| 98. 
           | 
          அன்ன 
            தொன்னக ருக்கர சாயினான் | 
            | 
         
         
          |   | 
          துன்னு 
            வெங்கதி ரோன்வழித் தோன்றினான் 
            மன்னு சீரந பாயன் வழிமுதன் 
            மின்னு மாமணிப் பூண்மனு வேந்தனே.  | 
           
            13 | 
         
       
       
           (இ-ள்.) 
      அன்ன ... ஆயினான் - மேலே சொல்லிய  
      அத்தன்மைகளெல்லாம் பொருந்திய பழமையான திருவாரூர்த்  
      திருநகரத்திலே அரசனாய் வீற்றிருந்தான்; துன்னு  
      வெங்கதிரோன்...வேந்தனே - நெருங்கிய வெங்கதிரவனாகிய  
      சூரியனது மரபிலே தோன்றியவனும், நிலைபெற்ற சிறப்புடைய  
      அநபாயச் சக்கரவர்த்தியின் வழியிலே முன்னவனும் ஆகிய  
      விளங்குகின்ற ஆபரணங்களை யணிந்த மனுவேந்தனேயாம். 
       
           தோன்றினான் - வழி முதலாகிய - வேந்தன் - நகருக்கு 
       
      அரசு ஆயினான் என்க. 
       
           (வி-ரை.) 
      தொல் நகர் - திருவாரூர். இதன் தொன்மை 
       
      முதற்பாட்டிலே உரைக்கப் பெற்றது. அதிற் சொன்னதை அனுவதித்து  
      இங்கும், 96-வது பாட்டிலும், தொன்னகர் என்றமை காண்க.  
      திருவாரூரைச் சொல்கின்றபோதெல்லாம் ஆசிரியருக்கு அதன்  
      தொன்மையே நினைவுக்கு வருகின்றது. தொன்மையில் திளைத்தல்  
      தமிழர்களது சிறப்பு இயல்புகளில் ஒன்றென்பது ஆசிரியர் குறிப்பு.  
      புதுநகர்களைத் தேடிப் பலவகைகளிலும் அல்லற்படுவோர்  
      இக்கருத்தை நோக்குவாராக.  
       
           துன்னு 
      வெங்கதிரோன் வழித்தோன்றினான் - துன்னு  
      வெங்கதிரோன் - சூரியன் வெம்மை துன்னு கதிரோன் என்க.  
      துன்னுதல் - நெருங்கிப் பொருந்துதல், ஏழு நிறங்களும் சேர்ந்து  
      வெண்மை ஒன்றேயாய்த் துன்னியதும், அதனுடன் வெப்பத்தையும்  
      கொண்டதுமான கதிர் என்றுரைத்தலும் ஒன்று. செங்கதிரோன்  
      என்பதும் பாடம். வழித்தோன்ற லென்றது சோழர்கள் சூரியன்  
      மரபினராதலைக் குறிப்பிட்டதாம். 
       
           மன்னு சீர் அநபாயன் 
      வழி முதல் - மன்னு சீர் என்றது  
      தம் அரசரை வாழ்த்தியவாறு; நிகழ்காலத்து நிலைபெற்றிருப்பதுடன்  
      எதிர்காலத்தும் மன்னும் சீர் என்பதாம். இது இப்புராணம் பாடக்  
      காரணரா யிருந்ததுபற்றி இப்புவியரசர்க்குக் கவியரசர் காட்டும்  
      நன்றியுமாம். முன்னர்க் கூறியனவும் பின்னர்க் கூறுவனவும்  
      இவ்வாறே காண்க. சோழர்களது சரிதங்கூறும் இடங்களில் எல்லாம்  
      ஆசிரியருக்கு அநபாயரது நினைவு தோன்றுகின்றது. அரசைத்  
      தாபித்து வைத்தல் அமைச்சர்க்கு இயல்பும், நீதியும் நன்றியுமாம்  
      என்க. 
       
           வழி - முதல் 
      - இது மனுவேந்தர் சிறப்பை அறிவிக்கும்  
      ஒருவகை. ஆரூர்ச் சிறப்பை மனுச்சோழர் செய்தியினால்  
      அறியவைக்கும் ஆசிரியர், அவ்வரசரது மரபுச் சிறப்பை அந்நாளின்  
      நிகழ்காலச் செய்தியாகிய அநபாயரது சிறப்பினால் அறியவைத்தல்  
      காரணமாகக்கொண்டு இங்கு மனுவேந்தரை அநபாயர் வழிமுதல்  
      என்றார். மனுவை இடையில் வைத்து அவர் கதிரோன் வழிவந்தவர்  
      என்றும், அவர்பின் அவரது வழி வந்தவர் அநபாயர் என்றும்  
      கூறினார். மனுச்சோழரின் மரபின் தொடக்கப் பெருமைக்காகக்  
      கதிரவனைச் சொன்னாரேனும், அச்சிறப்பைவிட அநபாயரைத்  
      தம்வழியிலே வரப்பெற்றதே மனுவேந்தர்க்கு மிகச் சிறப்பைத்  
      தருவதென்பார் தோன்றினான் என்பதனோடு சேர்த்து வழிமுதல்  
      என்றுங் கூறினார்.  13 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |