1005. |
மன்னுந்திசை
வேதியின் மங்கல வாகு திக்கட்
டுன்னுஞ்சுடர் வன்னி வளர்த்துத் துதைந்த நூல்சூழ்,
பொன்னின்கல சங்கள்கு டங்கள்பூ ரித்த தூநீர்
உன்னுஞ்செயல் மந்திர யோகர் நிறுத்தி னார்கள். 38 |
1005.
(இ-ள்.) வெளிப்படை. பொருந்தி நிலைபெறும்
திசையில்இடப்பட்ட வேதிகையில் சிவமந்திரங்களாலாகியஆகுதிக்
குண்டத்தின்கண் சுடரிற் பொருந்திவரும் தீயை வளர்த்து, முப்புரி
நூலை நெருங்கச் சுற்றிய பொற்கலசங்களையும், குடங்களையும்
நிறைவித்த தூய்மையான கங்கை முதலிய தீர்த்தங்களைத்
தியானிக்கும் மந்திரம் வல்ல தேசிகர்கள் தாபித்தனர். 38
1005. (வி-ரை.)
மன்னும் திசைவேதியில் - மூர்த்தியார்
வீற்றிருந்த திசையில் அவர்க்கெதிரே அமைக்கப்பட்ட வேதிகையில்.
இது கிழக்குத்திசை என்பர்.
மங்கல
ஆகுதி - மங்கலம் செய்யும் ஆகுதி. சிவம் -
மங்களம், சிவபெருமானே எல்லா மங்கலங்களுக்கும் பிறப்பிடமும்
காரணரும் ஆவர். அன்றியும் எல்லா வேள்விகளுக்கும் முதல்வரும்
அவரேயாவர். ஆதலின் இங்குச் சிவவேள்விகள் குறிக்கப்பட்டன.
"வேணி, நாத னாரைமுன் னாகவே புரியுநல் வேள்வி, தீது நீங்க நீர்
செய்யவும் திருக்கழு மலத்து, வேத வேதிய ரனைவரும் செய்யவும்"
(திருஞான - புரா - 429) என்ற கருத்தை நோக்குக.
ஆகுதி - இங்கு ஆகுதி செய்தற்குரிய இடம் - யாககுண்டம்
- குறித்தது.
சுடர்துன்னும்
வன்னி வளர்த்து - சுடர் - இங்குச்சூடுடைய
ஒளிப்பொருள்களுள் மிக்க ஞாயிறு குறித்தது. யாகஞ்
செய்கின்றவர்கள் ஞாயிற்றின் கதிரைச் சூரிய காந்தத்தினால்எடுத்து
அதனை வளர்த்து யாகம் தொடங்கும் ஆகமவிதி குறித்தது. சுடரிலே
பொருந்திய வன்னியினைக் கொண்டு வளர்த்து என்க.
துதைந்த
நூல்சூழ் - என்பதனைக் குடங்களுடனும் கூட்டுக.
கலசங்களைத் தாபித்தலில், மேலே சுற்றிய நூல் அதன் ஏழு
தாதுக்களில் ஒன்றாகக் கருதப்படும். நூல் சுற்றாது கலசம்தாபித்தல்
விதியன்று. துதைதல் - விதித்த அளவுப்படி
நூலினை நெருங்கச்
சுற்றுதல். நூல் - மூன்றிழைகளாகச் சேர்த்த நூல்.
பொன்னின்
கலசங்கள் - வேதிகையின் நடுவில்
தாபிக்கப்பட்ட இவை முதன்மை கொண்ட சிவ சத்தி கலசங்கள்.
குடங்கள் - மட்குடங்களுமாம். இவை முறையே
பிரதான கலசங்கள்
எனவும், பரிவார கலசங்கள் எனவும்படும். இவற்றில் அவ்வத்
தெய்வங்களை உரிய மந்திரங்களாற்றாபித்துப் பூசித்தும் ஓமித்தும், பின்னர், இவற்றின்
நீரினால் அரசரரை நீராட்டுவித்தல் மரபு.
பூரித்தல்
- நிறைவித்தல். தூநீர் - தூய்மை -
நீரின் தூய்மையாலும் அதனுள் இடும் புற்றுமண், கடல்மண், மலையடிமண், மணிகள் முதலிய
தூய பொருள்களாலும், மந்திரபாவனையாலும்
ஆகும் என்க.
உன்னும்
செயல் - தியானம் - பாவனை என்பர். மந்திரம்
- அப்பாவனைக்குரிய மந்திரம். யோகர் -
கூட்டுகின்றவர்கள்.
உன்னுதல் - மனத்தினாலும், செயல்
- காயத்தினாலும், மந்திரம் -
வாக்கினாலும் செய்யப்படுவன, யோகர் -
இவ்வாறு மனம் வாக்குக்
காயம் என்ற மூன்றானும் குறித்த பொருள் விதிப்படி கூடும்படி
செய்யவல்ல ஞானதேசிகர்கள்.
நிறுத்துதல்
- தாபித்தல். இவை சைவாகமங்களுள்
விதிக்கப்பட்ட சடங்குகள்.
யோகில்
நிறுத்தினார்கள் - என்பதும் பாடம். 38
|