1003. சங்கங்கண் முரன்றன தாரைகள்; பேரி யோடும்
எங்கெங்கு மியம்பின பல்லிய; மெல்லை யில்ல
அங்கங்கு மலிந்தன வாழ்த்தொலி; யம்பொற்
                                கொம்பின்
பங்கன்னரு ளாலுல காள்பவர் பாங்க ரெங்கும்.
36

      (இ-ள்.) அம்பொன் கொம்பின் ... எங்கும் - அழகிய
பொன்பூண்ட கொம்பு போன்றாராகிய அங்கயற்கண்ணி
யம்மையாரை ஒரு பாகத்திலுடைய சொக்கலிங்கப் பெருமானது
திருவருளினாலே உலகாள்பவராகிய மூர்த்தியாரது
பக்கமெங்கும்; சங்கங்கள் ... தாரைகள் - தாரைகளும் சங்கங்களும்
முரன்றன; பேரியோடும் ... இல்ல - பேரிகையுடனே அளவில்லாத
பலவகை இயங்கள் எவ்விடத்தும் இயம்பின; அங்கங்கும் ...
வாழ்த்தொலி - அங்கங்கேயும் வாழ்த்தொலிகள் மலிந்தன.

     (வி-ரை.) தாரைகள் சங்கங்கள் முரன்றன என்க. வாயின்
வைத்து ஊத, அக்காற்றினால் உளதாக்கும் ஒலியாதலின் முரன்றன
என்றார். முரலுதல் - காற்றின் உதவிகொண்டு ஒலிஉண்டாக்குதல்.
"சங்கு திரண்டு முரன்றெழுமோசை தழைப்பன" (திருவாசகம்) முதலிய
திருவாக்குக்கள் காண்க. பல இயங்களினின்றும் இவற்றை வேறு
பிரித்தோதியது, இவை மார்புக்காற்றின் உதவிகொண்டு வாயினால்
ஊதி உளதாக்கும் ஒலியுடைமையும், இவ்வாறூதுதல் ஒரு பொருள்
பற்றிய வாக்கியங்களைக் கொண்டிருப்பதும்பற்றி என்க. "தாரை,
அணைந்த மாமறை முதற்கலை யகிலமு மோதா துணர்ந்த முத்தமிழ்
விரகன்வந் தானென வூத" (223), "சங்கு தாரை யளவிறந்த
பல்லியங்கள் முழக்கி யாத்துப், பார்குலவு தனிக்காளஞ் சின்ன
மெல்லாம் பரசமய கோளரிவந் தானென் றூத" (904) என்ற
திருஞானசம்பந்தநாயனார் புராணங்காண்க. மூக்கினால் முரலுதலும்
வாயினால் ஊதுதலும் மார்புக்காற்றின் உதவி கொண்டேயாவன.
சங்கம் - மங்கல நிகழ்ச்சிகளிற் சங்கமூதுதல் மரபு. "விருப்போடு
வெண்சங்க மூதாவூரும்" என்பது திருத்தாண்டகம்.

     சங்கம் - கூட்டம் எனக் கொண்டு, பின்னர் "எல்லையில்லன"
என்றதற்கேற்பச், சங்கங்களாகத் தாரைகள் முரன்றன்றுரைத்தலுமாம்.
தாரை போன்றவை இரட்டையாக இணைத்து ஊதுவதும் மரபு.

     பேரியோடும் எல்லையில்லன பல்லியம் எங்கெங்கும்
இயம்பின
- இயங்களினுள், அளவாலும் ஓசையாலும்,
பெருமையுடைமைபற்றிப் பேரிகையைப் பெயராற் சுட்டிக் கூறி,
ஓடு
என்ற உருபையும் அதனுடன் சார்த்தி, ஏனையவற்றை யெல்லாம்
பல்லியம் எனப் பொதுவகையாற் கூறினார். இயம்பின- மங்கலச்
செய்தி ஊரவர் அறியச்சாற்றின. பேரிகை முதலியவற்றை
முழக்கிக்கொண்டு திருவிழா முதலியவற்றைச் சாற்றுதல் முன்னாள்
வழக்கு. சிலப்பதிகாரம் இந்திர விழவூரெடுத்த காதை வரலாறும்
பிறவும் பார்க்க. "ஆடியற் றுடியுஞ் சாற்றி யறைந் தபே ரோசை
கேட்டு" (திருஞா - புரா - 678), "நாதர் விரும் படியார்க
ணாளுநாளுநல்விருந்தா யுண்பதற்கு வருக வென்று, தீதில்பறை
நிகழ்வித்து" (மேற்படி 566), "பரம னடியா ரானார்க ளெல்லாமெய்தி யுண்கவென விரண்டுபொழுதும் பறைநிகழ்த்திச், சொல்லாற் சாற்றி"
(திருநா - புரா - 259) முதலாயினவும் இம்மரபை விளக்குவனகாண்க.
மங்கலச்செய்தியை என்ற செயப்படு பொருள் வருவிக்க. இவ்வாறன்றி
இயம்பின - சத்தித்தன என்றுரைத்தலுமாம். இயங்கள் இயம்புதல்
என்பதும் மரபு.

     பல்இயம் எல்லையில்லன - பல் - பல. இயங்கள் -
வாத்தியவகை. இதனால் பலவகை வாத்தியங்கள் குறிக்கப்பட்டன.
எல்லையில்லன
என்றது ஒவ்வோர் வகையினுள் அளவுபடாத
எண்ணிக்கை குறித்தது.

     அங்கங்கும் வாழ்த்து ஒலி மலிந்தன - இவை நகரமாந்தர்
தாந்தாமிருந்த அவ்வவிடத்திருந்தபடியே வாழ்த்துகின்ற ஒலி.மலிதல்
- நிறைதல்.

     அம்பொற்கொம்பு - மீனாட்சியம்மையார். உவமையாகுபெயர்.
கொம்பின் பங்கன் - உமைபாகன். சொக்கலிங்கப் பெருமான்.

     அருளால் உலகாள்பவர் - திருவருளால் உலகாளும்
இவ்வுரிமை பெற்று அருட்குறியாலே உலக ஆட்சியும் செய்பவர்.
இது 1006 - 1008-ல் கூறப்படுவது.

     முரன்றன என்றதனால் வாயொலியின்றிக் கருவிகளே இசைப்பனவும், இயம்பின என்றதனால் கருவியொலியும்வாயொலியும்
கலந்திசைப்பனவும் வாழ்த்தொலி மலிந்தன என்றதனால்
கருவிகளின்றி வாயொலி மட்டும் இசைப்பனவும் கூறப்பட்டது காண்க.

     முரன்றன தாரைகள் - இயம்பின பல்லியம் - மலிந்தன
வாழ்த்தொலி எனப் பயனிலைகளை முன்வைத்தோதினார்
ஓசையொலிகள் முன்னர்க் கேட்கப்பட, அதன்பின் அவற்றை
நிகழ்த்தும் கருவிவகைகள் நோக்கியபோதே காணப்படுதல் குறித்தற்
பொருட்டு.

     இப் பாட்டிற்கு முன்னுரையாசிரியர்கள் பேரியோடும் தாரைகள் சங்கங்கள் முரன்றன என்று கூட்டி உரைத்தனர். 36