1007. அவ்வாறுமொ ழிந்தது கேட்ட வமைச்ச ரோடு
மெய்வாழ்தரு நூலறி வின்மிகு மாந்தர் தாமும்
"எவ்வாறருள் செய்தனை மற்றவை யன்றி யாவர்
செய்வார்? பெரி யோ!" யெனச் சேவடி தாழ்ந்து
                                 செப்ப,
40

     1007. (இ-ள்.) வெளிப்படை. மூர்த்தியார் அவ்வாறு அருள்
செய்ததனைக் கேட்ட அமைச்சர்களோடு உண்மை நூலறிவின்
மிக்கோர்களும் "பெரியோய்! நீ எவ்வாறு அருளிச்செய்தனையோ
அவ்வாறன்றி வேறு செய்வார் யாவர்?" என்று அவரது
திருவடிகளில் வீழ்ந்து சொல்ல, 40

     1007. (வி-ரை.) மெய்வாழ் தருநூல் - அறிவனூல்களாகிய
வேதங்களும் சிவாகமங்களும். இவற்றின் பொருள்கள் என்றும்மாறாது
உண்மையாக விளங்குவன என்பது. மெய்வாழ்வைத்தரும்நூல்
என்றுரைப்பினுமாம். இவையும் இவற்றைச் சார்ந்தவையுமல்லாத ஏனை
நூல்கள் மெய்வாழ்வைத் தராது பொய்ம்மையே பெருக்கிப்
பொழுதினைச் சுருக்குவன என்பதும் போதரும்.

     அமைச்சர் - உலக நூல்மதி வல்லோர்; மெய்......நூலறிவின்
மிகுமாந்தர்
- அறிவனூல் வல்லோர்; எனவே இகம் பரம் என்ற
இரண்டின் வல்லவர்களும் கூடி என்றபடியாம்.

     நீ எவ்வாறு அருளினையோ அதுவன்றி மற்றுச்செய்வார்
யாவர்? என்க. யாவர்
என்றவினா ஒருவருமிலர் என எதிர்மறை
குறித்தது. யாங்கள் மட்டுமேயன்றி இந் நாட்டில் வேறு எவரும்இலர்
என்பது. மற்று - அதுவன்றிப்பிற.

     பெரியோய்! - செய்தற்கரிய செயல் செய்தவரே!

     சேவடி தாழ்ந்து செப்ப - அரசரது முன்னிலையில்
அறிவிக்கும் மரபு.

     கேட்ட - அமைச்சரோடு - மாந்தர் தாமும் - செப்ப -
(மூர்த்தியார்) என்றார் என இந்த இரண்டு பாட்டுக்களையும் கூட்டி
முடித்துக்கொள்க. 40