித்த குங்குமக் குழம்பு - குங்குமக்
குழம்பைத் தெருவிற்றெளித்தல் அழகின் பொருட்டு. அளறு -
குழம்பினால் உண்டாகிய சேறு. அளறு புலர்த்தும் - தெருவிற்
செல்வாரைச் சேறு இழுக்காமல், துகள், புலர்த்தி உபகரிக்கும்.
தம்மால் விளைந்த இடையூற்றைத் தாமே போக்குதல் என்ற
அறவினையின் குறிப்பாம். “செழுந்தாதே துகளன ... சேறே
யிழுக்கின” (திருக்குறிப்பு - 108) என்றும் பின்னரும் சேர்த்துக்
கூறுவது இங்குக் காணத்தக்கது.

     கோதை - மாலை. பொங்குதல் - மிகுதல். துகள் -
மாலையின் பூக்களிலிருந்து உதிரும் பூந்தாது; மகரந்தப்பொடி.
இது அதிசயோத்தி அணி என்பர். இறைவன் திருவடி தூது நடந்த
மணத்தினைக் குங்குமக் குழம்பு சாத்தி வணங்கினார் என்ற
குறிப்பும் மேற்பாட்டைத் தொடர்ந்து தோற்றுவதாம்.      7