1002. மாதங்கமெ ருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா
ஏதங்கெட வெண்ணிய திண்மை யமைச்ச ரெல்லாம்
பாதங்களின் மீதுப ணிந்தெழுந் தார்க ளப்போ
தோதங்கிளர் வேலையை யொத்தொலி மிக்க
                                 தவ்வூர். 35

     (இ-ள்.) வெளிப்படை. தீமைகெடும்படி எண்ணிய
திண்மையுடைய அமைச்சர்கள் எல்லாரும், யானையினால் எடுத்துத்
தன் பிடரியில் வைத்துக் கொள்ளப்பட்டவராகியமூர்த்தியாரைக்கண்டு
அவர் பாதங்களின் மேல் பணிந்து எழுந்தார்கள்; அப்போது
அவ்வூர் நீர் நிறைந்த கடலைப்போல முழக்கம் மிக்கது.

     (வி-ரை.) மாதங்கம் (எருத்தினில்) வைத்தவர்-
யானையினால் வைக்கப்பட்டவர் என்க. மூன்றனுருபு தொக்கது.
வைத்தவர் - படுவிகுதி தொக்குவந்த செயப்பாட்டு
வினையாலணையும் பெயர்.

     மாதங்கம் - மாது அங்கம் மாதுடன் கூடிய அங்கமாகிய
திருக்கோலத்தை; எருத்தினில் - அதனுடன் கூடிய எருது -
இடபத்தினுடனே; வைத்தவர் - தம்மை - (அடித்தாமரையல்லது
வேறில்லாது) தம்மனத்தே பதியவைத்தவராகிய மூர்த்தியாரை
என்று ஓர் உட்குறிப்பாகிய பொருளும் படநிற்பது காண்க.

     ஏதம் கெட எண்ணிய திண்மை அமைச்சர் - ஏதம் -
உலகம் காக்கும் ஒரு மன்னவன் காவலின்றி உலகம் வாழ்வடையாது
(995) என்று கூறிய பொருள். திண்மை - மனத்திட்பம்,னைத்திட்பம்,
முதலாயின எல்லாம். திருக்குறள் முதலிய நீதி நூல்கள் பார்க்க.

     அமைச்சர் எல்லாம் - பணிந்து எழுந்தார்கள் - அரசு
ஒருவர் மேலதாயினவுடன் அரசாட்சியின் முதற் செய்கை அமைச்சர்
வந்து பணிவது என்பதாகும். வழி வழி அரசின்கீழ் உள்ள
ஆங்கிலேய நாடு முதலிய பிறநாடுகளிலும் இத்தகையதொரு
வழக்குண்மை அறியப்படும்.1

     அமைச்சர்கள் எல்லாம் என்றது ஊர்காவலில் வந்த
பலதுறைகளையும் மேற்கொண்டு செலுத்தும் அமைச்சர்கள்
எல்லோரும் என்றபடி. பல துறையாவன நீதித்துறை, ஊர்காவற்றுறை,
அரசிறைத்துறை முதலாயின. முன்னரும்"அமைச்சர்கள்" (994) என்றது
காண்க. இவர்களுள் ஒருவரே முதலமைச்சராய் நிகழ்வதும் முன்னாள்
வழக்கு. "முற்றுணர்ந்த அமைச்சரினு முதலமைச்சராய்நிகழ்வார்"
(வாதவூ - உப. வட. 7)என்ற திருவிளையாடற் புராணமும்,
சூரபதுமன், "அற்றயில் கேள்விசான்ற வமைச்சரை"க் கொணருவித்து
உசாவிய வரலாறும் கூறும்கந்தபுராணமும் இங்குக்கருதத்தக்கன.
115-ம் பிறவும் பார்க்க.

     ஊர் ஒலி மிக்கது - மகிழ்ச்சியின் மிகுதியினால் ஊரவர்
எல்லாம் பல இயங்கள் முழக்கியும் வாழ்த்துக்கள் கூறியும் மிக்க
ஒலி முழக்கினர் என்க.

     ஓதம் கிளர் வேலை - எப்போதும் நீர் நிறைந்து அலைகளோடு கிளர்வதனால் கடல் ஒலியால் மிகுவதாகும் என்பது.

     அவ்வூர் வேலையை ஒத்தது - வினைபற்றி வந்த உவமம்.
35


     1. விக்டோரியா இராணியார் முதலியோர் வழி வழி அரசு தம்
மேலதாகப் பெற்றவுடன் அமைச்சர் வந்து அரச இலச்சினை
முதலியவற்றைத் தந்து பணிந்தனர் என்று தேச சரித்திரங்களால்
அறியப்படும் செய்திகளும் பிறவும் காண்க.