1010. |
மாடெங்குநெ
ருங்கிய மங்கல வோசை மல்கச்
சூடுஞ்சடை மௌலி யணிந்தவர் தொல்லை யேனந்
தேடுங்கழ லார்திரு வாலவாய் சென்று தாழ்ந்து
நீடுங்களிற் றின்மிசை நீண்மறு கூடு போந்தார்.
43 |
1010. (இ-ள்.)
வெளிப்படை. பக்கங்களில் எங்கும் கூட்டமாக
நெருங்கிய மங்கல ஓசைகள் நிறையச், சூடுகின்ற முடியாகச்
சடையினையே யணிந்து வேந்தராய் விளங்கிய மூர்த்தியார், பண்டு
பன்றி வடிவெடுத்த விட்டுணுவானவர் தேடும் திருவடிகளையுடைய
சொக்கலிங்கப் பெருமானது திருவாலவாய்க் கோயிலிற்சென்று
வணங்கிப், பின்னர், நீடும் யானையின்மேல் ஏறி நீளும் வீதி
வழியே அரச உலாப்போந்தனராகி, 43
1010. (வி-ரை.)
நெருங்கிய மங்கல ஓசை மல்க-
பலவகையாகத் தொக்க மங்கல வாத்தியங்களும், மக்களின்
பலவகை வாழ்த்தொலிகளும் நிறைய, வகையாலும் தொகையாலும்
நிறைவு குறிக்க நெருங்கிய - என்றும், மல்க
என்றும், கூறினார்.
1003 பார்க்க. அத்திருப்பாட்டிற் கூறியவை அரசனின்றிக் கிடந்த
நாடு அரசரைப்பெற்ற களிப்பினாலாகிய முதல்நிகழ்ச்சி இங்கு
மல்கிய ஓசைகள் அவ்வரசர் விதிப்படி முடிசூட்டிக் கொண்டது
கண்ட களிப்பினாலாகிய பின் நிகழ்ச்சி. முன்னர் விரிவாகக்
கூறினாராதலின் இங்குச் சுருக்கிக் கூறினார்.
சடை
சூடும் மௌலி அணிந்தவர் என்க. "சடைமாமுடியே
முடியாவது" (1008) என்றது காண்க. இதனால் அவர்
முடிசூட்டிக்கொண்ட சிறப்பியல்பு கூறப்பட்டது. அவ்வாறு சிறக்க
முடி சூடியவர்.
திருவாலவாய்
சென்று தாழ்ந்து - சொக்கேசரது
திருக்கோயிலுக்குச் சென்று அவரை வணங்கி. அரசமுடி
சூட்டிக்கொண்டவுடன் மூர்த்தியார் செய்த முதற் செயல் ஆலவாய்ப்
பெருமானிடம் சென்று வணங்கியதேயாகும். இது, முன்அப்பெருமான்
தமக்குச் செய்த பெருங்கருணைத்திறன் பொருட்டும், இனித் தமது
அரசாட்சிக்குத் துணை நின்று செலுத்தியருள வேண்டுவதாகிய
திருவருளின் பொருட்டுமாம். சிறிது செல்வம் வரினும் அதின்மயங்கித்
தருக்கி அரனை மறந்து மறம்பல செய்யும் உலகர் இதனை
அறிந்துய்வது கடமை.
சென்று
தாழ்ந்து - களிற்றின் மிசைப் - போந்தார் -
என்றதனால் முடி சூடு மண்டபத்தினின்றும் திருவாலவாய்க்கு
வணங்கப்போகும்போது வாகனமின்றி நடந்து சென்றார் என்பதும்,
அவ்வணக்கம் முடிந்த பின்னரே களிற்றின்மேல் ஏறி நகர்வலமாக
வீதி போந்தார் என்பதும் உணரப்படும். சிவன்கோயிற்தரிசனத்துக்குச்
செல்லும்போது வாகனமூர்ந்து செல்லலாகாது என்பது விதி.
நீடும்
களிறு - முன்னர்க் கண்கட்டி விடப்பட்டபோது
திருவருள் வசமாகித் தம்மை எடுத்துப் பிடரியில் கொண்ட என்று
குறிக்க நீடு என்றார்.
நீள்
மறுகு - ஆலவாய்க்கடவுள் பல அருட்
டிருவிளையாடல்கள் செய்த அருளினால் நீளும் திருவீதிகள்.
இந்நாளிலும் அவை அவ்வருட்டிரு விளையாடல்களையே(ஆவணி
மூல வீதி முதலிய) தத்தம் பெயர்களால் நினைவூட்டி நிற்பதும்
கண்கூடு.
மௌலியணிந்தவர்
என்ற எழுவாய் வினைப்பெயர். 43
|