93.
|
உள்ள
மாருரு காதவ? ரூர்விடை |
|
|
வள்ள
லார்திரு வாரூர் மருங்கெலாந்
தெள்ளு மோசைத் திருப்பதி கங்கள்பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள். |
8 |
(இ-ள்.)
உள்ளம் ஆர் உருகாதவர் - யாவர்தாம் மனமுருகாதவர்கள்;? ஊர்விடை ... பூவைகள் - இடபத்திலே
எழுந்தருளி வரும் தியாகேசரது திருவாரூரின் தெருப்
பக்கங்களிலெல்லாம் தெளியும் ஓசைத் திருப்பதிகங்களைப் பசிய
கிளிகள் பாடுவன; அவற்றை நாகணவாய்ப் பறவைகள் கேட்பன.
(வி-ரை.)
ஆரூர் வீதி மருங்கெலாம் திருப்பதிகங்கள்
கிள்ளை பாடுவ - பூவை கேட்பன எனில், யார் தாம் உள்ள
முருகாதவர் உளர்? என்க.
ஊர்விடை வள்ளலார்
- விடை ஊர் வள்ளலார் என
மாற்றுக. விடையூர்ந்து வரும் வீதிவிடங்கராகிய தியாகேசர். வீதிச்
சிறப்பைச் சொல்லி வருகின்றாராதலின் அதற்கேற்ப ஊர்விடை
வள்ளலார் என்று கூறினார்.
வள்ளல்
- வரையாது கொடுப்போன். அருளாலும்
பொருளாலும் வரையறையின்மையின் இவரே உண்மை வள்ளலாவர்.
பிறர்க்கெல்லாம் இது உபசார மொழியேயாம் என்பது கருத்து.
இதனாலே வண்மைக்கிறைவர் - தியாகேசர், தியாகராசர் என்று
இவர்க்குப் பெயராயிற்று.
மருங்கு எலாம்
- மேலே சொல்லிய வீதிகளின்
பக்கமெல்லாம்.
தெள்ளும் ஓசை
- தெளிந்த ஓசையுடைய; தெளிவிக்கும்
ஓசையுடைய என்றுமாம். தெள்ளுதல் - தூக்கி எறிதல்
என்று
கொண்டு, சொல்வோர் கேட்போர்களது வினைகளை ஓடத்துரக்கும்
ஓசை என்றலுமாம். இது தெள்ளு என்ற சிறுவர் விளையாட்டினுள்
வழங்குதல் காண்க. “உள்ளத் துறுதுய ரொன்றொழியா
வண்ணமெல்லாந், தெள்ளுங்கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ” -
என்ற திருவாசக ஆட்சியும் காண்க.
திருப்பதிகங்கள
- சைவ சமய பரமாசாரியர்களான நான்கு
பெருமக்களும் காரைக்காலம்மையாரும் அருளியவை.
பெரும்பான்மை பத்துப் பாடல்களாகியதனாற் பதிகம் எனப்
பெற்றன. இப்பெயர் இப்பாடல்களுக்கே காரண இடுகுறியாக
வழங்குவது உயர்ந்தோர் வழக்கு. உயர்ந்தோர் மரபின்மையால்
ஏனையோர் பாடல்களுக்கு இப்பெயர் வழங்குதல் பொருந்தா என்க.
"வழக்கெனப்படுவ
துயர்ந்தோர் மேற்றே, நிகழ்ச்சி
யவர்கட் டாகலான" |
என்பது இலக்கணம். திருக்கோயில்
- திருவாயில் என்பனபோல
இவற்றிற்கும் திருப் பதிகங்கள் என்று உரைத்தலே மரபா மென்று
காட்டினார் ஆசிரியர்.
இவை, சொல்வார்க்கும் கேட்பார்க்கும் வினைபோகும்
என்பதை, “... தமிழ் சொல்லுவார்க்கும் மிவைகேட்பவர்க்
குந்துயரில்லையே” - திருநாகை - செவ்வழி - (11). "தானுறுகோளு
நாளும் மடியாரை வந்து நலியாத வண்ண முரைசெய், ஆன
சொன்மாலை" - (கோளறு பதிகம்), எனும் திருவாக்குக்களின்
பிரமாணங்களால் உணர்க.
பைங்கிள்ளை
பாடுவ கேட்பன பூவைகள் - இக்கிள்ளையும்
பூவையும் மக்கள் தத்தம் மாளிகை முதலியவற்றில் வளர்ப்பவை.
கிளிகள் தாம் பயிலும் மக்கள்பாற் கேட்ட பழக்கத்தால்
பதிகங்களைப் பாடுவன. “சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை”
என்பது வழக்கு. “பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது
மோசை கேட்டு. வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
பொருட்சொல்லும் மிழலையாமே” என்பது தேவாரம்.
“பண்மொழியா
லவனாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே”
-
திருஞான - சீகாமரம் - 6 |
“வேதத்
தொலியாற் கிளிசொற் பயிலும் வெண்காடே”
-
மேற்படி காந்தாரம் - 2 |
என்ற தேவாரங்களும் காண்க.
பூவை -
நாகணவாய்ப்பறவை. மக்கள்பாற் கேட்டுப்
பயின்றவற்றைக் கிளிகள்பாட, அவ்வினத்தைச் சேர்ந்த பூவை
கேட்பன என்றார். அன்றியும் பூவையும் இனிய இசையுடையன,
ஆதலின் கிளி தாமாகப் பாடும் பதிகச் சுவையை அனுபவித்தன
என்பதும் கருத்து. மக்கள் பயிலக் கேட்டுப் பழகுதலோடு, கிளிகளை,
இறைவன் பாட்டுப்பாட மக்கள் கற்பிப்பது முண்டு. “சிறையாரும்
மடக்கிளியே” என்ற தேவாரத்திலும், “ஏராரிளங்கிளியே” என்னும்
திருவாசகத்திலும் கிளியை இறைவனது திரு நாமஞ் சொல்லுமாறு
கேட்கின்ற கருத்து இங்கே கவனிக்கற்பாலது.
மருங்கெலாம் - வீதிகளின் பக்கங்களில்
எல்லாம். (வீதிகள்)
இடநோக்கி வருவித்துரைக்க. அந்நாளில் ஆரூரில் எங்கும்
திகமாகத் தேவாரப் பதிகங்களை மக்கள் பயின்றுவந்தனர் என்பது
இப்பாட்டின் உள்ளுறையாக உணரப்படும். இது புராணத்துப் பல
இடங்களிலும் காணலாம். இந்நாள் இவ்வாறு ஒழுகின் நலமாம்.
வேதத்தொலியும், வேதப் பொருளும், கேட்ட கிளிகள்,
வேதம்பயில் கிடைகள் அமைந்த நகர்ப்புறத்தே உள்ள சோலைக்
கிளிகள். இங்குப் பதிகம் பயில்வன மாளிகைகளில் வளர்க்கப்
பெறுவனவாம். அன்றியும், திருஞானசம்பந்த நாயனார் முதலிய
ஆசாரியன்மார்களின் காலத்து வேதத் தொலிகளும்
வேதப்பொருளும் மிகப் பயிலப் பெற்றன. அதன் பிற்காலத்தே
தெள்ளுமோசைத் திருப்பதிகங்கள் மிக அதிகமாகப் பயிலப்பெற்றன.
திருப்பதிகம் விண்ணப்பம் செய்வாரைச் சோழர்கள் கோயில்களில்
நியோகித்ததும் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். ஆதலின் இங்கு
நகரச் சிறப்பில் இவ்வாறு கூறினார்.
உள்ளம் ஆர் உருகாதவர்? - கிளிகள் பதிகம் பாடப்
பூசை
கேட்கக் கண்டால் யார் தான் மணமுருகார்? என்பதாம்.
திருநாவுக்கரசு சுவாமிகள் தில்லைக்கு வரும் வழியிலே,
“இவர்தந்
திருவடி வதுகண் டதிசய மெனவந் தெதிரர
கரவென்றே
சிவமுன் பயீன்மொழி பகர்கின் றனவளர் சிறைமென்
கிளியொடு சிறுபூவை......”
திருநா
- புராணம் - (160) |
எனவும்,
“அஞ்சொற்
றிருமறை யவர்முன் பகர்தலும் அவருந் தொழுதுமு
னளிகூரு
நெஞ்சிற் பெருகிய மகிழ்வும் காதலும் நிறையன்
பொடுமுரை
தடுமாற...”மேற்படி (161) |
எனவும் பின்னர்க் கூறுதலும்
இங்கு வைத்துக் காணத்தக்கது.
“தண்ணென்
சோலை யெம்மருங்கும் சாரு மடமென்
சாரிகையின்
பண்ணின் கிளவி மணிவாயும் பதிகச் செழுந்தேன்
பொழியுமால்”
-
முருக நாயனார் புராணம் - (3) |
என்பதும் காண்க.
|
|
|
|