1008. வையம்முறை செய்குவ னாகில், வயங்கு நீறே
செய்யும்மபி டேகமு மாகச், செழுங்க லன்கள்
ஐயன்னடை யாளமு மாக, வணிந்து தாங்கும்
மொய்புன்சடை மாமுடி யேமுடி யாவ" தென்றார் 41

     1008. (இ-ள்.) வெளிப்படை. மூர்த்தியார், "உலகத்தை நான்
அரசுசெய்வேனாகில், சிவபெருமானது திருமேனியில் விளங்கும்
திருநீறே எனக்குச் செய்யும் மகுடாபிடேகமாகவும், ஐயன்
அடையாளமாகிய உருத்திராக்கமே பூணும் செழுங்கலன்களாகவும்,
இறைவனது திருவடையாளமாகிய மொய்த்த புன்சடையே
அரசமுடி
யாகவும் இருக்கத்தக்கன" என்றார். 41
   

     1008. (வி-ரை.) வையம் முறை செய்தல் - அரசுசெலுத்துதல். உலக மக்களை நீதிநூல் விதித்தபடி அவ்வவர்க்கேற்ற நிலையில்
நிறுத்துதல். இது அரசர்களது முதற் கடமையாம். "தத்தநெறிகளிற்
சரித்து வாழும்" (996) என்பது பார்க்க. கழறிற் றறிவார் நாயனார்
புராணத்திலும், திருநகரச் சிறப்பிலும் கூறிய அரச நீதி முறைகளும்
காண்க.

     வயங்குநீறு - இறைவன் அணிந்த திருநீறு - "சிவன்றிர
டோண்மேல் நீறு நின்றது கண்டனை", "பூசுவதும் வெண்ணீறு"
(திருவாசகம்) முதலிய திருவாக்குக்கள் காண்க.

     வயங்கு - பிறவினையாகக் கொண்டு, வயங்குவிக்கும்-
விளக்கம் செய்யும் - திருநீறுஎன்றலுமாம். "பேணி யணிபவர்க்
கெல்லாம் பெருமை கொடுப்பதுநீறு" (காந்தாரம் - திருநீற்றுப்பதிகம்-
4) என்றது ஆளுடையபிள்ளையார் தேவாரம். விளங்குகின்ற நீறு
என்றுரைத்தலுமாம். "நீற்றொளி கண்டோர் கண்கோடனிறைந்தாராக்
கவின்கொள்ள" (941), "புண்ணிய நுதற்புனித நீறு பொலிவெய்த (175)
முதலியவை காண்க.

     நீறே அபிடேகமும் ஆக - அபிடேகம் - நீராட்டு.
முடிசூட்டுவதற்காகப் புண்ணியநீரை ஆட்டுவித்தல் மரபு. செய்யும்
- (முடிசூட்டுதலின் பொருட்டுச்) செய்யப்படும். படுவிகுதி தொக்கது.
இங்கும் நீராட்டும் பொருட்டு மந்திரயோகர்கள் பொன்னின்
கலசங்கள்குடங்கள் பூரித்த தூநீர் அமைத்துவைத்தனராதலின் (1005),
மூர்த்தியார், அத்தூநீருக்கு மேலாய்த் தாம் அபிடேகமாகக் கருதியது
திருநீற்றுப் பூச்சேயாகும் என்பதாம். நீறே - முடியே - ஏகாரங்கள்
பிரிநிலை.

     நீற்றின் முழுகுதலாவது நீற்றினை நிறையப்பூசுதல்.
நீரிற்குளித்ததற்குமேல் தூய்மை செய்வதனால் இதனை (பஸ்மஸ்நானம் - ஆக்னேய ஸ்நானம்) நீற்றிற் குளித்தல், நெருப்பிற் குளித்தல்
என்று விதந்து பேசுதல் சைவ மரபு. இதுபற்றி நீரினுட் குளித்தபின்
நீற்றினுட் குளிக்க என்பர். "புலரி எழுந்து புனன்மூழ்கிப்புனித
வெண்ணீற் றினுமூழ்கி" (கழறிற் - புரா - 8) என்றது காண்க.
அபிடேகமும்
- உம்மை எண்ணும்மை.

     ஐயன் அடையாளம் செழுங்கலன்களும் ஆக என
மாற்றிக்கூட்டுக. ஐயன் அடையாளம் - உருத்திராக்கக் கண்டிகை.
பின்னர் இதனை "உயர்கண்டிகை" (1013) என்பது காண்க.
உருத்திரனது கண்ணின் கருணைக் கண்ணீரினின்றும் வந்தது
என்பது வரலாறாதலின் உருத்திர அக்கம் - கண்மணி என்றும்
கூறுப. ஒரு பெண் தாலியணிதல் ஒரு நாயகனுக்கு
வாழ்க்கைப்பட்டதற்குரிய அடையாளமாதல்போல, ஓர் உயிர் தனது
(ஆன்ம) நாயகனாகிய சிவனுக்கு உரிமைப்பட்டதற்கு உருத்திராக்கம்
பூணுதல் அடையாளமாம் என்க. உருத்திராக்கமணியாத மக்கள்,
நாயகனை யடையாத மகளிரை ஒப்பர் என்பதும் ஆம். அவர்களைக்
காண்பதற்கும் அரன் கூசுவர் என்பது "பூண்பதற்குக் கண்டியினைக்
கூசியிடும் புல்லியரைக், காண்பதற்குக் கூசுமரன் கத்து" என்ற
திருவாக்கா லறியப்படும்.

     "நீறே அபிடேகமுமாக, அடையாளமே கலன்களுமாக,அணிந்து
சடைமுடியே முடியாவது" என்றார் என முடிக்க.

     தாங்கும் மொய்புள் சடை மாமுடியே - தாங்குதல் -
சடையின் பாரத்தைப் பொறுத்துத் தாங்குதல். சடாபாரம் என்றுகூறும்
மரபும் காண்க. மொய் - நெருங்கிய. புன் என்றது குறிய அளவு
குறித்தது. மாச்சடைமுடியே என்க. பெருமை தங்கிய சடைமுடி.
சடை - சிவபெருமானுக்குரிய சிறப்பு அடையாளம். மாமுடி - இதன்
பெருமை குறித்தது. "சடைமுடி சாட்டியக் குடியார்க்கு" என்ற
கருவூர்த்தேவர் திருவிசைப்பாவில் உரைத்தவை காண்க. புகழ்ச்சோழநாயனார் புராணம் பார்க்க.

     முடியே முடியாவது - அரசர் தாங்கும் மணிமுடி - கிரீடம்
ஆவது.

     உலகமெல்லாங் காக்கும் தமது இறைவனார் தாங்கியஇறைமைத்
திருவடையாளங்களையே, அவரது தாள்பிடித்து அரசுபூண்ட
மூர்த்தியாரும் தமது உலக அரச ஆட்சியின் அடையாளங்களாகக்
கொண்டனர். மாமுடியே முடியாவதென்றவதனால் மூர்த்தியார்
முன்னரே சடைவளர்த்த பெருங்கோல முனிவராக விளங்கினார்
என்பது கருதப்படும்.

     இங்குக் குறித்த நீறு - கண்டிகை - சடை என்றமூன்றினையும்
சிவசாதனங்கள் என்பர். முன்னர் இவற்றைப் பூண்டு சிவனது
பேரடியராக விளங்கியமூர்த்தியார், உலகம் ஆளும் பேரரசராக
விளங்கும் அக்காலத்தும் மாறுதலின்றி இவற்றையே அதற்கும்
சாதனமாகக் கொண்ட அடிமைத்திறம் கருதுக. "கேடு மாக்கமும்
கெட்ட திருவினார், ஓடும் செம்பொனு மொக்கவே நோக்குவார்"
(143),
"அகில காரணர் தாள்பணி வார்கடாம், அகில லோகமு மாளற்
குரியர்" (139) என்ற கருத்துக்களை இங்கு வைத்துக் காண்க.

     1006-ல் "அமண்போய் முதற்சைவ மோங்கில்" என்றது
மூர்த்தியார் மேற்கொள்ளும் அரசாட்சியின் குறிக்கோள் (இலட்சியம்)
என்றும், இப்பாட்டிற் கூறியவை அதன் அடையாளங்களாகிய
சடங்குகளும் அரச சின்னங்களும்ஆம் எனவும் கொள்க. ஆதலின்
இவைதம்முள் மாறுபாடின்மை அறிக. 41