1009. என்றிவ்வுரை கேட்டலு மெல்லையில் கல்வி யோரும்
வன்றிண்மதி நூல்வளர் வாய்மை யமைச்சர் தாமும்
"நன்றிங்கரு டா"னென, நற்றவ வேந்தர் சிந்தை
ஒன்றும்மர சாளுரி மைச்செய லான வுய்த்தார்.
42

     (இ-ள்.) வெளிப்படை. என்று (கூறிய) இந்த
உரையினைக்கேட்டு, அளவில்லாத கல்வியுடையோர்களும், வலிய
திண்ணிய மதியையும்நூலறிவையும் வளர் வாய்மையையும் உடைய
அமைச்சர்களும் "இங்கு அருளிய செய்தி நன்றுதான்" என்று
கொண்டு, நல்ல தவவேந்தரது சிந்தையிற் பொருந்தும் அரசாள்வதற்கு உரிமைச் செயலாகிய சடங்குகளை யெல்லாம் செய்தளித்தனர்.

     (வி-ரை.) எல்லையில் கல்வியோர் - வேதாகமங்களில்
வல்லவர். "மெய்வாழ்தரு நூலறிவின் மிகுமாந்தர்" (1007) என்ற
அவர்.

     வன் திண் மதிநூல் வளர் வாய்மை அமைச்சர் - மதி
அமைச்சர், நூல் அமைச்சர், வளர் வாய்மை அமைச்சர் என்று
தனித்தனி கூட்டுக. கூரிய மதியுடைமையும், நூலறிவுடைமையும்,
உலகத்தைச் சோர்வுறாது வளர்த்தற்குரிய வாய்மையுடைமையும்
நல்அமைச்சர்க்கு இன்றியமையாதனவாம் என்ப.

     வன் திண் மதி - மதிக்கு வன்மையாவது எதுவரினும்
கலங்காமை. மதியின் திண்மையாவது எண்ணியவற்றைஎண்ணியபடி
முடிக்கும் உறுதிப்பாடு. நூல் - நூலறிவு. ஆகுபெயர். வளர் -
வளர்க்கும் பிறவினை. உலகத்தைச் சோர்வுறாது காத்து வளர்க்கும்.
உலகத்தை என்பது வருவிக்க. வாய்மை - எஞ்ஞான்றும்
உண்மையினையே எடுத்துரைக்கும் திறம். "தம்முயிர்க் குறுதி
யெண்ணார் தலை மகன் வெகுண்டபோதும், வெம்மையைத் தாங்கி
நீதி விடாதுநின் றுரைக்கும் வீரர்" என்பது முதலியனவாகக் கம்பர்
இத்தன்மைகளை எடுத்துப் பாராட்டுதலை இங்கு நினைவு கூர்க.
"மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம், யாவுள முன்னிற் பவை"
என்ற திருக்குறளும் காண்க. ஆசிரியர் தாமும் ஒரு பேரமைச்சராயினமையும், இவ்விலக்கணங்களுக்குத் தாமே
சிறந்ததோர் இலக்கியமாய் விளங்கியமையும் இங்குக் கருதுக. அது
காரணமாகவே இப்புராணம் பாடியருள நேர்ந்ததும் குறிப்பிற்
காணத்தக்கது.

     இங்கு அருள் நன்றுதான் - என்க. அருள் - மூர்த்தியார்
அருளிச் செய்த பொருள்கள். தான் - உறுதி குறிக்கும் அசை.
தேற்றேகாரம் தொக்கது. என - என்று சொல்லி என்று கருதி.

     நல் தவ வேந்தர் - நல்ல தவத்திற் பெரியோர் என்றும்,
நல்ல தவஞ் செய்தமையால் வேந்தராயினோர் என்றும், ஒருங்கே
நல்ல தவராயும் வேந்தராயும் அமைந்தோர் என்றும் உரைக்க
நின்றது. நல்ல தவம் - சிவபெருமான் திருத்தொண்டு.

     சிந்தை ஒன்றும் - மனதுக்கு இசைந்த - உகந்த.

     அரசுஆள் உரிமைச் செயல் - அரசமுடி சூடுதற்கு உரிய
சடங்குகள். செயல் ஆன உய்த்தார் - செயல்களை எல்லாம்
மூர்த்தியார் கருத்திற்குப் பொருந்தும் வண்ணமே செய்தனர். 42