99. மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாங்  
  கண்ணு மாவியு மாம்பெருங் காவலான்
விண்ணு ளார்மகிழ் வெய்திட வேள்விகள்
எண்ணி லாதன மாண வியற்றினான்.
14

     (இ-ள்.) மண்ணில்...காவலான் - (அவ்வேந்தன்)
இந்நிலவுலகில் வாழும் எல்லா உயிர்களையும் கண்ணையும்
உயிரையும்போலக் காவல் செய்தான்; விண்ணுளார்...இயற்றினான் -
(இவ்வாறு மண்ணவர்க்குப் பயன் செய்தலே யன்றி) அம்மேலுலகில்
விண்ணவர்க்கும் அவர் மகிழும்படி பல வேள்விகளைச் சிறப்பாகச்
செய்தனன்.

     (வி-ரை.) அவ்வேந்தன் - என்ற எழுவாய்
மேற்பாட்டிலிருந்து தொடர்ந்து கொள்ளப்பட்டது. இவ்வாறே
வருகின்ற இரண்டு பாட்டுக்களிலும் அதனையே தொடர்ந்து
கொண்டு வினைமுடிபு காண்க.

     காவலான் - இயற்றினான் - வேந்தன் - காவலான் -
இயற்றினான் - என்க. இவ்வாறன்றிக் காவலானாகிய வேந்தன்
இயற்றினான் எனக் காவலான் என்பதனை வினையாலணையும்
பெயராக்கி உரைத்தலுமாம். அதனையே முற்றெச்சமாக்கிக்
காவலானாகி இயற்றினான் - காவல் செய்வதற்காக என்று
உரைப்பினுமாம்.

     வாழ்தரு மன் உயிர் வாழ்தரும் - வாழ்கின்ற. மன் -
நிலைத்த - மண்ணில் வாழ்தரும் நித்தமாகிய உயிர் - என்று
உரைக்க. வாழ்தரும் - ஒரு சொல். இவ்வாறன்றி, (இவ்வரசன்)
மண்ணில் - (தேவ உலகத்திலே, தேவர்களுக்கு விரும்யியது
கொடுக்கும் கற்பக மரம்போல) நிலவுலகத்திலே, வாழ் தரு -
வாழும் கற்பகம்; மன் உயிர்க்கெலாம் இவ்வுலகத்து உயிர்க்கெல்லாம்
கேட்டது கொடுக்க என்று பிரித்து உரைத்தலும் ஆம். முன் 97-வது
பாட்டில் அழகார் தரு என்பதற்கு உரைத்ததும் காண்க.
இப்பொருளில் இப்பாட்டில், இவ்வேந்தன் - தரு - காவலான் -
இயற்றினான் - என - மூன்று பொருள் கூறியதாகக் கொள்க.

     உயிர்க்கெலாம் - மனிதர்க்கே யன்றி நடப்பன பறப்பன
முதலிய எல்லா உயிர்களுக்கும் காவல் புரிபவன். வேந்தன் தன்
அரசின்கீழ் வாழும் எல்லா உயிர்களுக்கும் வரும் துன்பம் போக்கிக்
காவல் செய்தல் வேண்டும் என்பது நீதி. இதன் பொருட்டே தாம்
அரசு தாங்கி நின்றபோது எல்லா உயிர்களும் பேசும் மொழிகளை
அறியும் அறிவைக் கழறிற்றறிவார் நாயனார் இறைவனிடத்து
வேண்டிப் பெற்றுக்கொண்டார் என்பதும், அதனாலே அவர்
அப்பெயர்பெற்றனர் என்பதும், அதுவே தமிழரது அரசநீதி என்பதும்,
அவர் புராணத்திற் காண்க. உணவின் பொருட்டுப் பிராணிகளைக்
கொல்வதை அனுமதித்துச் சட்டமுஞ் செய்யும் இந்நாள்
நீதிமுறையுடன் அதனை ஒப்பிட்டு உண்மை தெளிக.

     உயிர்க்கெலாம் - என்பதனை நடுநிலைத் தீவகமாய்
வைத்து அவற்றிற்கெல்லாம் கற்பகத் தருவாகிக் கொடுத்தலே
யல்லாமற் பெருங்காவலும் செய்தவன் என்க. தரு - கொடுத்துக்
காவல் செய்வது.

      பெருங் காவல் - நன்மை தீமை காட்டி உதவுதல்.

     உயிர்க்கெலாம் - பின் வரும் சரிதத்தின் முதற்குறிப்பு.

     கண்ணும் ஆவியும் ஆம் பெருங்காவல் - தனது
கண்ணைக் காப்பது போலவும், தன் உயிரைக் காப்பது போலவும்,
பிற எல்லா உயிர்களையும் காத்தலே பெருங்காவல் என்பது. இது
புறக்காவல். கண் ஒளியும் ஆன்மபோதமும் கலந்து உயிர்களுக்குக்
காட்சி கொடுத்துக் காப்பது போல, வேந்தனும், நன்மை தீமைகளைக்
காட்டி உறுதி தந்து உதவினன் என்று உரைத்தலும் ஆம். இது
உட்காவல்; அகக்காவல். எனவே உள்ளும் புறம்பும் காவல்
செய்தனன் என்க. சூரியன், காட்டுகின்ற ஒலியும், கண் காணும்
ஒளியுமாம். கண் சடமாகிய ஒளியாதலால் அதனுடன்
அறிவொளியாகிய ஆன்ம போதமும் கலந்த பின்பே காட்சி நிகழும்.
எனவே, கதிரும் ஆன்மாவும் கூடிக் கண்ணைப் பார்க்கும்படி
செய்து நன்மை தீமைகளைக் காட்டுகின்றன. அதுபோல உலகத்திற்கு
உறுதிப் பொருள்களையும் காட்டிக் காவல் செய்தான் என்பது
கருத்து. வெங்கதிரோன் கண்ணுக்கு உதவுவதுபோல,
அவன் வழித்தோன்றினானாகிய இவ்வேந்தனும் உயிர்களுக்கு
உதவினான் என்பர், மேற்பாட்டிலே காட்டிய, கதிரோன்
வழித்தோன்றினான் கண்ணுமாவியுமாம் காவலன் - என்றார்.
இக்கருத்தையே பின்னரும் அனுவதித்து, முன்னே மனுநீதியினாலே
நன்மை தீமைகளைக் காட்டியதைச் சுட்டி, அவருடைய பெயரே தன்
பெயராயிற்று - என்று கூறுவதும் காண்க. உயிர்கட்கெலாம் பெருங்
காவலான் - (பேரரசன்), கண்ணும் ஆவியும் ஆம் (ஆவான்)
என்றுரைத்தலும் ஒன்று. “மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்“
என்ற புறப்பாட்டும் காண்க.

     விண்ணுளார் மகிழ்வெய்திட வேள்விகள்
-
வேள்விகளாலே நல்வாழ்வும், விண்ணவர்க்கு மகிழ்ச்சியும், அதனால்
மழையும், அதனால் மன்னுயிர்களுக்கு நல்வாழ்வும் ஆக
வேண்டுதலின், மண் காவலின் அடுத்து விண்வேள்வியை வைத்து,
மகிழ்வெய்திட என்றார். மேல் நின்று கீழே ஒளி பரப்பும் சூரியன்
போலே இம்மன்னர் கீழே நின்று மேலே மகிழ்ச்சி செய்தார்.


“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல்
                             வேந்தனு மோங்குக“

என்ற பிரமாணப்படி வேந்தன் ஓங்கவே புனல் விழுவதாம்; அது
வீழவே வானவர் வாழவுமாம் எனப் பெறப்படுதலும் காண்க. அரச
நீதியே மழைக்குக் காரணமாகும் என்பது திருக்குறள் முதலிய
எல்லாப் பெருநூற் பிரமாணங்களாலும் அறிக.

     வேள்விகள் - இவை சிவபெருமானை முன்னாகச் செய்யும்
யாகங்கள். “யாழின் மொழியாள் தனிப்பாகரைப் போற்றும் யாகம்“
(சோமாசிமாற
நாயனார் புராணம் - 2) முதலிய திருவாக்குக்கள்
காண்க. இவ்வரசர் ஆகமம் சொன்ன முறைமையால் நிபந்தம்
ஆராய்ந்தமை மேலே சொல்லப் பெறுதலும் காண்க.

     எண்ணிலாதன - எண்இலாதன - அளவில்லாத என்க.
எண் நிலாதன - ஒரு எண்ணுக்குள்ளே நிற்காதவை எனவுமாம்.
எண்
- எண்ணம்; அது தனக்கென்று ஒரு பயனை உட்கோளாகக்
கொண்டு எண்ணிச் செய்வது. இதனைக் காமேட்டி (புத்திர காமேட்டி
போல்வன) என்பர். இவ்வேந்தன் செய்த வேள்விகள் அவ்வாறு
ஒரு எண்ணம் பற்றிச் செய்யப்பெற்றன அல்ல என்பார் எண்
இலாதன என்றாருமாம்.  14