1006. வந்துற்றெழு மங்கல மாந்தர்க டம்மை நோக்கிச்
சிந்தைச்சிவ மேதெளி யுந்திரு மூர்த்தி யார்தாம்
"முந்தைச்செய லாமமண் போய்முதற் சைவ மோங்கில்
இந்தப்புவி தாங்கியிவ் வின்னர சாள்வ" னென்றார்.
39

     (இ-ள்.) வெளிப்படை. தமது சிந்தையிற் சிவபெருமானையே
வைத்துத் தெளிவு பெற்றிருக்கும் மூர்த்தியாரும், தம்மிடம் வந்து
வணங்கி எழும் மங்கலச் செயலில்வல்ல அந்த மக்களைப் பார்த்து
"முன் செயலாகிய சமணம்போய், முழு முதற் சைவம் ஓங்குவதனால்
இந்த உலகந் தாங்கி இனிய அரசாட்சியைச் செய்வேன்" என்றார்.

     (வி-ரை.) வந்து உற்று எழும் மங்கல மாந்தர் -முடிசூட்டும் மங்கலவினை செய்வோரும், மந்திரிகள்முதலாயினோரும். இவர்களை
மேல் வரும் பாட்டில் விரித்துக் கூறுவர்.

     சிந்தைச் சிவமே தெளியும் - சிந்தையிற் சிவமே
பொருளெனத் தெளிந்த. சிவமே தெளியும் சிந்தை எனக் கூட்டி
உரைத்தலுமாம். சிவமே - ஏகாரம் பிரிநிலை. "அடித்தாமரை யல்ல
தில்லார்" (976) என்றது காண்க. அவ்வாறு தெளிந்தாராதலின்
சமண போய் சைவமோங்கில் அரசாள்வன் என்றார் என்பது குறிப்பு.
அதற்காக அல்லாவிடின் அரசாட்சியினைப் பொருளாக மதியார்
என்பதாம். எந்தம் பெருமக்களாகிய நாயன்மார் திருக்கூட்டத்தில்
துறவு நிலையின் (ஆச்சிரமத்தின்) உள்ளாரிருவருள் மூர்த்தியார்
ஒருவர் என்பது ஈண்டு நினைவு கூர்தற்பாலது. "ஏலங்கமழ்
கோதையர் தந்திரம் என்று நீங்கும், சீலங்கொடு" (1014) என்பது
காண்க. அரசருக்குரிய மணிமுடி, பொன்கலன், பொன்னாடை,
முதலியனவும் நீத்தவர் என்பது "செழுங்கலன்கள் ஐயன்னடை
யாளமு மாக" (1008) என்றதனால் அறிக. ஆதலின் இவ்வாறு
உலகுதுறந்த மனநிலை கொண்ட தவராசராகிய மூர்த்தியார் தாம்
புவிராசராக இருக்க உடன்படுவதற்குக் காரணங்கூறினார்.

     வழிவழி வந்த முடிமன்னரா யரசுபூண்ட ஐயடிகள்
காடவர்கோன் நாயனார் தமக்குரிமையிற்போந்த "அரசாட்சி,
யின்னலென விகழ்ந்ததனை யெழிற்குமரன் மேலிழிச்சித்"
திருத்தொண்டு செய்யத் தலங்கள் தோறும் செல்வாராயின்,இங்குத்
தமக்கு வழிவழி உரிமையின் வாராத அரசாட்சியினை மூர்த்தியார்
ஏற்றதென்னையோ? என்பார்க்கு அதற்குச் சைவஆக்கத்தின்
வைத்த ஆர்வமே காரணம் என்று காட்டியபடியாம். அன்றியும்,
அரசாட்சியினிற் பற்றுவையாது அதனைத் திருத்தொண்டினுக்குக்
கீழ்ப்படுத்தித் தொண்டின் பொருட்டேயாக வைத்ததுமன்றித்,
திருத்தொண்டினையும் விடாது பற்றிவந்தனர். அது, மேல்வரும்
பாட்டானும், 1013, 1014, 1015 திருப்பாட்டுக்களானும் அறியப்படும்..

     முந்தைச் செயலாம் அமண் - முதற்சைவம் - முந்தை -
சில காலத்தின் முன் வந்த என்ற பொருளில்வந்தது. செயலாம்
- இது முற்றறிவுடைய இறைவனால் அருளப்படாது, சிற்றறிவுடைய
மனிதராற் செய்யப்பட்டதாம் என்பது. "விரிவிலா வறிவினார்கள்
வேறொரு சமயஞ் செய்தே, யெரிவினாற் சொன்னா ரேனும்" என்ற
அப்பர்சுவாமிகள் திருவாக்குக் காண்க. இது கருதியே முதற்சைவம்
என்றார். முதல்வனா லருளப்பட்ட முதன்மைபெற்ற சமயம் என்க.
முதலில் வைத்தெண்ணப்படும் என்றகுறிப்புமாம். "சைவ முதலா
மளவில் சமயம்" என்ற தாயுமானார் திருவாக்கும் சிந்திக்க.
ஏனையவற்றை அங்கமாகக்கொண்டு முதலாக விளங்கும்
என்றலுமாம்.

     இந்தப்புவி - உண்மை ஞானமுடையார் விரும்பாத -
வெறுக்கத்தக்க - இந்தப் புவியாட்சி.

     இன் அரசு - இனிய அரசு. "வாய்மை வேதநன்மைத்திரு
நீற்றுயர் நன்னெறி தாங்கு மேன்மை தன்மைத்" (985) என்றதனை
இன்அரசு என்றார். 39